Published:Updated:

How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

Pimples (Representational Image)
News
Pimples (Representational Image) ( Photo by Anna Nekrashevich from Pexels )

திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. இதிலிருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன?

Published:Updated:

How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. இதிலிருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன?

Pimples (Representational Image)
News
Pimples (Representational Image) ( Photo by Anna Nekrashevich from Pexels )

முகத்தைப் பளபளப்பாகப் பேணிகாக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உண்டு. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். முகப்பருக்களால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன? வாங்க பார்க்கலாம்!

எதனால் ஏற்படுகிறது?

சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதை, சீபம் என்பார்கள். உடல் முழுதும் இந்தச் சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும். இது, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்; பளபளப்பான தோற்றம் தரும்.

முகப்பருக்கள் (Representational Image)
முகப்பருக்கள் (Representational Image)

மேலும், முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் (Androgen) என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கிறது.

அப்படி எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி நம்மிடையே பகிர்கிறார், சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

- திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

- குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

- பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

- 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

- அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

- வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

- வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளரி
வெள்ளரி

- மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

- பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

பன்னீர் - எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

சந்தனம்

சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

ரோஜா மொட்டு

ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.

வேப்பிலை

வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை
கற்றாழை

குப்பைமேனி இலை

அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவை குணமாக்கும்.

பூண்டு

வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.

ஃபேஸ் பேக்குகள்

ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.

முகப்பருக்களைத் தடுக்க... தவிர்க்க..!

சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

பழங்கள் | Fruits
பழங்கள் | Fruits
Image by silviarita from Pixabay

பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருள்களை மற்றவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்