Published:Updated:

ஏட்டு ஏகாம்பரம் காலிங்... கைதி ரன்னிங்... இது கொரோனா வார்டு சேஸிங்!

Representational Image
News
Representational Image

கொரோனா வார்டில் சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அந்தச் சூழலில் நடைபெற்ற ஹாஸ்ய அனுபவங்களின் தொகுப்பு.

எந்த இறுக்கமான சூழலையும் தளர்த்தும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. எந்த இறுக்கமான சூழலிலிருந்தும் நகைச்சுவை வெளிப்படும். தற்போதைய சூழலில், இந்த இரண்டுக்கும் உதாரணமாக கொரோனா சிகிச்சை வார்டுகளைக் குறிப்பிடலாம். சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு நடந்த சில ஹாஸ்ய அனுபவங்களின் தொகுப்பு இது:

``எனக்கு எண்டே இல்ல!"

லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா வார்டில் பணியாற்றும் தமிழக ஆண் செவிலியர் பகிர்ந்துகொண்ட சம்பவம் இது:

``கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி 96 வயசு பாட்டி வந்து மருத்துவமனையில அட்மிட் ஆனாங்க. 96 வயசுன்னாலும் படு சுறுசுறுப்பு. அந்தப் பாட்டிக்கு டிமென்ஷியானு சொல்ற மறதிநோயின் தீவிர நிலை. அதனால பழசு மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்பவும் 1950-கள்ல இருக்குற மாதிரிதான் நடந்துப்பாங்க.

ஒரு இடத்துல உட்காரவே மாட்டாங்க. இல்லாத சேட்டை எல்லாம் பண்ணுவாங்க. இந்தப் பாட்டி பண்ற அலம்பல் தாங்காம, அங்க இருக்குற எல்லா மருத்துவர்கள், செவிலியர்கள் மனசுலயும் `இவங்க எப்படா இங்க இருந்து வீட்டுக்குப் போவாங்க'ன்னு தோணிச்சு. அந்த அளவுக்கு அட்ராசிட்டி பண்ணிட்டே இருப்பாங்க அந்தப் பாட்டி. சில அறிகுறிகளோட அவங்களைக் கொண்டுவந்து அட்மிட் பண்ணினாங்க. பரிசோதனை முடிவுல பாட்டிக்கு கொரோனா பாசிட்டிவ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Representational Image
Representational Image

நாலு நாளா பாட்டி படுத்த படுக்கை. ஐந்தாவது நாள் எங்க எல்லார் மனசுலயும் வெற்றிடம்.

பாட்டியின் சேட்டைகளை எல்லாருமே மிஸ் பண்ண ஆரம்பிச்சோம். அன்னைக்கு மட்டும் ஆறு பேர் இறந்து போயிட்டாங்க. யாரெல்லாம் பாட்டி கிளம்பிப் போனா நல்லாருக்கும்னு நினைச்சாங்களோ, அவங்க எல்லாருமே பாட்டிக்காக கவலைப்பட ஆரம்பிச்சாங்க.

சிலர் அழக்கூட செஞ்சாங்க. பாட்டிக்கு சுயநினைவே இல்ல... மூச்சு மட்டும் வந்தது. அவ்ளோதான்னு நினைச்சோம்.

அடுத்த நாளு காலைல பெட்ல இருந்து எழுந்து உட்கார்ந்துகிட்டு,``ஐ ஸ்லெப்ட் லாங் வே...வேர் இஸ் மை ப்ரேக்ஃபாஸ்ட்?"ன்னு தோரணையாகக் கேட்டாங்களே பாக்கலாம். எல்லாரும் துள்ளிட்டோம். இப்போ பழையபடி சேட்டை பண்ணிட்டு இருக்காங்க.

நாங்க எல்லாரும் துள்ளுனப்ப பாட்டி பார்த்த பார்வை... ``எண்டு கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க... எனக்கு எண்டே இல்லடா...!”ன்னு வடிவேலு சொன்ன மாதிரியே இருந்துச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மட்டனும் மசாலாவும்!

