
கொரோனா எல்லா நோயையும் போன்று ஒரு நோய்தான்.
‘கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!’ - உலக சுகாதார நிறுவனம் தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் அறிவுரை இதுதான். கொரோனாவுடன் வாழப் பழகுவது என்பது ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயா குடும்பத்திடம் ‘வாங்க பழகலாம்!’ என்று ரஜினி சொல்வதுபோல் அவ்வளவு எளிதான காரியமா என்ன?
“இந்தியாவில் நூறு பேருக்கு நோய் வந்தால் 98 பேருக்கு அறிகுறிகளே இல்லை. இந்தக் கட்டத்தை நாம் அடைந்துவிட்டதால் சற்று தைரியமாக கொரோனாவை எதிர்கொள்ளலாம். இன்னும் ஓராண்டுக்கு தன்னைத் தவிர அனைவரையும் கொரோனா பாசிட்டிவ் நோயாளியாக இருப்பாரோ என்ற சந்தேகக் கண்ணோடே அணுக வேண்டும். குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்லர். அனைவரையும் இதுபோன்றே அணுகுதல் நல்லது. அப்போதுதான் கூடுதல் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவோம்.
தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறதா, புதிய தொற்றுகள் உருவாகின்றனவா, நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகிறதா என்பதைப் பற்றிய படிப்பினை மே மாத இறுதிக்குள் கிடைக்கும். ஒருவேளை நிலைமை கைமீறிப் போனால், மேலை நாடுகளில் ஏற்பட்ட உச்சக்கட்ட பாதிப்பு ஜூன் மாதத்தில் இந்தியாவிலும் ஏற்படலாம். அப்படி ஏற்படவில்லையென்றால் மகிழ்ச்சியாகவே இந்த நாள்களைக் கடந்து சென்றுவிடலாம்.

ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துவிட்டன. அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்படத் தொடங்கிவிட்டால் பொதுப் போக்குவரத்துகளில் கூட்டம் அலைமோதும். இதைத் தடுப்பதற்கு வேலை நேரங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட நேரம், அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கு வேறு நேரம் என்று மாற்ற வேண்டும். அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கென்று பிரத்யேக வாகனங்களை இயக்க முன்வர வேண்டும். வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கூடுதலாக அமல்படுத்தலாம். குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு அலுவலகங்கள் செயல்படலாம்.
பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவும் இறங்கிய உடனேயும் கைகளைக் கழுவ வேண்டும். அலுவலகங்களில் ஏ.சியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஏ.சியில் ஹெப்பா (HEPA) என்ற ஃபில்டரைப் பொருத்தலாம். அது நோய்க்கிருமிகள் ஊடுருவுவதைத் தடுக்க உதவும்.
அலுவலகங்களில் பலரும் புழங்கும் கேன்டீன் உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டிலிருந்தே தண்ணீர், காபி, உணவு என எல்லாவற்றையும் எடுத்துச் செல்லப் பழக வேண்டும். அலுவலகத்திலும் அவரவர் இருக்கையிலேயே சாப்பிடுவது நல்லது. துரித உணவுகளுக்கு விடைகொடுத்துவிட்டு, ஆரோக்கியமான, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு மாற வேண்டிய நேரம் இது.

