Published:Updated:

``அந்த சித்த மருத்துவரின் பெயர் பதியப்படவில்லை என்பது வருத்தம்!'' - `நலந்தானா' நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஆங்கிலேயர் காலத்திலிருந்து சித்த மருத்துவம், ஒடுக்கப்பட்ட மருத்துவமாகத்தான் இருந்துள்ளது.

டாக்டர் கு.சிவராமனின் ஆரோக்யா சித்த மருத்துவமனையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் `நலந்தானா' மருத்துவக் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது. விகடன் இணைந்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், அரங்கில் ஒரே மேடையில் ஆங்கில மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து கலந்துரையாடலைச் சிறப்பாக்கினர். நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் உரை, அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதன் சாரம் இங்கே.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
`கேள்விகளுக்கு விடை.. மருத்துவர்கள் உரை.. புத்தக வெளியீடு!’- 'நலந்தானா’ கருத்தரங்கு ஹைலைட்ஸ்

"சித்தமருத்துவ மரபை அனைவருக்கும் கொண்டு செல்லும் நவீன மொழியாக இருக்கும் சிவராமன், சித்த மருத்துவ மரபின் முகம். மரபுக்கும் பழைமைக்கும் மோதல் உள்ளது. பழைமைக்கும் மரபுக்கும் அடிப்படையில் வித்தியாசமுண்டு. பழைமை ஒரு தேங்கிய குட்டை. மக்கும். புதிய சிந்தனைக்கு இடம் தராது. மரபு மக்காது. புதிய சிந்தனையின் ஊற்றுக்கண்ணான அது, புதிய தலைமுறைக்கு உயிராற்றலைக் கடத்தும் தன்மை உடையது. அந்த உயிர் ஆற்றலைக் கடத்தும் பணியை சிவராமன் செய்து வருகிறார்.

நம் வேத இலக்கியம், சங்க இலக்கியங்களுள் சங்க இலக்கியம் இயற்கை பற்றி அதிகம் பேசுகிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கபிலர் 100 பூக்களின் பெயர்களைக் கூறியுள்ளார். இது உலகில் வேறு எங்கும் நடக்காத ஒன்று. தமிழகத்தில் கிடைக்கப்பட்ட ஏடுகளில் 80% சித்த மருத்துவம் சார்ந்தவை. இலக்கியத்திற்கு ஓர் உ.வே.சா கிடைத்ததுபோல சித்த மருத்துவத்திற்கு ஓர் உ.வே.சா கிடைக்கவில்லை என்பது வருத்தம். மக்கள் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தின் ஏடுகளைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஓர் ஆச்சர்யமான, வரலாற்றில் பதியப்பட்ட தகவலைச் சொல்கிறேன். இரண்டாம் சரபோஜி மன்னன் வாழ்ந்த காலகட்டத்தில், அவர் தஞ்சாவூரிலிருந்து காசி செல்ல விரும்பினார். மூவாயிரம் பேரை திரட்டிக்கொண்டு பயணிக்க ஆயத்தமானார். பயணத்திற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் தேவைப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த மருத்துவரான டான்டன், ரூபாய் 700 சம்பளத்திற்கு, 18 மருந்துப் பெட்டிகளுடன், ராஜாவின் குழுவோடு பயணித்தார். இவர்களுடன் ஒரு சித்த மருத்துவரும், 20 ரூபாய் சம்பளத்திற்குப் பயணித்தார். அவருக்கு நான்கு பெட்டிகள் மட்டுமே எடுத்து வர அனுமதி தரப்பட்டது.

பல மாதகாலப் பயணத்திற்குப் பிறகு காசியை அடைந்தது ராஜாவின் குழு. காசிக்குச் சென்று சேர்ந்தபோது, அங்கு பரவியிருந்த காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆங்கில மருத்துவர் டான்டன், பத்து நாள்களில் உயிரிழந்தார். பின்னர், குழுவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சித்த மருத்துவர் சிகிச்சையளித்து, அவர்களை பத்திரமாக தஞ்சாவூர் திரும்பச் செய்தார். ஆனால், அந்தச் சித்த மருத்துவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து சித்த மருத்துவம், ஒடுக்கப்பட்ட மருத்துவமாகத்தான் இருந்துள்ளது. இன்று வெகுஜன மக்களுக்கு சிவராமன் போன்றோரால் கொண்டு செல்லப்படுகிறது .

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
`நோயின்றி புத்துணர்வுடன் வாழ வழிவகை'- புத்தக வடிவில் 'இன்னா நாற்பது இனியவை நாற்பது'!

நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மருத்துவம் பற்றிய ஒரு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆயுர்வேதத்திற்குத் தனித்துறை, தனித்தலைமை என்றும், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு குழு என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஆபத்தானது; சித்தா, யுனானி போன்ற மருத்துவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதை எதிர்த்து அடுத்த கூட்டத்தொடரில் விவாதிப்போம். போராட்டம் நடத்துவோம். அனைத்து மருத்துவத்திற்கும் சம முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.

சீனாவின் மரபு மருத்துவத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. மரபில் நவீனம் புகுத்தப்படுகிறது. மருத்துவத்தில் இன்று அவர்கள் நோபல் பரிசு வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார்கள். புதிய நவீன ஆய்வு நோக்கி மரபு மருத்துவத்தை சீனாவால் கொண்டு செல்ல முடிகிறபோது, தமிழர்களாலும் முடியும். ஒரு மொழி பேசும் மக்கள் பின்பற்றும் மருத்துவம் என்பது சீன மருத்துவமும் தமிழ் சித்த மருத்துவமும்தான்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

நவீன மருத்துவத்தில், மருந்துகளில் உள்ள கனிமங்களின் மருத்துவத் தன்மையைத் தற்போது கூறுகின்றனர். நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதை அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நமக்குப் பெருமை. நவீன ஆய்வை நோக்கி சித்த மருத்துவத்தை சித்த மருத்துவர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!"

மருத்துவரிடம் என்ன செய்கிறது நமக்கு, என்பதை சொல்லத் தெரியாத நோயாளிகளாகத்தான் நாம் உள்ளோம்.இப்படித் தவிக்கும் நோயாளியின் நிலைமையைத் திருமணத்திற்குமுன் முடி வெட்டிக் கொள்வதற்கு செல்லும் மாப்பிள்ளை, முடிவெட்டுபவரைப் படுத்தும் பாட்டுடன் இணைத்துக் கூறியது சிரிப்பலையை அரங்கில் ஏற்படுத்தியது. மேலும் அவர் பேசுகையில் மருத்துவரை நண்பராக அடைவது போன்ற துயரம் எதுவும் இல்லை. மருத்துவ நண்பருடன் ஒரு ஹோட்டலில் நிம்மதியாகச் சாப்பிட முடியாது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

புரோட்டாவுக்கு நீ எதிரி, நாங்களும் எதிரியா? மனம், நாக்கு சுவையின் வழியாகத்தான் பல லட்சம் வருடங்களாகப் பயணித்து வருகின்றது. அறிவியல் வழியாக திடீரென்று பயணிக்கச் சொல்வது வன்முறையாக உள்ளது என்று நகைச்சுவையாக கூறினாலும் அதன் மூலம் உணவே மருந்து என்பதை உணரச் செய்தார். மேலும் இத்தகைய மருத்துவ நண்பர்கள் கிடைப்பது வரம்தான்!" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு