தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய சில நாள்களிலேயே நம்மிடம் பிரபலமானது `ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' (Finger Pulse Oximeter). இது நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய கிளிப் (Clip) போன்ற எலெக்ட்ரானிக் கருவி.
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரின் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு வெகுவாகக் குறையும். உடலில் உள்ள மொத்த ஆக்ஸிஜனின் அளவு 95 - 100 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம்.

உடலுக்குள் கொரோனா வைரஸ் சென்ற உடனேயே அறிகுறிகள் தென்பட்டுவிடாது. ஒரு நோய்க்கிருமி நம் உடலில் சென்று நோயை ஏற்படுத்தும்போது அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சில நாள்களை எடுத்துக்கொள்ளும். இது நோய்க்கிருமியின் `இன்குபேஷன் காலம்' (Incubation period) எனப்படும். இன்குபேஷன் காலம் என்பது நம் உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரி நம் உடலில் உள்ள செல்களை அழித்து அது பல்கிப் பெருகிட எடுத்துக்கொள்ளும் காலம். கொரோனா வைரஸின் இன்குபேஷன் காலம் 14 நாள்கள். இதனால் கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் சென்ற 14 நாள்களுக்குப் பிறகே இந்தத் தொற்றின் முழுமையான அறிகுறிகள் வெளிப்படும். இந்த இடைவெளியில் நம்மைச் சுற்றி உள்ள பலருக்கு நம் மூலம் நோய் பரவ வாய்ப்பிருக்கிறது.
நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத `ஏசிம்ப்டமடிக்' (Asymptomatic) நிலையில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட 14 நாள்களுக்குப் பிறகும் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு இந்நோய்த்தொற்று மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே சரியாகிவிடும். ஆனால், மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும்போதே கொரோனா தொற்று இருப்பது தெரியவரும். உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளரை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அரிது.
பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் மீதான இந்தக் குழப்பங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ``யாரெல்லாம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அவசியம் பயன்படுத்த வேண்டும், எப்போதெல்லாம் அதைக் கொண்டு உடலில் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிடலாம், தரம் குறைந்த ஆக்ஸிமீட்டரை எவ்வாறு கண்டறிவது..." என்பது குறித்து தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம்.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன?
``உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய கிளிப் (Clip) போன்ற எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இந்தக் கருவியை கையின் ஏதேனும் ஒரு விரலில் மாட்டி, கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும்போது ஆக்ஸிமீட்டரில் இருந்து வெளிப்படும் ஒளி விரல் தசையை ஊடுருவிச் சென்று நம் உடலின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு கணக்கிடப்படுகிறது. இந்த அளவு ஆக்ஸிமீட்டரின் டிஸ்பிளேயில் நமக்குக் காட்டப்படுகிறது.
பொதுவாக ஒருவருக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்திற்கு மேலே இருக்க வேண்டும். இந்த அளவு 95 சதவிகிதத்திற்குக் கீழ் இருப்பின் அவரின் உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லையென்று அர்த்தம். அதுவே இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம். இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்."
`ஆக்ஸிமீட்டர்' ஏசிம்ப்டமடிக் வகையினருக்கு எப்படி உதவும்?
``கொரோனா டெஸ்டில் ஒருவருக்கு `பாசிட்டிவ்' என்று வருகிறது. உடனே அவரைச் சார்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு டெஸ்ட் செய்கிறார்கள். அவர்களில் சிலருக்கு பாசிட்டிவ், சிலருக்கு நெகட்டிவ் என்று வரலாம். இதில் பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு எதிர்காலத்தில் பாசிட்டிவ் ஆனாலும் ஆகலாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஒருவேளை இவர்கள் ஏசிம்ப்டமடிக்காக இருந்தாலோ, கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தாலோ தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், வைரஸ் இவர்கள் உடலுக்குள் பெருகிக்கொண்டே செல்லும்போது நுரையீரல் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கொண்டே வரும்.
தங்களுக்கு ஏற்படும் மயக்கம், மூச்சுத்திணறலைக் கொண்டே சிலர் தங்களின் உடலில் ஏதோ தவறாக நிகழ்வதைக் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால், சிலருக்கு உடலில் பெரும்பான்மையான ஆக்ஸிஜன் குறைந்து அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மட்டுமே தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.

இதனால் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று யூகிக்கப்படுபவர்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே ஏதேனும் சுவாசப் பிரச்னை அல்லது மற்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அவ்வப்போது வீட்டிலேயே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவியுடன் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்து கொள்ளலாம்.
கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சாதாரண காய்ச்சல், சளி இருந்தால்கூட ஆக்ஸிமீட்டர் கொண்டு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்துகொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தலாம்."
ஆக்ஸிமீட்டர் டெஸ்ட் எப்போதெல்லாம் செய்யலாம்?
``டயாபடீஸ் டெஸ்ட்போல் சாப்பிடுவதற்கு முன்பு, பின்பு என்ற வரைமுறையெல்லாம் ஆக்ஸிமீட்டர் டெஸ்டுக்கு கிடையாது. ஒருநாளில் எப்போது வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைகள்கூட ஆக்ஸிஜன் அளவை செக் செய்யலாம். ஆக்ஸிமீட்டர் டிஸ்பிளேயில் காட்டப்படும் அளவைக் குறித்துக்கொண்டு மூன்று வேளைகளிலும் எடுக்கப்பட்ட அளவீடுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துகொண்டே வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஏசிம்ப்டமடிக்காக இருக்கும் ஒருவருக்கு அவர் உடலில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கிய ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில் வென்டிலேட்டர் இல்லாமலேயே அவரை குணப்படுத்த முடியும்."
எங்கு கிடைக்கும்?
``அனைத்து மருந்தகங்களிலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி கிடைக்கும். இதன் விலை ரூபாய் 1500-ல் இருந்து 2,500-க்குள் இருக்கலாம். தான் ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று நினைப்பவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி வீட்டிலேயே தன் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை டெஸ்ட் செய்துகொள்ளலாம்."

