சீனாவில் எலுமிச்சைப் பழங்களை மக்கள் தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தபோதுதான், அங்கு மீண்டும் கோவிட் தொற்று ஆதிக்கம் செலுத்துவதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. தொற்றுக்கு இந்த முறை மருந்துகள், மாத்திரைகள், மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல், மக்கள் இயற்கையான வழிமுறைகளிலும் நோயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

எலுமிச்சைப் பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பும் சீன மக்கள், மார்க்கெட்டுக்கு வரும் புதிய பழங்களை அப்படியே வாங்கிவிடுகின்றனர். அதிக மக்கள் எலுமிச்சைகளை வாங்கிக் குவிப்பதால், எலுமிச்சையின் விலை இருமடங்காக ஏற்றம் கண்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற சீனாவின் பெரிய நகரங்களில் எலுமிச்சைப் பழங்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.
எலுமிச்சை மட்டுமல்லாமல் ஆரஞ்சு, பேரிக்காய் பழங்களையும் மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். மார்க்கெட்டுகள் மட்டுமல்லாமல், பழங்களை ஆன்லைனில் விற்கும் தளங்களிலும், மக்கள் அதிகப்படியாக ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.

`வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை, கோவிட் தொற்றை குணப்படுத்தும் என்பதற்கான எவ்வித ஆய்வு முடிவுகளும் இல்லை. மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்பட்சத்தில் பழங்களை மட்டும் நம்பி இருக்காமல், அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.