நம்முடைய உணவே நம் உணர்வைச் சொல்லும். ஆம், இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது கடந்த சில வருடங்களாக உண்ட உணவின் ஆற்றலைப் பொறுத்ததே. உணவில் மாற்றம் கொண்டு வந்தால் சிந்தனை தெளிவாகும், உடலின் ஆற்றல் பெருகும், ஆழ்ந்த உறக்கம் கிட்டும், மனம் அமைதி அடையும், எல்லா நலனும் பெருகும். அப்படியிருக்க, கர்ப்பம் மட்டும் கைகூடாமல் போய்விடுமா என்ன?

நமது கதையின் கதாநாயகி மேனகா இந்த ஒருவார காலமாக சற்று தளர்வாக, நிதானமாக இருக்கப் பழகிவருகிறாள். குழந்தை இல்லையே என்ற நினைப்பு மட்டுமே சில மாதங்களாக அவள் மனதில் இருந்து வந்தது. இப்போது சற்று தெளிவாக உணர்கிறாள். தனக்கும் ஏதோ ஓர் அதிசயம் நிகழும் என்று, போன வாரம் மருத்துவமனையில் பார்த்த, கேட்ட விஷயங்கள் தொட்டு ஒரு நம்பிக்கை உள்ளூர வந்திருக்கிறது.
உடம்பிலே ரொம்ப ரொம்ப சென்சிட்டிவ்வான உறுப்பு இனப்பெருக்க உறுப்புதான்.
இந்நேரத்தில், மேனகா வீட்டுக்கு அவளின் பெரியம்மா பார்வதி வந்திருந்தார். பார்வதி, கல்லூரியில் உயிரியல் பேராசிரியராகப் பணியாற்றி இப்போதுதான் ஓய்வு பெற்றவர். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன், ஆறேழு பேரக்குழந்தைகள் அவருக்கு. இந்த வயதிலும் நல்ல உடல்நலம், மனநலம் கொண்டவர். சென்னையில் சொந்த வேலை காரணமாக நான்கு நாள்கள் தங்கிவிட்டு ஊர் கிளம்புவதாக வந்திருந்தார்.
எப்போதுமே அவருக்கு மேனகா மீது மிகுந்த அக்கறையும் அன்பும் உண்டு. இந்த மாதிரி அவர் சில முறை மேனகா வீட்டுக்கு வந்து தங்கியபோதெல்லாம் ஶ்ரீராமும் மேனகாவும் அவ்வளவு பாசமாகப் பார்த்துப் பார்த்து அவரைக் கவனித்துக்கொள்வார்கள்.
ஆனால், இந்த முறை அந்த உற்சாகமும் துள்ளலும் சற்றுக் குறைவாக இருப்பதை பார்வதி புரிந்துகொண்டார். ஸ்ரீராமுக்கும் மேனகாவுக்கும் ஏதோ மன உளைச்சல் இருப்பது தெரிந்தது. வந்த ஒரு நாளிலேயே அவரால் அதை உணர முடிந்தது. சிறுபிள்ளைகளைப்போல் ஓடி விளையாடி குதூகலத்தோடு இருக்கும் இருவரும் இப்போது சற்று வித்தியாசமாகக் காட்சியளித்தார்கள்.
என்னவாக இருக்கும் என்று பார்வதி யூகித்துக்கொண்டார். திருமணமாகி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளதால் குழந்தையின் ஏக்கம் இருவருக்குள்ளும் வந்திருக்கலாம் என்று யோசித்தாள். அன்று இரவு ஸ்ரீராம் வருவதற்கு தாமதம் ஆனபோது, மேனகாவும் பார்வதியும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, பார்வதி எடுத்தவுடன் ஜாடை மாடையாக எல்லாம் கேட்காமல், யதார்த்தமாகப் பேச்சை ஆரம்பித்தார்.

''ரெண்டு பேரும் இப்படி தினமும் 12 மணி, 1 மணி வரை தூங்காம இருக்கீங்க. நேரத்தோட தூங்குங்கம்மா. வெளியில சாப்பிடாம வீட்டுச் சாப்பாடு சாப்பிட ஆரம்பிங்க. இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துக்குள்ள குழந்தை வந்த பிறகு, அதை நல்ல முறையில் பார்த்துக்க உடம்பில் தெம்பு வோண்டாமா? இப்படி நல்லதைச் சாப்பிடாம, ஒழுங்கா தூங்காம உங்க உடம்பைக் கெடுத்துக்கிட்டா, அந்தக் குழந்தையை யாரு நல்லமுறையில வளர்க்குறது?"
பெரியம்மா இப்படி சகஜமாகச் சொல்வதைக் கேட்ட மேனகா ஒரு நிமிடம் பேச்சு மூச்சு இல்லாமல் அவளையே பார்த்தாள்.

''என்னத்த சொல்றது பெரியம்மா... குழந்தைக்காக நாங்களே டாக்டர், டெஸ்ட்ன்னு அலைஞ்சிட்டு இருக்கோம். நீங்க வேற..." என்று தவிப்பும் சலிப்புமாகச் சொன்னாள்.
பார்வதி சிரித்தபடி, ''தெரியும்டி. உனக்குக் குழந்தை ஏக்கம் வர ஆரம்பிச்சிருச்சுன்னு உன் முகத்தைப் பார்த்த உடனே தெரிஞ்சது. கவலைப்படறது இருக்கட்டும், அந்தக் குழந்தை வர்றதுக்கு உங்களைத் தயார்படுத்திக்கிட்ட மாதிரி அறிகுறிகள் எதுவுமே இல்லையே? இப்படி உன் புருஷன் 12 மணிக்கும், நீ 10 மணி வரைக்கும் தினமும் வேலைபார்த்து, பாதி நாள் வெளியிலேயே சாப்பிட்டு, நல்ல தூக்கம் இல்லாம இருந்தா உடம்பு எதுக்கு ஆகும்? உன்னோட சமையலறையில் ஏதாவது சமைக்கலாம்னு பார்த்தா, வெறும் ரெடிமேட் உணவு பாக்கெட்களும் சாஷேக்களும், கண்ட கண்ட பாக்கெட் பொடி வகைகளும் ஊறுகாயும்தான் இருக்கு. வீட்டில் சமைச்சு சாப்பிட்டாலே இப்போவெல்லாம் அது பாதி விஷம் மாதிரிதான். அதுல இப்படியெல்லாம் சாப்பிட்டா, உடம்பு எதுக்கு ஆகும்மா? நல்ல முறையில் சாப்பிட்டு, தூங்கி, உடம்பை கவனிங்க. குழந்தை தானா வரும்.''
மேனகா சோர்வாகப் பேச ஆரம்பித்தாள்.
''அது வந்து பெரியம்மா... இந்த நாலஞ்சு மாசமா டாக்டர்கிட்டே போறோம், எந்தக் குறையும் இல்லேன்னுதான் அவங்களும் சொல்றாங்க. ஆனா, ஏன் இன்னும் குழந்தை தங்கலைன்னு தெரியலையே...''
இந்தக் காலத்துல யாரும் சரிவிகித உணவு சாப்பிடற மாதிரி தெரியலே.
''அடி அசடே... இப்ப எதுக்கு இவ்வளவு கவலை? உங்க ரெண்டு பேருக்கும் இப்ப என்ன 40 வயசா ஆச்சு? 28, 26 தானே ஆகுது? ஒண்ணு தெரியுமா... உடம்பிலே ரொம்ப ரொம்ப சென்சிட்டிவ்வான உறுப்பு இனப்பெருக்க உறுப்புதாம்மா. நீ காலையில ஒழுங்கா சாப்பிடாம விட்டா, சில நாள் ஒழுங்கா தூங்காம இருந்தா, ஓய்வேயில்லாம ஸ்ட்ரெஸ்ஃபுல்லான வேலையில இருந்தா... முதல்ல வேலை நிறுத்தம் பண்றது உன் இனப்பெருக்க உறுப்பாதான் இருக்கும்.''
''என்ன சொல்றீங்க பெரியம்மா..? நான் தினமும் இப்படிப்பட்ட சூழல்லதானே இருக்கேன்... அதனாலதான் நான் கன்சீவ் ஆக முடியலையோ?"

''அதனாலதான்னு உறுதியா சொல்ல முடியும். சாப்பாட்டால் மாத்த முடியாதது எதுவுமே இல்லை. ஆனா, நீங்க சாப்பிடறது எல்லாம் சாப்பாடே இல்லை. எனக்குத் தெரிஞ்சு வேலைக்கு போறவங்களும் சரி, வீட்டில் இருக்கிறவங்களும் சரி... இந்தக் காலத்துல யாரும் சரிவிகித உணவு சாப்பிடற மாதிரி தெரியல. எல்லாத்துக்கும் மேல, நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தாலே நம்ம உடல் தன்னைத்தானே புதுப்பிச்சுக்கும். ஆழ்ந்த தூக்கம்னா நடு ராத்திரி 1 மணியிலயிருந்து காலையில 11 மணி வரை தூங்குறது இல்லம்மா. ஒரு ஒரு வாரத்துக்கு, 10 மணிக்குப் படுத்து காலையில 6 மணிக்கு எழுந்திருச்சு பாரு.''

''எனக்கு இப்போவெல்லாம் தூக்கமே வரமாட்டேங்குது பெரியம்மா. எப்படி டயர்டா இருந்தாலும், என்னவோ முழிச்சிக்கிட்டே தூங்கற மாதிரியே இருக்கு. ஶ்ரீராமுக்கும் இதே பிரச்னை. இதுக்கு என்ன செய்யணும் பெரியம்மா?"
''எப்போ வாழ்கையில ஒரு திருப்தி வருதோ, அப்போதான் நல்ல தூக்கம் வரும். நல்ல உணவையும் அமைதியான வாழ்க்கை முறையையும் பின்பற்றினால்தான் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். ஸ்ட்ரெஸ்ஃபுல்லான லைஃப் இருக்கிறவங்களுக்கு ஆழ்ந்த உறக்கமின்மை காரணமா கனவுகள் அடிக்கடி வரும். சாப்பாடு சரியில்லைன்னா ஒருவரால நேர்மறையாகச் சிந்திக்கவே முடியாது. இந்த உடம்புங்கிறது, ஃபார்முலா ஒன் ரேஸ் கார் மாதிரி ஒரு பொக்கிஷம்மா. அதை எத்தனை குப்பைகளைக் கொண்டு நிரம்ப முடியுமோ அப்படி நிரப்பிடறோம். பல வருடக் குப்பையைக் கொண்ட பழுதான உடல் உறுப்பை, ஒரே நாளில், ஒரே மாதத்தில் மாத்திரை, மருந்து சாப்பிட்டு சரிசெய்ய முடியாது இல்லையா?"
''என்னதான் செய்யட்டும் பெரியம்மா?" என்று பரிதாபமாகப் பார்த்தாள் மேனகா.
''மொத்தத்தில் நீங்க ரெண்டு பேரும் நிறைய விஷயங்களை மாத்தணும். நல்ல ஹார்மோன் சுரக்க ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்க'' என்று பார்வதி சொன்னதுதான் தாமதம், மேனகா சலிப்புடன் சிரித்தாள். ''எங்கே பெரியம்மா அதுக்கு நேரம்?" என்றாள். ''உடல்நலத்தை கவனிக்க நேரத்தை செலவு செய்ய முடியலைன்னா, அதற்கு மேல் 10 மடங்கு பணத்தை செலவு செய்யணும், பரவாயில்லையா?" என்றாள் பார்வதி.
இப்படியாக இரண்டு மணிநேர உரையாடலுக்குப் பின் மேனகாவுக்குத் தன் தவறுகள் எல்லாம் புரிந்தன. ''சரி பெரியம்மா, இன்னும் ஒரே வாரத்தில் நான் இவற்றுக்கெல்லாம் தீர்வு கண்டுபிடிச்சு எங்க வாழ்வியல் முறைகளை மாத்தறேன்'' என்று ஆவலாய் சூளுரைத்தாள்.
என்ன செய்தாள் மேனகா?!
அடுத்த தொடரில்....

