ஏறக்குறைய இரண்டுமாத கால லாக்டௌனுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று கொண்டிருக்கிறோம். 'கொரோனாவோடு வாழப்பழகுவோம்' என்பதன் அடிப்படையில்! லாக்டௌன் கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.

மாஸ்க், சானிடைஸர் என்று ஆரம்பத்தில் நாம் கடைப்பிடித்த சுகாதார நடைமுறைகளுக்கும் சிலர் தளர்வு அளித்திருப்பதை மாஸ்க் இன்றி சாலைகளில் நடமாடும் முகங்களே காட்டிக் கொடுக்கின்றன. லாக்டௌன் தளர்வு சுதந்திரத்தை நாம் அனுபவிக்கும் முன் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் இன்னும் கொரோனா முடிவுக்கு வரவில்லை! நாம்தான் வேறு வழி இல்லாமல் வெளியில் வருகிறோம். இதுவரை நாம் கடைப்பிடித்து வந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருக்கக் காரணம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையை இந்த லாக்டௌன் தளர்வு ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலத்தில் கொரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க நாம் என்னென்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று விளக்குகிறார் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும், மருத்துவருமான குழந்தைசாமி.
"கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க நாம் இரண்டு வகையினர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதில் முதல் வகையினர் 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள். இரண்டாம் வகையினர் ஏற்கெனவே சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாட்டுடன் இருப்பவர்கள்.

முதல் வகையினர்:
60 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் இந்த வகையின் கீழ் வருவார்கள். இவர்களில் சிலர் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கலாம். ஆனால் கொரோனா வயதானவர்களை எளிதில் தாக்கும் என்பதால் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அதிக கவனம் செலுத்திப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
இரண்டாம் வகையினர்:
நீரிழிவு நோய், ஆஸ்துமா, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சருக்கு சிகிச்சை எடுத்து வருவோர்கள் என ஏற்கெனவே ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் இரண்டாம் வகையினர். குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் இத்தகைய உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம். இவர்களுக்கும் கொரோனா தொற்றால் மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இந்த இரண்டு வகையினரும் லாக்டௌன் தளர்வுக்குப் பிறகும் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஓரளவு பாதிப்புடன் சரியாகிவிடும்.
காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி போதுமான அளவிற்கு இருக்கும். ஆனால் மேற்கூறிய இரண்டு வகையினருக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் அவர்களின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இவர்கள் என்ன செய்யலாம்?
இந்த இரண்டு வகையினரும் முடிந்தவரை வெளியில் செல்வதையும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
14 நாள்கள் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதல் 7 நாள்கள் தொடர்ச்சியாகவும் பின்பு இரண்டு நாள்கள் இடைவெளிவிட்டு அடுத்த 7 நாள்களும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு, நெல்லிக்காய், பால், கீரை வகைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருப்பதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மல்டிவைட்டமின் (Multivitamin) மாத்திரைகளை 10 நாள்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். ஜிங்க் (Zinc) மாத்திரைகளையும் 10 நாள்களுக்குச் சாப்பிடலாம்.

தினமும் மதிய வேளையில் 10 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை உடலில் வெயில் படும்படி மொட்டைமாடியிலோ, வீட்டின் அருகிலேயோ நடக்கலாம்.
இந்த இரண்டு வகையினரும் புகையிலை, சிகரெட் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதிகாலையில் 30 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது நல்லது.
இவர்களுக்கும் அதிக கவனம் தேவை:
வயதானவர்கள் இருக்கும் வீடுகள், முதியோர் காப்பகங்களில் நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த இடங்களில் தனிமனித இடைவெளி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
சிறைச்சாலைகளிலும் 55 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதால் அங்கேயும் சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மன வளர்ச்சி குன்றியவர்கள் இருக்கும் இடங்களிலும், மனநலக் காப்பகங்களிலும் இருப்பவர்களின் சுய சுத்தத்தையும், தனிமனித இடைவெளியையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் லாக்டௌன் தளர்வுக்குப் பிறகு ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்" என்றார் மருத்துவர் குழந்தைசாமி.