
மாரடைப்பு, இதயச் செயலிழப்பு தொடர்பு என்ன..?
`நல்லாத்தான் படுத்தாரு, காலையில எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்துலயே உயிர் போயிடுச்சு’, `காலையில வாக்கிங் போனவருதான், அப்பிடியே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சரிஞ்சுட்டாரு...’ - திடீர் மரணம் சம்பவித்த இது போன்ற கதைகளை நாம் தொடர்ச்சியாகக் கேட்டுவருகிறோம். மாரடைப்பின் காரணமாக இதயம் செயலிழந்து போகும்போது, திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன.
“பெரும்பாலும், இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) காரணமாகவே இது போன்ற திடீர் மரணங்கள் நிகழ்கின்றன’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் மீனாக்ஷி, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு ஆகியவை பற்றி விளக்குகிறார்.

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
இதயத்திலுள்ள பல ரத்த நாளங்களின் வழியாகத்தான் இதயத்துக்கு ரத்தம் வருவதும், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் கடத்தப்படுவதுமாக இருக்கிறது. இந்த ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து அடைத்துவிடுவதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லாது. இதனால் கடுமையான நெஞ்சுவலி ஏற்படும். இதைத்தான் `மாரடைப்பு’ (Heart Attack) என்கிறோம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை தரப்பட்டுவிட்டால், உயிரைக் காப்பாற்றிவிடலாம்.
இதயச் செயலிழப்பு என்றால் என்ன?
மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நுரையீரல் உள்ளிட்ட மற்ற உறுப்புகளுக்கு இதயத்திலிருந்து ரத்தம் கடத்தப்படாமல் போகும். மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் நின்றுபோய், இதயமும் செயலிழந்துவிடும். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடனேயே இதயச் செயலிழப்பு ஏற்படும். அப்போது சம்பந்தப்பட்டவர் சுயநினைவை இழப்பார். உடனடி முதலுதவி கிடைக்கவில்லையெனில், ரத்த ஓட்டம் முற்றிலும் தடைப்பட்டு சில நிமிடங்களில் மரணம் நிகழும்.

மாரடைப்பு, இதயச் செயலிழப்பு தொடர்பு என்ன?
சிலருக்கு மாரடைப்பைத் தொடர்ந்து இதயச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். மாரடைப்பு ஏற்படுவது என்பது, இதயச் செயலிழப்புக்கான ரிஸ்க்கை அதிகமாக்குகிறது. பெரும்பாலான மாரடைப்புகள், இதயச் செயலிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இதயச் செயலிழப்பு ஏற்பட மாரடைப்பு பொதுவான காரணமாக இருக்கிறது. இதயநோய் தொடர்பான மற்ற நிலைகளாலும் இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.
மாரடைப்பை எப்படிக் கண்டறிவது?
நெஞ்சுப்பகுதியில் இதுவரை அனுபவித்திராத அதீத வலி இருக்கும். சிலர் மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சுவலியை `அசிடிட்டி’ என்று நினைப்பார்கள். இந்த அலட்சியத்தால், இரண்டு, மூன்று நாள்கள் கழித்து நெஞ்சுவலி தீவிரமான நிலையில் மருத்துவமனைக்கு வருவதற்குள், அடைப்பின் காரணமாக உடலின் பல பகுதிகள் செயலிழந்துபோயிருக்கும். எனவே, நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தக் கூடாது.

சிகிச்சை
மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு, அதன் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) சிகிச்சை முறை மூலம் ஸ்டென்ட் (Stent) வைக்கப்படும். ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்ட ரத்தக்குழாயில், ஸ்பிரிங் போன்று இருக்கும் ஸ்டென்ட் வைப்பதன் மூலம் அது விரிந்து, ரத்த ஓட்டம் சீராகும்.
இதயச் செயலிழப்பு ஏற்பட்டு காப்பாற்றப் பட்டவர்களுக்கு இதயச் செயல்பாட்டில் பிரச்னை இருக்குமென்றால், அவர்களுக்கு `Implantable Cardioverter Defibrillator (ICD)’ என்கிற பேஸ்மேக்கர் பொருத்துவோம். இந்தக் கருவி மாரடைப்பிலிருந்து தடுக்காது.
இதயச் செயலிழப்புக்கு ஆளாக நேரிடுகையில், வெளியிலிருந்து மின்சாரம் கொடுப்பதைப்போல் அந்தக் கருவி உள்ளேயிருந்து கொடுப்பதன் மூலம் இதயச் செயலிழப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளும். 90 சதவிகித இதயச் செயலிழப்புகள் மாரடைப்பின் வழியே ஏற்படுகின்றன. 10 சதவிகித இதயச் செயலிழப்புகள் திசுக்கள் பிரச்னை, மரபணுரீதியான பிரச்னை காரணமாகவே ஏற்படுகின்றன. இதய இயக்கம் பலவீனமாக இருப்பவர்களுக்கு பேஸ்மேக்கர் பொருத்துவோம்.
முதலுதவி
மாரடைப்பு, இதயச் செயலிழப்பு ஏற்படும் சூழலில், இரு கைகளால் நெஞ்சுப்பகுதியை அழுத்திவிட்டு வாய் வழியாக சுவாசம் கொடுக்கும் சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) முதலுதவியைச் செய்வதன் மூலம், நின்றுபோன இதயத்துடிப்பை மீண்டும் இயங்கவைக்கலாம்” என்றவர், ``இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ள மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்கிறார்.
“மாரடைப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், நமது வாழ்வியல் மாற்றங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதயத்தைப் பாதுகாக்க மூன்று விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.
அனைத்துச் சத்துகளையும் உள்ளடக்கிய சரிவிகித உணவுப்பழக்கம்
கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற சத்துகளைக் குறைந்த அளவில் உட்கொண்டு புரதம், நார்ச்சத்துள்ள பொருள்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது. காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் மிகுந்த உணவுகளைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளுக்கு ஆளானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகிறது. இவர்கள், இதயத்தைப் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். நடப்பது, ஜாகிங், நீச்சல் உள்ளிட்ட இதயத்தைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு பயிற்சியை, வாரத்தில் ஐந்து நாள்களுக்கு தினமும் 40 நிமிடங்கள் செய்தாலே போதும்.
மனநலனைப் பேணுவது
மன அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான பிரச்னைகளும் மாரடைப்புக்குக் காரணமாகலாம். எனவே, மனதளவில் அமைதியுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்கவேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் மீனாக்ஷி.