அலுவலகம், பொது இடங்களில் கழிவறையைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை. கழிவறையைப் பயன்படுத்திய பிறகு நன்றாக சோப் போட்டுக் கைகளைக் கழுவ வேண்டும். கழிவறையிலிருந்து வெளியே வந்து கைகளைக் கழுவுவதற்கு முன்பு கண், மூக்கு, வாய்ப்பகுதியை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. அலட்சியமாக இல்லாமல் சற்று கவனத்துடன் அனைத்து விஷங்களையும் அணுகினாலே தொற்றிலிருந்து விலகி, பாதுகாப்பாக வாழ முடியும். கொரோனா தடுப்புக்காக இந்த லாக்டௌன் நாள்களில் பழகிக்கொண்ட சில நல்ல விஷயங்களை இன்னும் ஓராண்டுக்காவது பின்பற்ற வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருணாசலம்.
முதியவர்களைப் பாதுகாப்போம்!
கொரோனா வைரஸ் நோயிலிருந்து அதிகம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் முதியவர்களே. இன்னும் சில காலத்துக்கு முதியவர்கள் வீட்டின் ஓர் அறையை தங்கள் உலகமாக மாற்றிக்கொள்வது நல்லது.
இது தொடர்பாகப் பேசிய பொது மருத்துவர் பாலசுப்பிரமணியன், “60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் தனித்து வாழப் பழகுவது நல்லது. வீட்டிலிருக்கும் இளைஞர்கள் வெளியே புழங்குவதால் குழு நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) ஏற்படும். இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் ஒரு வாரம் காய்ச்சல் போன்ற சிறிய அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு, குணமடைந்துவிடுவார்கள்.

முதியவர்கள் வீட்டிலேயே இருக்க நேரிடும்போது வைட்டமின் டி சத்து கிடைக்காமல்போகும். கொரோனாப் பரவலின் பிறகு எலும்புப்புரையால் பாதிக்கப்பட்டு, எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் தினமும் மொட்டை மாடியில் காலையும் மாலையும் இளம் வெயிலில் நடைப்பயிற்சி செய்வது நல்லது. கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டறியும்வரை இதுபோன்ற சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இனி வாழ்க்கை முறையே நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும்” என்கிறார்.
மனதை வளர்ப்போம்!
கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்பதற்கு வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்பதே அர்த்தம். அதற்கு முன்பாக மனதளவிலும் சற்றுத் தயாராக வேண்டியிருக்கிறது.

“50 நாள்கள் லாக்டௌனில் கொரோனாவை எதிர்க்க மனதளவில் தயாராகிவிட்டோம். நோய் எப்படிப் பரவுகிறது, அதைத் தடுப்பது எப்படி என்பன போன்ற பல விஷயங்களைப் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். பொதுவாக ஒரு துயரத்தை, மறுப்பு, கோபம், வாதிடுதல், மனஅழுத்தம், ஏற்றுக்கொள்ளல் என்று உளவியல் ரீதியாக ஐந்து நிலைகளாக அணுகுவோம். கொரோனாவுக்கும் இது பொருந்தும். தற்போது ஏற்றுக்கொள்ளல் என்ற ஐந்தாவது நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் மனரீதியாக இன்னும் ஒரு விஷயத்துக்கு நாம் தயாராகவே இல்லை. கொரோனா நோயாளிகளையும் அவர்கள் குடும்பத்தினரையும் வேறு மாதிரியாக நடத்துவது, மருத்துவமனைகளில் பணியாற்றுவோரை வீடு காலி செய்யச் சொல்லுதல் போன்ற விஷயங்கள் இன்னும் தொடர்கின்றன. கொரோனா எல்லா நோயையும் போன்று ஒரு நோய்தான். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாவிட்டாலும் ஒதுக்கிவைக்காமல் இருக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் சென்னைக் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸின் தன்மையானது சற்று ஆபத்தில்லாத வகையைச் சேர்ந்தது என்பதால் பாதிப்பும் உயிரிழப்புகளும் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. பிற நாடுகளில் பரவிய அதிக வீரியமான வைரஸ் பரவியிருந்தால் இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் அது யூகிக்க முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும் கொரோனாவுக்கு முன்பிருந்த உலகமாக, கொரோனாவுக்குப் பின்னால் இருக்காது. இத்தனை ஆண்டுகள் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றியே ஆக வேண்டும்.

உண்மை பலநேரம் கசப்பாகத்தான் இருக்கும்; நம் விருப்பத்துக்கு மாறாகவும் இருக்கும். ஆனால் யதார்த்ததைப் புரிந்துகொள்வதுதான் ஆரோக்கியமாக வாழ்வதற்கான முதல் வழி.