Published:Updated:

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

டாக்டர், பக்கத்துத் தெருவுல கொரோனா வந்துடுச்சு டாக்டர்.

கொரோனா வந்ததும்வந்தது, செய்தித்தாள்களிலும் வாட்ஸப்பிலும் டிவியிலும் நோய் எதிர்ப்புசக்தி டிப்ஸ்களைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள். அவற்றையெல்லாம் நானே ரிசர்ச் செய்து எனக் கேற்ற ஒரு இம்யூனிட்டி இன்புட் மெத்தடாலஜியை உருவாக்கினேன்.

அதியமான் ஔவைக்கு அளித்த சாகாவரம் அளிக்கும் நெல்லிக்காயிலிருந்து ஆரம்பித்தேன். இதில் கிடைக்கும் வைட்டமின் சி-யின் கையைப் பிடித்துக்கொண்டு கொரோனா வரும்போது நைசாக நகர்ந்துகொள்ளலாம். காலை டிபனுக்குப் பதிலாக புரோட்டீன் சத்துக்காக இரண்டு அவித்த முட்டைகள், வைட்டமின் சி காணப்படும் பப்பாளிப்பழம் மற்றும் ஊற வைத்துத் தோலுரித்த எட்டு பாதாம்பருப்பு ஆகியவற்றை சாப்பிடுவதை என் மனைவி விநோதமாகப் பார்க்க… அவரிடம், “உலர்திராட்சை இருக்கா?” என்றேன்.

“ஏன்?”

“இவ்ளோ சாப்பிட்டாலும் ஏதாச்சும் கேப்புல கொரோனா நுழைஞ்சிடும். அந்த கேப்புல உலர்திராட்சைய வச்சு அடைச்சிட்டா நிறைய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கும்” என்றபோது என்னை இம்யூனிட்டி ஸ்பெஷலிஸ்ட்டாக உணர்ந்தேன். உலர்திராட்சைக்குப் பிறகு ஒரு வில்வாதி குடிகா ஆயுர்வேத மாத்திரையை சாக்லேட் போல் கடித்துச் சாப்பிடுவேன். மாலையில் பீட்டா கரோட்டினுக்காக சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்துச் சாப்பிடுவேன்.

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

அலுவலகம் கிளம்பும் நாள் வந்தது. மேலே சொன்ன காலை டிபனோடு ஒரு டம்ளர் கபசுர நீர். பின்னர் ஒயில்ட்கிராஃப்டின் எய்ட் லேயர் மாஸ்க் அணிந்துகொண்டேன். பையில் சானிட்டைசர் மற்றும் சோப். இஞ்சியும் மஞ்சளும் கலந்த மோர் ஒரு பாட்டில். ஒருவேளை மதியத்திற்குள் காலையில் ஏற்றிய வைட்டமின் சி காணாமல்போய்விட்டால், மீண்டும் அதை ஏற்றுவதற்காக எலுமிச்சை ஜூஸ் மற்றும் மதிய உணவாக எலுமிச்சை சாதம். கடைசியாக என் மனைவி பூண்டு ரசத்தையும் எடுத்து வந்து பேகில் வைத்துவிட்டுக் களைப்புடன், “உங்களுக்கு சத்து ஏத்துறதுக்குள்ள என் சத்தெல்லாம் போயிடும்” என்று அமர்ந்துவிட்டார்.

அலுவலகத்தில் லிஃப்ட் பட்டனை டூவீலர் சாவி முனையால் அழுத்தித் திறந்த என் புத்திசாலித்தனத்தை நினைத்து எனக்கே புல்லரித்தபோது, அதே சாவி முனையால் என் மூக்கை முட்டாள்தனமாகச் சொறிந்துகொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் டெட்டால் போட்ட வெந்நீரில் குளித்துவிட்டு வந்து அமர்ந்தவுடன் என் மனைவி சித்தரத்தை, திப்பிலி, அதிமதுரம் மற்றும் மிளகுத்தூளைக் கலந்துசெய்த கஷாயத்தைக் கொடுக்க, அதை அருந்தியபடி உள்ளுக்குள் “நீ ஜெயிச்சுட்ட சுரேந்திரா… ஜெயிச்சுட்ட” என்றேன்.

ஒரு வாரம் ஓடியது. போன் செய்பவர்களுக்கெல்லாம் ஒரே சமயத்தில் புவியியல் நிபுணராகவும், மருத்துவ நிபுணராகவும் மாறி நான், “அதுல பாத்தீங்கன்னா…கடகரேகைக்குக் கீழ உள்ள நாடுங்கள்ல கொரோனா பாதிப்பு கம்மியாதான் இருக்கு. இந்த சிக்குன் குன்யா, டெங்கெல்லாம் வந்தப்ப எவ்வளவோ பேருக்கு வந்துச்சு. இப்ப நமக்குத் தெரிஞ்சு யாருக் காச்சும் கொரோனா வந்திருக்கா?” என்பேன்.

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

“இல்ல…”

“அப்பன்னா என்ன அர்த்தம்? சிக்குன் குன்யா அளவுக்குக்கூட இந்தியாவுல கொரோனா பரவல” என்று அடித்துப் பேசி அச்சத்தை ஆஃப் செய்தேன். ஒரே வாரத்தில் எனக்கு போன் செய்த காதர், “சார்… யாரோ என்னைக் கடத்திட்டு வந்து பின்னி மில்லுல அடைச்சு வச்சிருக்காங்க” என்று எப்படிச் சொல்வானோ அதே டோனில், “சார்… எங்க பக்கத்து வீட்டு நர்ஸுக்குக் கொரோனா வந்துடுச்சு சார். தெருவ சீல் பண்ணிட்டாங்க. ரொம்ப பயமா இருக்கு சார். நமக்கும் கொரோனா வந்துடுமா?” என்று கேட்க… ஏற்கெனவே பயந்துபோயிருந்த நான், “நமக்கும்னு ஏன்டா என்னையும் சேர்க்குற?” என்று அலறினேன்.

மறுநாள் காலை செய்தித்தாள் வாங்கச் சென்றால், அந்தத் தெருவில் யாருக்கோ கொரோனா என்று சீல் வைத்திருக்க, எனக்கு குப்பென்று வியர்த்தது. உணவாலும், நாட்டு மருந்துகளாலும் மட்டும் கொரோனாவைத் தாக்குப்பிடிக்க முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது. கொஞ்ச நாள்களாக அலோபதியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று குடும்ப மருத்துவர் செந்தில் மணிகண்டனுக்கு போன் செய்தேன்.

“டாக்டர், பக்கத்துத் தெருவுல கொரோனா வந்துடுச்சு டாக்டர்.”

“எங்க பக்கத்துத் தெருவுக்கும் கொரோனா வந்துடுச்சு சார்” என்று அவர் சியர்ஸ் சொன்னார்.

“இம்யூனிட்டி மாத்திரை ஏதாச்சும் சாப்பிடலாமா?” என்றேன். அவர் மாத்திரையைச் சொன்னதுடன், “புரோட்டீன் அதிகமானா இம்யூனிட்டி இன்க்ரீஸ் ஆகும்” என்றார்.

ஏற்கெனவே முக்கால் டாக்டராகியிருந்த நான், “அதுக்குதான் டெய்லி ரெண்டு அவிச்ச முட்டை எடுத்துக்குறேன் டாக்டர்…”

“குட். அதுகூட புரொட்டி விஸ்தான்னு ஒரு புரோட்டீன் பவுடர் எடுத்துக்குங்க” என்று கூற… `கழுத அதை மட்டும் விடுவானேன்’ என்று அதையும் பாலில் கலந்து குடித்தேன்.

