இன்றைய தலைமுறை மத்தியில் மனஅழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மனஅழுத்தத்தால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத ஒன்று. மன அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், சக ஊழியர்களால் ஏற்படும் மன அழுத்தம் நம்முடைய திறனையும் சேர்த்து பாதிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் மனஅழுத்தம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான விகடன் வாசகர் ஒருவர் தீர்வு கேட்டிருக்கிறார்.

``பொறுப்பற்ற சக ஊழியர்களால் பயங்கர கோபம் வருகிறது. அவர்கள் செய்ய வேண்டிய பணியைத் தட்டிக் கழிப்பதால், சுமைகள் என் தலையில் விழுகின்றன. குழுவாகப் பணியாற்றுவதால் மொத்தக் குழுவுக்கும் சேர்த்து மூன்று பேர் செய்யவேண்டிய முழுப் பணியையும் நானே செய்யவேண்டியதாகிறது. `நா இப்படித்தான், என் சம்பளத்துக்கு இவ்வளவு வேலை செய்தா போதும், வேணும்னா நீ செய்' என சக ஊழியர்கள் பேசும்போது தீ மேல் அமர்ந்துள்ளது போல் இருக்கிறது. அந்த நேரங்களில் கோபம் அதிகமாக வருகிறது. கோபத்தில் எதையாவது பேசி நட்பில் கசப்பு வந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. கோபத்தை எப்படிக் கையாள்வது? ஒரு வழி சொல்லுங்களேன்'' என்பதே அவரது கேள்வி. வாசகரின் அந்தக் கேள்வியை மனநல மருத்துவர் குறிஞ்சியிடம் முன்வைத்தோம்.
``பணிச்சுமை என்பது எல்லா அலுவலகங்களிலும் அதிகரித்துவிட்டது. ஒரு துறையில் இருந்து பார்க்கும்போது இன்னொரு துறையில் இருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோன்று தோன்றலாம். ஆனால், அவர்களிடம் அமர்ந்து பேசும்போதுதான் அவர்களது பணிச்சுமை என்ன என்பது நமக்குத் தெரியும். கூலித் தொழிலாளிகள் அதிகமாக உடல் உழைப்பு கொடுக்கவேண்டியிருக்கும்; ஐ.டி துறையில் இருப்பவர்கள் தங்களது அறிவால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். இந்த இரண்டு துறையில் இருப்பவர்களின் பணி வேறுபட்டது. இதில் பணிச்சுமைதான் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது, அதுதான் அதற்குக் காரணம் என நினைத்தால் அது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
பணிக்குச் சேர்ந்த புதிதில் என் திறமையைக் காட்டுகிறேன் என, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துவிட்டு பின்னர் அதுவே பணிச்சுமையாக மாறிவிட்டது என வேதனைப்படுவதில் எந்தப் பயனுமில்லைமனநல மருத்துவர் குறிஞ்சி
`நாம் நம்முடைய பணியைச் சிறப்பாகச் செய்வது போன்று மற்றவர்களும் செய்ய வேண்டும்' என அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும். அதை மாற்ற வேண்டும் என நினைக்கும்போதுதான் உண்மையில் மன அழுத்தம் ஏற்படும். அலுவலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் மற்றவர்களின் முடிவைக் கேட்டு செயல்படும் கடைநிலை ஊழியர்களாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் மீது உங்கள் நிறுவனம் வைக்கும் எதிர்பார்ப்புகளைச் செய்து முடிப்பதை மட்டும் உங்களது இலக்காகக் கொள்ளுங்கள். மற்றவர்களைவிட கூடுதலாக வேலை செய்கிறேன் என்றோ, குறைவான வேலை செய்கிறேன் என்றோ குழப்பம் கொள்ளத்தேவையில்லை.
