Published:Updated:

How to: தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid suicidal thoughts?

Depression (Representational Image)
News
Depression (Representational Image) ( Pixabay )

``நம் உறவு, நட்பு வட்டத்தில் யாரேனும், `சமயத்துல தற்கொலைகூட பண்ணிக்கலாம்னு தோணுது' என்று புலம்பினால், அவர்களை அசட்டை செய்யாமல், கேலி செய்யாமல், அறிவுரைகளை வாரி வழங்காமல், அவர்களின் பிரச்னைகளை அவர்கள் இடத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்."

Published:Updated:

How to: தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid suicidal thoughts?

``நம் உறவு, நட்பு வட்டத்தில் யாரேனும், `சமயத்துல தற்கொலைகூட பண்ணிக்கலாம்னு தோணுது' என்று புலம்பினால், அவர்களை அசட்டை செய்யாமல், கேலி செய்யாமல், அறிவுரைகளை வாரி வழங்காமல், அவர்களின் பிரச்னைகளை அவர்கள் இடத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்."

Depression (Representational Image)
News
Depression (Representational Image) ( Pixabay )

சமீப வருடங்களாகப் பல்வேறு சூழல்களால் மக்களுக்குத் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. கடன் பிரச்னை, உறவுகள் இழப்பு, மன அழுத்தம் எனப் பல காரணங்கள் இந்தத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடக்கூடியதாக அமைகின்றன.

தற்கொலை எண்ணத்தைத் தடுக்க அரசு சார்பிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்கொலைகளைத் தடுப்பதை ஒரு தொடர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது, அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி.

காயத்ரி மஹதி
காயத்ரி மஹதி

தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது?

``தற்கொலை எண்ணத்தைத் தடுப்பதற்கு முன்பாக, ஏன் இந்த மாதிரியான எண்ணங்கள் தோன்றுகிறது என்பதைப் பார்ப்போம் .

* தற்கொலை எண்ணங்களுக்கும் மரபுக்கும் தொடர்புண்டு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அல்லது இருந்த நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம் போன்றவை ஏற்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் யாருக்கேனும் அதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. மரபணு மூலமாக ஆரம்பிக்கும் தற்கொலை எண்ணங்கள் இந்த வகை.

* அடுத்ததாக, ஓர் இழப்பின் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணங்கள். இது இயலாமையின் வெளிப்பாடு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், `என்னால் உன்னை உயிருடன் காப்பாற்ற முடியவில்லையே' என்ற ஆற்றாமை. துர் மரணம் என்பது எதிர்பாராதது என்று புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

* கடன் பிரச்னைகள் காரணமாகத் தற்கொலை எண்ணத்துக்குச் செல்லும் சிலர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது துயரத்திலும் துயரம். ஏதாவது ஒரு சூழலில் கடன் பிரச்னையில் சிக்கிக்கொள்ளும்போது, அதிலிருந்தே வெளியேறும் வழிகள் அடைபடும்போது, இதுவரை அவர்கள் தங்களைப் பற்றிக் கட்டியெழுப்பிய பிம்பம் உடைய ஆரம்பிக்கும். அதைச் சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சிலருக்கு, கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் அவமானம் உயிரைக் குன்றவைப்பதாக இருக்கும். இந்தச் சூழலில், தற்கொலை முடிவெடுக்கும் குடும்பத் தலைவர், தனக்குப் பின் அதே கடன் பிரச்னைகள் தன் குடும்பதுக்கு மரியாதையான ஒரு வாழ்வைக் கொடுக்காது என்று எண்ணி, அவர்களை இனி கவனித்துக்கொள்ளவும் யாருமில்லை என்று எண்ணி, குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்.