வெஜிடபிள் பிரியாணியிலேயே லெக் பீஸ் தேடும் அசைவப் பிரியர் அவர். கொரோனா வார்டில் அட்மிட் செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் தீவிர டயட். போதாக்குறைக்கு அரசு வேறு டயட் சார்ட் வெளியிட்டு, இதைத் தவிர வேறு உணவு வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. ஓரிரு நாள்கள் சமாளித்தவருக்கு அதற்கு மேல் முடியவில்லை.

அன்றைய தினம் மதியம் சாப்பாடு வழங்கப்பட்டபோது, அதைக் கண்காணிக்க வந்த செவிலியரிடம், ``சிஸ்டர்! நான்வெஜ் சாப்பிடாம நாக்கே செத்துப்போன மாதிரி இருக்கு. ஒருநாள் மட்டன் சாப்பாடு கிடைக்குமா?" எனப் பரிதாபமாகக் கேட்டிருக்கிறார்.

செவிலியரோ, ``வாய்ப்பில்ல ராஜா!" என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

Representational Image
Representational Image

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நான்வெஜ் பிரியர், மறுநாளும் செவிலியரிடம் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். செவிலியரும் அதே பதிலை வேறு மாதிரி சொல்லிவிட்டு, அடுத்தடுத்த படுக்கையில் இருந்த நோயாளிகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையிலிருந்த நான்வெஜ் பிரியர் மீண்டும் அந்தப் பக்கம் வந்த செவிலியரிடம், ``மட்டன்தான் இல்லன்னு சொல்லிட்டிங்க... அட்லீஸ்ட் நாளைக்கு சமைக்கிற சாப்பாட்டுல கொஞ்சம் மட்டன் மசாலா போட்டு சமைச்சுத் தர முடியுமா சிஸ்டர்?" எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டிருக்கிறார்.

மூன்றடுக்கு கவச உடையையும் தாண்டி செவிலியரின் சிரிப்பு அந்த அறையை நிறைத்தது. கடைசிவரை மட்டனையும் மசாலாவையும் கண்ணில் காட்டவேயில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமந்தாவை வரச் சொல்லுவாங்களா?

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அத்தியாவசியத் தேவைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை மருத்துவமனையிலேயே ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு நபர், காலையிலேயே ரவுண்ட்ஸ் வந்த ஆண் செவிலியரிடம் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டூத்பேஸ்ட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஏற்கெனவே வாங்கி இருப்பு வைத்திருந்த வேறு பிராண்ட் பேஸ்ட்டை பயன்படுத்த மறுத்துவிட்டார்.

மருத்துவமனையிலிருந்து ஒரு நபரை அனுப்பி, அதே பிராண்ட் டூத் பேஸ்ட்டை வாங்கி வரச் சொல்லி நோயாளியிடம் கொடுக்கப்பட்டது. வாங்கிப் பார்த்தவருக்கு கோபம் பொங்கிவிட்டது. ``உப்புள்ள பேஸ்ட்தான் எனக்கு வேணும். இந்தப் பேஸ்ட்ல உப்பு இல்ல."

Representational Image
Representational Image

``சார்! இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க. நாளைக்கு அதே பேஸ்ட் வாங்கித் தர்றோம்" சொல்லிவிட்டு செவிலியர் டியூட்டி ரூமுக்குச் சென்றுவிட்டார்.

கண்ணாடி அறையில் சென்று அமர்ந்த ஆண் செவிலியரின் முன்னால் வந்து நின்றிருக்கிறார் அவர்.

``எனக்கு உடனே உப்பு போட்ட பேஸ்ட் வேணும். இல்ல, பக்கத்துல உங்களை வந்து கட்டிப்பிடிச்சுடுவேன். அப்புறம் உங்களுக்கும் இந்த வார்டுதான்!"

தலைதெறிக்க ஓடிய செவிலியர் பணியாளரை அழைத்து, ``எத்தனை ரூபாய் செலவானாலும் பரவாயில்ல, போய் முதல்ல அந்தப் பேஸ்டை வாங்கிட்டு வாங்க!" என்றிருக்கிறார்.

