Published:Updated:

Corona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை! ஆய்வாளர்கள் புதிய முயற்சி

corona
corona

மஸாச்சூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT)-ன் லிங்கன் (Lincoln) ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு, அறிகுறிகள் வெளிப்படாமல் இருந்தவர்களின் குரல்களைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர்.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், குரலில் ஏற்படும் மாறுபாட்டின் மூலம் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பைக் கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர் அறிவியலாளர்கள். பொதுவாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. கடந்த ஜூனில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி 40% - 45% மக்கள் அறிகுறிகள் அற்ற ஏசிம்ப்டமடிக் வகையினராகத்தான் இருக்கின்றனர். மேலும் இவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறியாமல் மற்றவர்களுக்கும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

Corona virus
Corona virus

இந்நிலையில், மஸாச்சூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT)-ன் லிங்கன் (Lincoln) ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு, அறிகுறிகள் வெளிப்படாமல் இருந்தவர்களின் குரல்களைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், குரல் சம்பந்தப்பட்ட உயிரியல் குறியீடுகளோ (vocal biomarkers), அளவிடக்கூடிய அறிகுறிகளோ அவர்களின் குரல்களில் தென்பட்டதைக் கண்டறிந்தார்கள். `இந்த அறிகுறிகள் குரல்வளைத் தசைகள் மற்றும் உச்சரிப்பு அமைப்புகளில் நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளால் வெளிப்பட்டவை' என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

``பரவிக்கொண்டிருக்கும் கொரோனா... வழக்கமான உடல்நலக் குறைபாடுகள்!" - மருத்துவமனைக்குச் செல்வது சரியா?

லிங்கன் ஆய்வகத்தின் மனித நல மற்றும் செயல்பாடு அமைப்பின் தலைமை உறுப்பினரான தாமஸ் கட்டய்ரி, நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின்ஸன் போன்ற நோய்களில், சிந்திப்பவற்றை வார்த்தைகளாக மாற்றும் மூளைத்திறனில் ஏற்படுகின்ற மாறுபாடுகளைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குரலை ஆய்வு செய்து வந்தார். அதில் கிடைத்த குறியீடுகள் போலவே, கோவிட்-19 நோய் பாதிப்பு ஆய்விலும் குறியீடுகள் தென்பட்டதைக் கண்டு அவரும் அவரது ஆய்வுக் குழுவினரும் வியந்தனர்.

ஒருவர் பேசும்போது, ஒலியை உண்டாக்கக்கூடிய காற்று குரல்வளை சார்ந்த திசுக்களைக் கடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் வீக்கமுற்ற திசுக்களை இவ்வாறு காற்று கடந்து வரும்போது குரலின் தன்மை மற்றும் தொனி மாற்றமடையும். இந்த மாற்றம்தான், ஆய்வின் முடிவில் குறியீடுகளாகப் பெறப்படுகின்றன.

corona and throat problem
corona and throat problem
பல் பிரச்னைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லலாமா? மருத்துவரின் வழிகாட்டல்

யூடியூபில் பிரபலங்கள் தங்களின் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு முன் கொடுத்த பேட்டி, பாதிப்பின்போது கொடுத்த பேட்டிகளிலிருந்து பெறப்பட்ட குரல் மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்த ஆய்வுகளில், குரல்வளையின் நுட்பமான இயக்கங்கள் நோயின் பாதிப்பால் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.

'இந்தக் குரல் தன்மை சார்ந்த ஆய்வுகள், தற்போது வழக்கத்தில் உள்ள சளி மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் ஆய்வுகளைவிட அதிகளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அறிகுறிகள் தென்படாதபட்சத்தில் இந்த வகையான ஆய்வுகள் கைகொடுக்கும்' எனக் கருதுகிறார்கள் ஆய்வாளர்கள். கோவிட்-19 வைரஸ் பாதிப்பைக் கண்டறிய, குரல் தன்மையை ஆராயும் மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு