கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதையே அரசு முதன்மை வழிகாட்டுதலாக அறிவுறுத்திவருகிறது. பாமர மக்கள் முதல் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் முகக்கவசத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாள்களாக 3டி மாஸ்க் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மெல்லிய பிளாஸ்டிக் காகிதத்தால் எளிதில் கழற்றி மாட்டும் வகையில் இருக்கிறது இந்த 3டி மாஸ்க். இதன் பயன்பாடு மேலைநாடுகளைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரித்துவருகிறது.

சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயரான சுரேந்திரநாத் ரெட்டி, தமிழ்நாட்டில் முதல் நபராக 3டி மாஸ்க் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருகிறார். காவல்துறையினர் உட்பட பலருக்கும் தினமும் இலவசமாகவும் 3டி மாஸ்க் வழங்குகிறார். அவரிடம் பேசினோம். 3டி மாஸ்க் அவசியம், பயன்பாடு, பராமரிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.
“ ‘3Ding’ என்ற பெயர்ல 3டி பிரின்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை நடத்திட்டிருக்கேன். குறிப்பிட்ட சில பொருள்களை கம்யூட்டரில் டிசைன் செய்தால், அதை அந்த மெஷின் வாயிலாகவே உருவாக்க முடியும். ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறேன்.

தற்போதைய சூழலில் மாஸ்க்குக்கான தேவை அதிகம் இருக்கு. நார்மல் காட்டன் மாஸ்க்கைவிடவும், கொரோனா பாதிப்பு உடையவங்க மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் திறனுடைய மாஸ்க்தான் பாதுகாப்பானது. அந்த வகையில் 3டி மாஸ்க் கூடுதல் பாதுகாப்புத் திறனுடையதாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நார்மல் காட்டன் மாஸ்க் அணிந்து, அதன்மீதுதான் 3டி மாஸ்க் அணிவது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும். அதிகபட்சம் 24 மணிநேரத்துக்கு ஒரு 3டி மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
இத்தாலியில் கடந்த மார்ச் மாதத்துலயே அதிகளவில் 3டி மாஸ்க் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுச்சு. அப்போ என் நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்திட்டேன். கொரோனா பாதிப்பு அதிகரிச்சுட்டு வரும்நிலையில், கூடுதல் பாதுகாப்புத் திறனுடைய மாஸ்க்குக்கான தேவை நம்ம நாட்டிலும் அதிகளவில் இருப்பதை உணர்ந்தேன்.

உற்பத்தி நடக்காம சும்மா இருக்கிற என்னோட 3டி மெஷின்களிலேயே மாஸ்க் தயாரிச்சு விற்பனைசெய்ய ஆரம்பிச்சேன். கடந்த சில வருஷத்துல என்கிட்ட 3டி பிரின்டர் மெஷின் வாங்கிய வாடிக்கையாளர்களிடமும் 3டி மாஸ்க் தயாரிக்க ஆலோசனை கொடுத்தேன். 3டி பிரின்டர் மெஷின் வெச்சிருப்பவர்கள் வீட்டில் இருந்தே இந்த மாஸ்க்கைத் தயாரிக்கலாம்” என்பவர், 3டி மாஸ்க் பயன்படுத்தும் முறைகள் குறித்துப் பேசினார்.
“பரவலாகப் பலரும் பயன்படுத்துற காட்டன் மாஸ்க்கை 6 மணிநேரம் பயன்படுத்திட்டு அப்புறப்படுத்திடுவதுதான் சிறந்தது. அதுக்குமேல பயன்படுத்தினா, மாஸ்க் துணியில வைரஸைத் தடுக்கும் பணியைச் செய்ற ஸ்டாட்டிக் சார்ஜ் (static charge) திறன் குறையும். அதனால, கண்ணுக்குத் தெரியாத மைக்ரான் அளவிலான வைரஸ்கள் துணிக்குள் நுழைந்து நம்ம தோல் பகுதிக்குச் செல்ல வாய்ப்பிருக்கு. அதேசமயம் இந்த 3டி மாஸ்க் பயன்படுத்தும்போது வைரஸ் பிளாஸ்டிக் ஷீட்டைத் தாண்டி உள்ளே போகாது. ஒருவேளை எதிரில் பேசுபவர் மூலமா வைரஸ் வெளிப்பட்டாலும், அது 3டி மாஸ்க் ஷீட்டின் மேற்புறத்திலேயே தடுக்கப்படும்.
தயாரிப்பு போலவே, இந்த வகை மாஸ்க்கின் பயன்பாடும் எளிமையானதுதான். ஃப்ரேம், ஷீட் ரெண்டும் தனித்தனியா இருக்கும். இரண்டையும் எளிதாகக் கழற்றி மாட்டலாம். பிறர்கிட்ட உரையாடாத, மனிதர்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் இருப்பவங்க 3டி மாஸ்க்கை மட்டுமே பயன்படுத்தலாம்.
வேலை செய்ய முடியலைனு சும்மா இல்லாம, சூழ்நிலைக்கு ஏற்ப என்னோட மெஷின்ல 3டி மாஸ்க் தயாரிக்கிறேன். தொழில்நுட்பத்தால இந்த எளிமையான வேலைகூட மக்களின் பாதுகாப்புக்குப் பெரிய பங்களிப்பு செய்றதால அளவில்லா மகிழ்ச்சி.சுரேந்திரநாத்
மருத்துவப் பணியாளர்கள், வியாபாரிகள், கூட்டமான பகுதியில் இருப்பவங்க... நார்மல் காட்டன் மாஸ்க்கை மாட்டிகிட்டு அதுக்குமேல 3டி மாஸ்க்கைப் பயன்படுத்துறது ரொம்பவே பாதுகாப்பானது. பயன்பாடு முடிந்ததும் ஃப்ரேம்மை மட்டுமே தொட்டு மாஸ்க்கைக் கழற்றணும்.

