Published:Updated:

அடடே... கொரோனாகூட எப்டிலாம் வாழப்பழகிட்டோம்ல? ஒரு கொ.மு.,கொ.பி டைரி!

கொரோனா
News
கொரோனா ( ஓவியம்: கார்த்திகேயன் மேடி )

கி.மு, கி.பி என்பதுபோல கொ.மு கொ.பி என்று கொரோனா சில கலாசார மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கொரோனா உடைத்த / உடைக்கப்போகும் ஃபர்னிச்சர்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

- விலகியிருத்தல் ஓகே. வீட்டிலேயே இருத்தலால் ஊர்ப்பெயர்கள் பெருத்த மாற்றத்தைச் ச‌ந்தித்தது போல (பேர் இடர்?!) பலருடைய உருவமும் `பெருத்த' மாற்றத்தைச் சந்தித்திருக்கும். உங்கள் சிட்டியின் பெயர் ஒபிசிட்டி என்று மாற்றப்பட‌லாம். விண்ணைத்தாண்டி வருவாயா என்று கேட்ட காலம் போய், இனி வீட்டைத் தாண்டி வருவாயா... அதாகப்பட்டது, வாசல்தாண்டி வர முடியுமா என்று கேட்க நேரிடும்.

- விருந்தோம்பல்தான் நமது பண்பாடு. ஆனால், இப்பொழுது கூடாமல் வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். கொரோனனாவுக்குப் பின் இனி கரம்கூப்பி வணங்குதல் அதிகம் நிகழும், இது ஒரு மகிழ்ச்சி`கரமான' செய்தி. கைகுலுக்கல் வழக்கொழியும்.

- 90'ஸ் கிட்ஸ்களுக்கு வள்ளி படம் நினைவில் இருக்கலாம். வள்ளியை ரீமேக் செய்தால், `சந்தனம், ஜவ்வாது, சானிடைசர் நீ எடுத்துச் சேர்த்துக்கோ... எதுக்குடா? வள்ளி வரப்போறா..!' என்று பாடல்கூட வைக்கக்கூடும்.

- குழு புகைப்படங்களைக் காட்டும்போது அந்த போட்டோல மூணாவதா மாஸ்க் போட்டு நிக்கிறது நான்தான் என்று அடையாளப்படுத்துவோம்.

- மூக்குல விரல் வைக்குற மாதிரி எனும் சொற்றொடர் இனி மாஸ்க்மேல விரல் வைக்குறமாதிரி என்றாகலாம்.

- அனைத்துப் பள்ளிகளின் மாஸ்க்குகளும் இங்கே கிடைக்கும் என்று வருங்காலத்தில் துணிக்கடைகளில் அறிவிப்பைக் காணலாம். பள்ளியில் முறத்தால் புலியை விரட்டிய வீர வரலாறு மறந்து, கைதட்டி கொரோனாவை விரட்டிய வரலாற்றைப் படிக்க நேரிடும்.

`டெட்டாலைத் தொட்டு தினம்கழு வோர்க்கில்லை

தொட்டால் பரவிடும் தொற்று'

என்பன போன்ற‌ திருக்குறளைக் கொரோனாபரவாமை அதிகாரத்திலிருந்து படிக்க நேர‌லாம். `கும்பலாகச் சுத்துவோம் அய்யோ அம்மான்னு கத்துவோம்' எனும் பாடல் நம் முன்னோர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு கூடி வாழ்ந்ததைக் காட்டுகிறது என்று வரலாற்றில் படிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

- ஆதியில் ஓர் அலுவலகம் இருந்தது. அங்கு வேலை இருந்ததுன்ற மாதிரி.. ஆபீஸ்லதான் எல்லாரும் போய் வேலை பாப்பாங்களாம் என்று நம்மைப்பற்றி வருங்காலச் சந்ததிகள் பேசக்கூடும். ஹோம் ஒர்க்கை ஒழுங்கா பண்ணு அப்பதான், அப்பா மாதிரி வொர்க்ஃபிரம் ஹோம் பண்ணலாம் என்று அறிவுரைகள் வழங்கப்படலாம்.