* சிலர், வாழ்வில் நல்ல நிலையில் இருந்தும் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கலாம். `இவர்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை' என்று மக்கள் நினைப்பார்கள். தன்னுடைய கடமை, தன்னுடைய பதவி, தான் செய்ய வேண்டிய உதவி என அனைத்தும் முடிந்த பின் சிலருக்கு ஒரு வெறுமை வந்துவிடும். அதைச் சரிசெய்யத் தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே, சரியான, தேவையான ஓர் அன்பு கிடைக்காமல் இருக்கும். வாழ்க்கை பொருளாதார ரீதியாக நிறைவாக இருந்தும், ஒருவர் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து அன்பு, எதிர்பார்த்த அதிகாரம், எதிர்பார்த்த பதவி என்று கிடைக்காத பட்சத்தில், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதால் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

Depressed woman(Representational image)
Depressed woman(Representational image)
Pixabay

தற்கொலை எண்ணத்தைத் தவிர்ப்பது எப்படி?

* இரு மனிதர்களுக்கு இடையில் ஒரு பரஸ்பர (mutual) இசைவு இருப்பதைப் போல, ஒருவர் முதலில் தன் சுயத்துடன் பரஸ்பர இசைவுடன் இருக்க வேண்டும். உணவிலிருந்து உடைவரை, நம் தேர்வுகளில் நமக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும். குறிப்பாக, `என்னால் இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும், இவ்வளவு இருந்தால் போதும்' என்று நமக்கு நாமே உணர்ந்துகொள்ள வேண்டும். மற்றவர்களைப் பார்த்து, நாம் ஏன் அதுபோல் இல்லை என்றோ, நமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் என்றோ எண்ணம் வந்தால் அதை வளரவிடக் கூடாது. நமக்கு நாமே அனைத்து விஷயங்களிலும் பரஸ்பர புரிந்துணர்வுடன், நிறைவுடன் இருந்தால், தற்கொலை எண்ணம் தோன்றாது.

* நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாம். அதற்கு உடனடியான அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்காமல், முயற்சிகளைத் தளராது முன்னெடுத்துப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். `என் திறமைக்கு மதிப்பில்லையா?' என்ற எண்ணம் தோன்றினால், திறமையுடன் சேர்த்து உழைப்பும், முனைப்பும் வேண்டும்; மேலும் உலகில் எல்லாம் உடனடியாக நடந்துவிடுவதில்லை, காலத்துடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் போன்ற பாசிட்டிவ் பதிலை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும்.

* கடன் பிரச்னை, மொபைலில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டு மிரட்டப்படுவது, தனிநபர் விரோதம் என, சிலரால் வாழ்வுக்கு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அதனால் தற்கொலை எண்ணம் தோன்றினால், தைரியமாக சட்ட உதவியை நாட வேண்டும். காவல் நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொடுக்க பலர் இருக்கிறார்கள். உங்கள் பிரச்னையை மனதுக்குள் வைத்து மருகாமல், உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களை அணுக வேண்டும்.

* தற்கொலை எண்ணங்கள் வருபவர்கள் மது, புகை தவிர்க்க வேண்டும். உங்கள் மனதை லேசாக்கும் உங்கள் ஏரியாவில் உள்ள வாக்கிங் குழு, அரட்டை நண்பர்கள் குழு, வாட்ஸ்அப் குரூப், முகநூல் குழு என்று ஏதாவது ஒன்றில் இணைந்திருக்க வேண்டும். உலகத்துடன் இருந்து உங்களைத் துண்டித்துக்கொள்ளாமல், சமூக ஓட்டத்துடன் கலந்திருக்க வேண்டும்.

Stress
Stress
pixabay

* தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள்.

* மேலும் நம் உறவு, நட்பு வட்டத்தில் யாரேனும், `சமயத்துல தற்கொலைகூட பண்ணிக்கலாம்னு தோணுது' என்று புலம்பினால், அவர்களை அசட்டை செய்யாமல், கேலி செய்யாமல், அறிவுரைகளை வாரி வழங்காமல், அவர்களின் பிரச்னைகளை அவர்கள் இடத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்; அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நமது சமூகக் கடமை என்று உணர வேண்டும்.

இந்த பூமியில் ஒவ்வோர் உயிரும் விலை மதிப்பற்றது. ஓர் உயிர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் அவலம் தடுப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே!