வெளிநாட்டில் பணியாற்றும் ஒருவர், தன்னால் சாதிக்க இயலாமல் போனது தொடர்பாக மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

``நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிகிறேன், எனக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகின்றன, இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நான் வேலை செய்யும் இடத்தில் எந்த பொறுப்பில் சேர்ந்தேனோ அதே நிலையில் தான் இருக்கிறேன். எந்தப் பதவி உயர்வும் எனக்குக் கிடைக்கவில்லை, பொருளாதார ரீதியாகவும் பெரிதாகச் சம்பாதிக்கவில்லை. வருடம் ஒருமுறைதான் ஊருக்குச் செல்வேன், அது மட்டும்தான் எனக்கு வசந்த காலம், குடும்பத்தைப் பிரிந்துதான் வாழ்ந்து வருகிறேன்.
கடந்த சில மாதங்களாக நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறேன் என்னால் வேலையைக் கவனமாகச் செய்ய முடியவில்லை எதிர்காலத்தை நினைத்தாலே மிகவும் பயமாக உணர்கிறேன், வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்றவர்களை பார்க்கும் போது நம்மால் இது போல் ஆக முடியவில்லையே என மிகுந்த மனஉளைச்சளுக்கு உள்ளாகிறேன்.

தினமும் படிக்கும் செய்திகள் கேள்விப்படும் விஷயங்கள் எல்லாமே எனக்கு ஒருவித மன அழுத்தத்தைத் தருகிறது. என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. நான் சாதிக்க பிறந்தவன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. தயவுசெய்து இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள்'' என்று வாசகர் கேட்டிருந்தார்.
வாசகரின் கேள்வி குறித்து குமரி மாவட்டம் அசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஜஸ்டின் பால் கூறுகையில், ''நம்மிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு வேலையில் சேரும்போது அது தொடர்பான வளர்ச்சி குறித்து தொடக்கத்தில் இருந்தே கவனமுடன் செயல்பட்டு இருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியிருந்தால் இப்போது கவலைப்படுவது தேவையற்ற மனஅழுத்தத்தை மட்டுமே உருவாக்கும்.

தற்போதைய நிலையில், குடும்பம் குழந்தைகள் ஆகியோரைக் கவனத்தில்கொண்டு இருக்கும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் திருப்தி அடைய வேண்டும். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு வாழ்வதே தவறானது. ஒவ்வொருவரும் அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப முன்னேறுவார்கள். அதனால் நாம் பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொண்டு கிடைத்ததில் திருப்தி அடைந்தால் மன நிம்மதியுடன் வாழ முடியும்'' எனத் தெரிவித்தார்.