- மாஸ் ஹீரோக்கள் மாஸ்க் ஹீரோக்களாகும் சாத்தியமுண்டு. காப் (COP) ஸ்டோரியில் நடித்தவர்கள், காஃப் (COUGH) ஸ்டோரிகளில் நடிப்பர். ஒத்தசெருப்பு போன்ற ஒருவர் (தனி ஒருவன்) நடிக்கும் படங்கள் பெருகலாம். ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் பஞ்சாயத்துப்படங்கள் அப்படியே தொடரும். எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும், யாருமில்லா தனியரங்கில் போன்ற பாடல்கள் அதிகமாகலாம்.

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

- தாதாக்கள் அடைமொழி, கொக்கிகுமாரிலிருந்து கொரோனா குமாராகலாம். பிறருடைய‌ வீடுகளில் வொர்க் ஃபிரம் ஹோம் செய்யும் பிறரறியாப் பொருள் எடுப்பாளர்களுக்கு ( திருடர்கள்தான்), சமூகத்தில் அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால்,அவர்களுக்குப் பணிச்சுமை குறையலாம்!

- உணவகங்களுக்குச் செல்வது குறையலாம். மக்கள் அங்கு கிடைக்கும் உணவுகளை வீட்டிலேயே சமைக்க முயற்சி செய்யலாம். அதைப் பரிசோதித்துப் பார்க்க நாம் பரிசோதனை எலி ஆகலாம். அந்தப் பதார்த்தத்துக்கு நாம் பலியும் ஆகலாம். காகிதச் சுரைக்காய் கறிக்கு உதவாது, சாஃப்ட்காபி சுரைக்காய் சாம்பாருக்கு உதவாது என்பதால் வீட்டுத் தோட்டங்கள் அதிகரிக்கும்.

- மாஸ்க்கை தாண்டி

மனதில் நுழைந்த

காதல் கொரோனா நீ"

என 144 நேரத்து 143 கவிதைகள் (?!) உருவாகலாம். விலகி இரு, வீட்டில் இரு என்று கைகழுவும் பதில் வந்தால் ப்ரொஃபசல் பருத்தி மூட்டைகள் குடோனிலேயே இருக்கவும் நேரலாம். இப்படியாக முரட்டுசிங்கிள்கள் அங்கிள்களாகும் சாத்தியக்கூறுகள் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

- ஆலயங்களில் கொரோனா சஷ்டி கவசம் பாடப்படலாம். (முகக்கவசம் அணிந்துதான்). சளீஸ்வரர், கொரோனா காத்த காளியம்மன், மாஸ்க்காத்தா, கோரன்டேசுவரர் என புது தெய்வங்கள் உருவாகலாம். அதற்குப் பட்டுத்துணியில் மாஸ்க் கட்டும் பரிகாரங்கள் நடக்கலாம். இருமல், தும்மல் வந்தால் கோரன்டைன் பூஜைகள் நடக்கலாம்.

- விளையாட்டுக்குக்'கூட வெளியில் போகாத தலைமுறை உருவாகும். குழு விளையாட்டுக்கள் குறையலாம். வீட்டிலேயே விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்கள் இன்னும் பிரபலம் ஆகும். தாயம் விளையாட்டு சம்பிர`தாயம்' ஆகலாம். கும்பல் கூடும் விளையாட்டரங்குகளில் கொரோனா ஜாக்கிரதை எனும் அறிவிப்புப் பலகைகள் தென்படலாம்.

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

- மாஸ்க் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஆனால் மாசு குறைந்திருக்கிறது. கும்பலாகச் சுற்றுவது குறைந்திருக்கிறது. ஆனால், குடும்பத்தோடு இருப்பது அதிகமாகியிருக்கிறது. கொரோனாவும் ஒரு வைரஸ்தானே என்று மனம் விட்டுப் பேசமுடியாதுதான் என்றாலும் அதனால் அடைந்த நன்மைகள் சிறிதேனும் உண்டென்பதை மறுக்கமுடியாது. அதன் கொடூரத்தையும் மறக்கமுடியாது.

விழிப்போடு இருப்போம். எல்லாரும் நல்லா இருப்போம்!

- சிவ.அறிவழகன்