அதீத மொபைல் உபயோகம், கட்டுப்பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பலவகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனில், குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

'தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைகளைப் பார்த்தால், குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும்' என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.ஷியாமளா.
பிறந்த குழந்தைக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பித்து வந்தால், குழந்தையின் உடல் வளர்ச்சிகள் யாவும் தடைப்படவும், தாமதப்படவும் வாய்ப்பு உண்டு.குழந்தைகள் நல மருத்துவர்.
"குழந்தைகளைப் பொறுத்தவரையில், பிறந்து நான்கு மாதங்கள் கடந்தபிறகு, அவர்களுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் போன்றவை வளர்ச்சிபெறத் தொடங்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பித்துவந்தால், அந்த வளர்ச்சிகள் தடைப்படவும், தாமதப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியான குழந்தைகள், வளர வளர நடத்தை தொடர்பான மாற்றங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆட்டிஸமே இல்லாமல், அதற்கான அறிகுறிகள் மட்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
இந்தக் கட்டுரையை கீழ்க்காணும் லிங்க்கில், வீடியோ வடிவில் காணுங்கள்!
'மொபைல் காட்டினால்தான் என் குழந்தை சாப்பிடவே செய்கிறான்' எனக் கூறி, பல பெற்றோர்கள் பிறந்த குழந்தைகளுக்கும் டிஜிட்டல் திரைகளைக் காண்பிக்கின்றனர். சாப்பிட வைப்பதற்காக, குழந்தைக்கு மொபைலைக் காட்டுவதை விட மோசமான ஒரு பழக்கம் இருக்கவே முடியாது. குழந்தை சாப்பிட அடம்பிடித்தால், அவர்களை வெளியில் அழைத்துச்சென்று இயற்கையை வேடிக்கை காட்டுங்கள். முடிந்தவரை, அவர்களுடன் பேசிக்கொண்டிருங்கள். மொபைலை குழந்தை மறக்க ஒரேவழி, நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிடுவதுதான்.
கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால், அவர்களின் எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். காரணம், வளர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனாலேயே மொபைலில் வீடியோக்கள் பார்க்கும்போது, 'அடுத்து என்ன' என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். இது, மிக இளம் வயதிலேயே 'அடல்ட் வீடியோ' பார்க்கும் பழக்கத்துக்கு அவர்களை உட்படுத்தக்கூடும்.
"பெற்றோரின் நேரடி கண்காணிப்புக்கு உட்பட்டுதான் குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை உபயோகிக்க வேண்டும்"மருத்துவர் ஷியாமளா
குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பிப்பதை பெற்றோர் தவிர்த்தே ஆகவேண்டும். ஒருவேளை பார்க்க வேண்டுமென்றால், அது உங்களின் நேரடி கண்காணிப்புக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்" என்கிறார், மருத்துவர் ஷியாமளா .