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

சில நாள்களிலேயே நண்பன் வள்ளிக்குமரன் போன் செய்து, “என் ஃபிரெண்டு ஒருத்தனுக்குக் கொரோனா வந்துடுச்சு. பயமா இருக்கு” என்றான். நான் கிட்டத்தட்ட டாக்டர் ருத்ரன் ரேஞ்சுக்கு அவனை மனோதத்துவரீதியாக அணுகி நம்பிக்கையும் தைரியமும் அளித்துவிட்டு போனை வைத்தபோது நான் டோட்டல் பீதியில் இருந்தேன். மறுநாள் செந்தில் எனக்கு போன் செய்து, “வள்ளிக்குமரன்கிட்ட நேத்து பேசினேன் சார். அவன், ‘சுரேந்தர்கிட்ட பேசினேன். இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கு’ன்னு சொன்னான்” என்று கூற… நான், “என் தைரியத்தை எல்லாம் அவன் வாங்கிகிட்டு பயத்த எனக்குக் கொடுத்துட்டான்” என்று கதறினேன்.

பயந்து பிரயோஜனமில்லை. இன்னும் இம்யூனிட்டியை அதிகரிக்க வேண்டும். பலரும் மிளகும் நுரையீரலும் லவ்வர்ஸ் என்பதால் கொரோனா நுரையீரலை பாதிக்க மிளகு அனுமதிக்காது என்றார்கள். உடனே காலை அவித்த முட்டையுடன் மிளகுத் தூளைத் தொட்டு சாப்பிட ஆரம்பித்தேன். கோயம்பேடு கிளஸ்டர் பாவத்தில் தினந்தோறும் 50, 60 என்று இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500, 600 என்று கிர்ரென்று எகிறியது. அந்த நாள்களில் சக மனிதர்களைப் பார்த்தாலே மனித வெடிகுண்டுகளைப் பார்ப்பதுபோல் திகிலாக இருந்தது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து கதவைத் திறந்தால், எதிர்வீட்டிலேயே ஒரு டாக்டருக்குக் கொரோனா என்று ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ என்று போர்டு வைத்திருக்க… ஒரு விநாடி நாடித்துடிப்பு எகிறி அடங்கியது. வேறு வழியே இல்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை எக்கச்சக்கமாக அதிகரிக்கவேண்டும். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காப்பதற்காக கேரள அரசு அபராஜித தூப்ஸ் சூரணம், சுதர்ஸன் மாத்திரை, சதாங்கம் கஷாய சூரணம் ஆகியவற்றைப் பரிந்துரைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதில் சுதர்ஸன் மாத்திரையில் மட்டும் புஷ்கரமூலம், வால் மிளகு, தண்ணீர்முட்டான் கிழங்கு, காட்டுப்பேய்ப் புடலை, சித்திரப்பாலாடை போன்ற 150 மூலிகைகள் அடங்கியிருப்பதாகப் படித்தபோதே உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடுகிடுவென்று ஏறியது. இவையெல்லாம் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைக்கும். ஆனால் ஏற்கெனவே ஆர்சனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி மாத்திரை வேறு எடுத்துக்கொண்டிருக்கிறேன். இத்துடன் இதையெல்லாம் மருத்துவரின் அறிவுரையின்றி ஓவராக எடுத்துக்கொண்டால் வேறு ஏதேனும் உடல் பிரச்னை வந்துவிடும் என்பதால் அதிலெல்லாம் கை வைக்காமலே இருக்கிறேன்.

நோயா, நானா ஒரு கை பார்ப்பேன்!

இதனிடையே சித்த மருத்துவர் ஒருவர் பேட்டியைப் படித்துவிட்டு என் மனைவியிடம், “உனக்கு ஆவாரம்பூ சாம்பார், கற்பூரவல்லி ரசம்லாம் வைக்கத் தெரியுமா?” என்று நைசாகக் கேட்டேன். உடனே ஆத்திரத்துடன் என் மனைவி, “அய்யா சாமி… உங்களுக்கு செஞ்சு போட்டு என்னால மாளல. வேணும்னா இதையெல்லாம் செய்றதுக்குன்னே இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்குங்க” என்று கூற… இந்த ரணகளத்திலும் ‘இன்னொருத்தி’ என்றவுடன் எனக்குக் கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.