வைரஸ் அல்லது கிருமிகள் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், எக்காரணம் கொண்டும் மாஸ்க் ஷீட்டின் முன்பக்கத்தைக் கையால் தொடாமல் இருப்பது நல்லது. அதிகபட்சம் 24 மணிநேரம்வரை இந்த 3டி மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்” என்கிறார். 3டி மாஸ்க் 50 - 100 ரூபாய் வரை கடைகளில் விற்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே வடிவத்தில்தான் 3டி மாஸ்க் விற்கப்படுகிறது. குழந்தைகளுக்குச் சிறிய வடிவத்தில் மாஸ்க் தேவைப்பட்டால் கடைகளில் ஆர்டர் கொடுத்தும் பெறலாம்.
இந்த வகை மாஸ்க்கைப் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசும் சுரேந்திரநாத், “3டி மாஸ்க்கின் பேப்பர் ஷீட்டானது வாட்டர் பாட்டில்கள் (pet bottle) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பெட் மெட்டீரியல் (polyethylene terephthalate) வகையைச் சேர்ந்தது. 175 மைக்ரான் அளவுள்ள இந்த ஷீட்டை ஸ்டேஷனரி கடைகளில் வாங்கி துளையிட்டு ஃப்ரேமில் பொருத்திக்கலாம். ஷீட்டின் மேலிருக்கும் ஃப்ரேம் பாலிபுரொப்பிலின் (polypropylene) வகை மெட்டீரியல். இரண்டையும் மறுபயன்பாடு (reuse) செய்ய முடியும்.
3டி மாஸ்க்கை மறுபயன்பாடு செய்யலாம். வைரஸ் மற்றும் கிருமிகள் ஒட்டியிருக்கக்கூடும் என்பதால், இந்த மாஸ்க் அணிந்திருப்பவர்கள் மாஸ்க் ஷீட்டின் முன்பக்கத்தைக் கையால் தொடக்கூடாது.
ஆஸ்பத்திரிகளில் மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் 3டி மாஸ்க்கைப் பயன்படுத்திட்டு அதை, அல்ட்ராவயலெட் ஸ்டெர்லைசேஷன் சேம்பரில் (UV Sterilization Chamber) வெச்சிருந்து க்ளீன் செய்துட்டு அடுத்தநாள் மீண்டும் அதே மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். பயன்பாடு முடிஞ்சதும் பொதுமக்கள் சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தி ஷீட் மற்றும் ஃப்ரேம் ரெண்டையுமே கழுவிட்டு அடுத்தநாள் பயன்படுத்தலாம்.

அதிகபட்சம் 15-20 நாள்களுக்கு இந்த மாஸ்கைப் பயன்படுத்தலாம். பிறகு மேற்புறத்திலுள்ள பிளாஸ்டிக் ஷீட்டை மட்டும் அப்புறப்படுத்திட்டு, புது ஷீட் வாங்கி பழைய ஃப்ரேம்லயே பயன்படுத்தலாம். ஷீட் மட்டும் கடைகளில் தனியாகவும் கிடைக்கும்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாஸ்க் விற்பனை செய்றேன். தவிர காவல்துறையினர், போக்குவரத்துக் காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள், காய்கறி வியாபாரிகளுக்குனு தினமும் நூறுக்கு அதிகமா இலவசமாகவே 3டி மாஸ்க் கொடுக்கிறேன்.
வேலை செய்ய முடியலைனு சும்மா இல்லாம, சூழ்நிலைக்கு ஏற்ப என்னோட மெஷின்ல 3டி மாஸ்க் தயாரிக்கிறேன். தொழில்நுட்பத்தால இந்த எளிமையான வேலைகூட மக்களின் பாதுகாப்புக்குப் பெரிய பங்களிப்பு செய்றதால அளவில்லா மகிழ்ச்சி” என்று நிறைவுடன் கூறுகிறார்.