மற்றவர்களின் பணிச்சுமை உங்கள்மீது திணிக்கப்படுகிறது. அது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் சக பணியாளர்களிடம் அவர்களுக்கான பொறுப்புகளை பொறுமையாக எடுத்துச் சொல்லலாம். அதில் மாற்றம் ஏற்படாத நிலையில் உங்களது தலைமைக்கு உங்கள் நிலைமையைப் புரியவையுங்கள். பணிக்குச் சேர்ந்த புதிதில் என் திறமையைக் காட்டுகிறேன் என, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்துவிட்டு பின்னர் அதுவே பணிச்சுமையாக மாறிவிட்டது என வேதனைப்படுவதில் எந்தப் பயனுமில்லை. அதனால் பணிக்குச் சேரும்போதே உங்களது வேலை என்ன, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்களது வளர்ச்சி என்பது நீங்கள் செய்யும் பணிக்காக இருக்கவேண்டுமே தவிர, அடுத்தவர்களின் வேலையை இழுத்துப் போட்டுச் செய்வதால் கிடைப்பதாக இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை.
நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, உங்களின் கீழ் பணிபுரிபவரின் செயல்பாடுகள் உங்களுக்குப் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது என்றால், அவர்களது கடமையை உணர்த்தி அவர்களுக்கென சில இலக்குகளை நிர்ணயித்து, அதில் பயணிக்க வைக்கும் வேலையைக் கையில் எடுங்கள். அதிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், நிர்வாகத்திடம் புகார் செய்யத் தயங்காதீர்கள்.

அக்கறையுடன் வேலை செய்பவர்களுக்கு வேலைப் பளுவும், வாய்ச்சொல் வீரர்களுக்குப் பாராட்டும் கிடைப்பதைப் பார்க்கும்போது நம் ஊக்கம் குறையும்; மேலதிகாரி மீதான நம்பிக்கை தளரும். அத்துடன் நிறுவனத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வு நீர்த்துப் போகக்கூடும். இதுபோன்ற நேரங்களில் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புவதால் எந்தப் பலனும் இல்லை. பொருளாதார நெருக்கடியால் நம்மால் அவ்வளவு சுலபமாக பார்க்கும் வேலையை விடமுடியாது. ஆகையால் நம் தன்மானத்துக்கும் சுய மரியாதைக்கும் இழுக்கு ஏற்படாத பட்சத்தில் கொஞ்சம் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் சக பணியாளர்கள் உங்களிடம் இருக்கும் குறைகளை எடுத்துச்சொல்லும் பட்சத்தில், அது ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவோ அல்லது நீங்கள் திருத்திக்கொள்ளக்கூடிய ஒன்றாகவோ இருந்தால் அதை நிச்சயம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் உங்கள்மீது வைக்கப்படும் குறைகளைப் பற்றியோ, வதந்திகளைப் பற்றியோ உங்களது தோற்றத்தின்மீது வைக்கப்படும் கேலிகளைப் பற்றியோ கவலைப்படாமல், திறமையை கையில் எடுத்து முன்னேறிச் செல்லுங்கள்.
நம்முடைய சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையே ஒப்பீடு செய்வதுதான். ஒப்பீடு நம்மை வளர்த்துக்கொள்ள உதவும் என்பது உண்மைதான் என்றாலும், அது ஆரோக்கியமான ஒப்பீடாக இருந்தால் பிரச்னை இல்லை. அதற்கான சரியான புரிதல் இல்லாதபட்சத்தில் நீங்கள் மனஅழுத்தத்துக்கு உள்ளாவீர்கள்; தாழ்வு மனப்பான்மையும் உருவாகும்.
உங்களது பணியை எந்த அளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை இலக்காகக் கொள்ளுங்கள். மாறாக குறைகளை சரியான நபரிடம் சரியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துச்சொல்லும் மன உறுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் சிறப்பான பணிக்கான பலன் கிடைக்கும் வரை பொறுமை காப்பதும் அவசியம்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியாகவேலைபார்க்க 12 எளியவழிகள்.
காலம் கடந்தும் பலனில்லாதபோது அங்கேயே இருந்து புலம்புவதைவிட, ஆரோக்கியமான முறையில் நிறுவனத்துடன் கைகுலுக்கி வெளியேறுவதே நல்லது. உங்கள் பணியை ஒவ்வொரு நாளும் காதலியுங்கள். உங்கள் பணியை நீங்கள் நேசிக்கும் பட்சத்தில் உங்களைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வும் மன அழுத்தத்தை உண்டாக்காது'' என்கிறார் மருத்துவர் குறிஞ்சி.