Published:Updated:

How to series: சளி பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of common cold?

Cold - Representational Image
News
Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

``தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஜலதோஷத்தில் தொடங்கி காய்ச்சல் எனப் பல்வேறு நலக்குறைவுகள் ஏற்படும். சைனஸ், ஆஸ்துமா, மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்தச் சூழல் அதிக அவதியைக் கொடுக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."

Published:Updated:

How to series: சளி பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of common cold?

``தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஜலதோஷத்தில் தொடங்கி காய்ச்சல் எனப் பல்வேறு நலக்குறைவுகள் ஏற்படும். சைனஸ், ஆஸ்துமா, மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்தச் சூழல் அதிக அவதியைக் கொடுக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."

Cold - Representational Image
News
Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

மழை நல்லதுதான். ஆனால், அதில் நனைவதாலோ, தட்பவெப்பநிலையில் அது மாற்றத்தை ஏற்படுத்துவதாலோ மூக்கடைப்பில் தொடங்கி இருமல், தொண்டை கரகரப்பு, தலைவலி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, காய்ச்சல் எனப் பாடாய்ப்படுத்தலாம். இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Common cold (Representative Image)
Common cold (Representative Image)
Pixabay

பூண்டு
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்க வைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு டீ
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருள்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

எலுமிச்சை சிரப்
ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்தி வர சளி குறையும்.

வெங்காய சிரப்
ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.

Cold (Representational Image)
Cold (Representational Image)
pixabay

எளிய வீட்டு மருந்து

சளி, இருமலைப் போக்கும் இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்து விட முடியும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும். சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி தயாரித்துக் கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்த வேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால், சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.

மேலும், மழைக்காலத்தில் தொல்லைகள் ஏற்படாமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று சித்த மருத்துவர் வி.விக்ரம்குமாரிடம் கேட்டோம். எளிமையான ஆலோசனைகளை அவர் சொன்னார்.

``மழைக்காலத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவும். தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஜலதோஷத்தில் தொடங்கி காய்ச்சல் எனப் பல்வேறு நலக்குறைவுகள் ஏற்படும். சைனஸ், ஆஸ்துமா, மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்தச் சூழல் அதிக அவதியைக் கொடுக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பிரச்னை உள்ளவர்கள் என்றில்லாமல் அனைவருமே மூன்றுவேளையும் சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

காலை உணவின்போது இணை உணவாகத் தூதுவளை சட்னி, துவையல், இஞ்சித் துவையல் சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம் நல்லது. தக்காளி ரசத்துக்குப் பதில் மிளகு ரசம், கண்டதிப்பிலி ரசம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு, வெள்ளைப்பூண்டு, கொள்ளு, சீரகம், திப்பிலி சேர்த்து காரக்குழம்பு செய்து சாப்பிடலாம். இவை அனைத்தையும் ஒரே நாளில் செய்யாமல் மாறி மாறிச் செய்து சாப்பிடுவது நல்லது. குளிர்ச்சியைக் குறைத்து சூட்டை அதிகரிக்கிறேன் என்ற பெயரில் அதிக சூட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.

மழைக்காலத்தில் நீர் அருந்துவது குறைந்துவிடும் என்பதால் நீர்க்காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், ஜலதோஷம், சைனஸ் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே சேர்த்துக்கொண்டாலும் மிளகு கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து சூடாகச் சாப்பிடலாம். பழங்கள் குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்று பலர் மழைக்காலத்தில் பழம் சாப்பிட யோசிப்பார்கள். பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால் அவற்றுடன் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஆடாதொடை மணப்பாகு நல்ல பலன் தரும். ஆடாதொடை இலைச்சாற்றை வெல்லப்பாகில் சேர்த்துக் காய்ச்சி சூடாக அருந்தலாம். கெட்டிப்பட்டுவிட்டால் அதை மிட்டாய்போலவும் சாப்பிடலாம்.

உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அவ்வப்போது தயார் செய்து சாப்பிடுவதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது எப்போதுமே நல்லது இல்லை என்றாலும், மழைக்காலத்தில் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. அதேபோல் இரவில் தயிர், கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. மிளகு, சீரகம். கடலைப்பருப்பு, கொள்ளுப் பயறு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாலைவேளைகளில் வடை, போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, எண்ணெய் பலகாரங்களைத் தொடாமலிருப்பது நல்லது. அப்படியே சாப்பிட விரும்பினாலும் கல்யாண முருங்கை வடை, கற்பூரவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காயைப் பொடியாக்கி நீர் விட்டுக் கொதிக்க வைப்பதே சுக்கு வெந்நீர் அல்லது சுக்கு காபி. இதில் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

காய்கறிகளில் செய்த சூப்பில் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். நாட்டுக்கோழி, நண்டு, ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடுவது நல்லது. இரவில் பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும். பாலில் தோல் உரித்த பூண்டுப்பற்களைச் சேர்த்து வேகவைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சளித்தொந்தரவு, மூக்கடைப்பு நீங்கி இரவில் நிம்மதியான உறக்கம் வரும்'' என்றார்.