``பேஸ்டை வாங்கிக் கொடுக்கும்போது, சமந்தா வந்து குடுத்தாதான் வாங்குவேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க சார்!" பணியாளர் கலாய்க்க, நோயாளி கட்டிப்பிடிக்க வந்த சீன் மனதில் ஓட, உறைந்து நின்றுவிட்டார் செவிலியர்.

வராத பஸ்ஸுக்கு வெயிட்டிங்!

70 வயது நிரம்பிய முதியவர். கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனை முடிவுகள் தெரியாத நேரம் அது. மருத்துவமனையில் ஓரிரு நாள்கள் இருந்தவருக்கு இருப்புக்கொள்ளவில்லை.

``ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வண்டிலயே போய் வியாபாரம் பாக்குறவன். என்னைக் கொண்டுவந்து இங்கே போட்டுட்டீங்களே" என்று பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பார்.

பரிசோதனை முடிவு தெரியாமல் அனுப்ப முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

Representational Image
Representational Image

பொறுத்துப் பொறுத்து பார்த்தவர், வார்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை துரத்திக்கொண்டே செவிலியர்களும் ஓட்டமெடுத்திருக்கின்றனர்.

வாசலில் இருந்த காவலர்களால் முதியவருக்கு இணையாக ஓடவே முடியவில்லை. காவலுக்கு இருந்த போலீஸாரோ அவரை தொட்டுப் பிடித்து, நமக்கு நோய் பரவிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து நின்றுவிட்டனர்.

மருத்துவமனையிலிருந்து தப்பித்த முதியவர், அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றுவிட்டார். பொதுப் போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதை அறியாமல், வராத பேருந்துக்காக மணிக்கணக்காக நின்றுகொண்டே இருந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் போலீஸார் திறமையாக முதியவரைப் பிடித்து மருத்துவமனைக்கு திரும்பக்கொண்டுவந்து விட்டுவிட்டனர்.

இத்தனை அட்ராசிட்டியையும் செய்த முதியவருக்கு, மறுநாள் டெஸ்ட் ரிப்போர்ட் நெகட்டிவ்!

ஏட்டு ஏகாம்பரம் காலிங்!

பெட்டி கேஸில் சிறையிலிருந்த கைதி தப்பித்துப் போக முடிவெடுத்து, போலீஸாரிடம் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் பீதியைக் கிளப்பிவிட்டார்.

இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு, கைதியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றதும் கொரோனா அறிகுறிகளை அப்படியே சொல்லியிருக்கிறார் கைதி. உடனே, கொரோனா புறநோயாளிகள் பிரிவுக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டனர்.

காவலர்கள் துணையுடன் புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றவர் அங்கிருந்தவர்களிடம், ``பாத்ரூம் போகணும்... அர்ஜென்ட்" என்றிருக்கிறார். கொரோனா வார்டு பகுதிக்குள் கழிவறை இருக்கிறது என்று அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீஸார் துணையுடன்.

Representational Image
Representational Image

வார்டு பகுதியின் வெளிப்புற கதவில் காவலுக்கு நின்றவாறு, கைதியை கழிவறைக்கு அனுப்பிவைத்தனர் போலீஸார். அம்மா சென்டிமென்டில் கலங்கிய திருடனை வீட்டுக்குள் அனுப்பிய வடிவேலுவைப் போன்று வாசலிலேயே வெகு நேரம் நின்ற போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க, ``இந்த வார்டுக்கு இங்க ஒரு வாசல் இருக்கு... பின்னாடி ஒரு வாசல் இருக்கு சார்!" என்று அவர் சொல்ல... போலீஸாரின் ரியாக்‌ஷன் சொல்லவா வேணும்?

பின்பக்க வாசல் வழியாக அந்தக் கைதி தப்பித்து ரொம்ப நேரமாகியிருந்தது.

நிஜமாவே ஏட்டு ஏகாம்பரமாகவே ஏமாந்து போன போலீஸார், இரண்டு நாள்கள் கழித்து தப்பித்த கைதியைப் பிடித்திருக்கின்றனர்.