தூக்கமின்மையைத் தடுக்கும் உணவுகளைப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திலகவதி
தூக்கமின்மையைத் தடுக்க என்னென்ன ஊட்டச்சத்துகள் தேவை?

நல்ல தூக்கம் வர நான்கு முக்கிய ஊட்டச்சத்துகள் தேவை. அவை டிரிப்டோபன் Ttryptophan), மெக்னீசியம், கால்சியம், மற்றும் வைட்டமின் பி 6. இவை சிர்க்காடியன் தாளத்தை (circadian rhythm- sleep / wake pattern) ஒழுங்குபடுத்துவதற்கான மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய உடலுக்கு உதவும். இயற்கையாகவே சில உணவு வகைகளில் இவை இருக்கின்றன.
நல்ல தூக்கம் வர துணைபுரியும் உணவுகள் என்னென்ன?

* டிரிப்டோபன் (Gryptophan) நிறைந்த பால் பொருள்கள், கோழி, கடல் மீன்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், பயறு வகைகள், பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழம், பீச், வெண்ணெய்ப் பழம் (avocado), காய்கறிகள் (கீரை, புரொக்கோலி, டர்னிப் கீரைகள், அஸ்பாரகஸ், வெங்காயம், கடற்பாசி), தானியங்கள் (கோதுமை, அரிசி, பார்லி, சோளம், ஓட்ஸ்).
* மெக்னீசியம் நிறைந்த அடர் பச்சை கீரைகள் (Green leafy vegetable), இளம் பாலக்கீரை (baby spinach), காலே (kale), சீமை பரட்டைக் கீரை, காலார்ட் கீரைகள் (collard greens), கொட்டைகள் மற்றும் விதைகள், கோதுமை முளை (wheat germ), மீன், வாழைப்பழம், வெண்ணெய்ப் பழம் (avocado), தயிர்.
* கால்சியம் நிறைந்த அடர் பச்சை கீரைகள் (green leafy vegetable), பால், பாலாடைக் கட்டிகள், யோகர்ட், மீன், பலப்படுத்தப்பட்ட தானியங்கள், ஆரஞ்சு. பழச்சாறு, பட்டாணி, வெண்டைக்காய், புரொக்கோலி.

* வைட்டமின் பி 6 நிறைந்த சூரியகாந்தி விதைகள், பிஸ்தா கொட்டைகள், ஆளி விதை (flax seeds), மீன் (டுனா, சால்மன், ஹாலிபட்), இறைச்சி, உலர்ந்த கொடிமுந்திரி (dried prunes), வாழைப்பழம், வெண்ணெய்ப் பழம் (avocado), பாலக்கீரை.
* மெலடோனின் இயற்கையாக நிறைந்துள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் (புளிப்பு செர்ரி, சோளம், அஸ்பாரகஸ், தக்காளி, மாதுளை, ஆலிவ், திராட்சை, புரொக்கோலி, வெள்ளரி).
* தானியங்கள் (அரிசி, பார்லி, உருட்டப்பட்ட ஓட்ஸ்)
* கொட்டைகள் மற்றும் விதைகள் (அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள், கடுகு, ஆளிவிதை).
நல்ல தூக்கம் வரவைக்கும் பானங்கள் என்னென்ன?
* சூடான பால், பாதாம் பால், வலேரியன் தேநீர், கெமோமில் தேயிலை, புளிப்பு செர்ரி சாறு, பேஷன் பழ தேநீர், மிளகுக்கீரை தேநீர் (peppermint tea).

தூக்கத்தைத் தடுக்கும் உணவுகள் எவை?
காஃபின் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், காரமான உணவுகள், மதுபானம், மாவுச்சத்து அதிகமுள்ள உணவுடன் கொழுப்பு மிக அதிகம் உள்ள உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்து உண்ணுதல், தண்ணீர் அதிகம் கொண்ட உணவுகள், படுக்கைக்கு முன் வயிறுமுட்ட உணவு சாப்பிடுவது.