யாரெல்லாம் அவசியம் பயன்படுத்த வேண்டும்?
1. கொரோனா டெஸ்ட் 'பாசிட்டிவ்' என்று வந்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
2. கொரோனா டெஸ்ட் 'நெகட்டிவ்' என்று வந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அந்த 14 நாள்களும் ஆக்ஸிமீட்டர் மூலம் உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
3. ஏதேனும் காய்ச்சல் அல்லது சளி, இருமல் இருப்பவர்கள் அவை குணமாகும்வரை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாம்.
4. ஏற்கெனவே ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை அவசியம் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
5. மருத்துவமனையில் பணிபுரிவோர்கள் பணிக்குச் செல்லும் முன்பும், சென்று வந்த பிறகு இதனைக் கொண்டு உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
6. இது தவிர, முதியோர்கள் முதல் குழந்தைகள்வரை யார் வேண்டுமானாலும் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்துகொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம்.
எப்போது, எத்தனை முறை பரிசோதிக்க வேண்டும்?
``பல்ஸ் ஆக்ஸிமீட்டரைக் கொண்டு இந்த வேளையில்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், இத்தனை முறைதான் பரிசோதிக்க வேண்டும் என்று வரைமுறைகள் எதுவும் இல்லை. அதற்காக, இதை ஒருநாளைக்கு 10, 20 முறை எல்லாம் பயன்படுத்த வேண்டாம்.
பொதுவாகக் காலை, மாலை, மதியம் மற்றும் இரவு என்று நான்கு வேளைகள் இதை உபயோகித்து ஆக்ஸிஜன் அளவை சரிபார்த்துக்கொண்டால் போதுமானது.

காலையில் தூங்கி எழுந்தவுடன் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதித்தால் ஆக்ஸிஜன் அளவு பெரும்பாலும் 99 அல்லது 100 சதவிகிதம் என்று வரும். இதுவே, ஏதாவதொரு வேலை செய்துவிட்டோ, உடற்பயிற்சி செய்த பிறகோ பரிசோதித்தால் ஆக்ஸிஜன் அளவு 96 அல்லது 95 என்ற விகிதத்தில் இருக்கும். எனவே 4 முறை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு டெஸ்ட் செய்யும்போது நான்கு முறையும் ஒரே அளவு வரவில்லை என்றாலோ, வரும் அளவுகளில் ஒன்று அல்லது இரண்டு விகிதங்கள் மாற்றம் இருந்தாலோ பயப்படத் தேவையில்லை. இது இயல்பானதே.
இதுபோல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் நம் நாடித்துடிப்பு குறைவாக இருக்கும். அதுவே சிறிது நேரம் வேகமா நடந்த பிறகோ, ஏதாவதொரு பரபரப்பான நேரத்திலோ இந்த அளவு கிட்டத்தட்ட 99 அல்லது 100 என்ற அளவில்கூட காட்டும். இதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை."
பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தும் வழிமுறை
* விரலை நன்றாகத் துடைத்துவிட்டு, விரலில் கிளிப் போன்ற பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பொருத்த வேண்டும். ஆக்ஸிமீட்டர் பொருத்தப்படும் விரலில் நகப்பூச்சு (Nail Polish) இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் டிஸ்பிளேயில் காட்டப்படும் ஆக்ஸிஜன் அளவு தவறாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
* ஆக்ஸிமீட்டரை விரலில் பொருத்திய பிறகு, அதில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜனின் அளவும் டிஸ்பிளேயில் நமக்குத் தெரியும்.
* ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்த பிறகு, இந்தக் கருவியை விரலில் இருந்து அகற்றிவிட்டால் அது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
* இதன் மூலம் கண்டறியப்பட்ட, நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தாலோ, நாடித்துடிப்பின் அளவு 60-க்கு குறைவாகவும், 100-க்கு அதிகமாகவும் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தரம் குறைந்த, போலி ஆக்ஸிமீட்டரை எவ்வாறு கண்டறிவது?
``பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்க நினைப்பவர்கள் நேரடியாக நம்பகமான மருந்தகங்களில் அதை வாங்குவது நல்லது. ஆன்லைனில் வாங்க நினைத்தால் நீங்கள் வாங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும், வாங்கும் கருவியைப் பற்றித் தரப்பட்டுள்ள தகவல்களையும் பரிசோதித்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்க வேண்டாம்.
ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் டெக்னிக்கலாகப் பெரிய தவறுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு குடும்பத்தில் வெவ்வேறு வயதுடைய நால்வர் இருக்கும்போது அவர்கள் பயன்படுத்தும் ஆக்ஸிமீட்டர் நால்வருக்கும் ஒரே மாதிரியான அளவீடுகளைக் காட்டினாலோ, எப்போதும் ஒரே மாதிரியான அளவைக் காட்டினாலோ அந்தக் கருவியில் ஏதாவது குறைபாடு இருக்கலாம். மற்றபடி இது அதிகம் சிக்கல் இல்லாத எளிய எலெக்ட்ரானிக் கருவிதான்" என்றார் மருத்துவர் குழந்தைசாமி.