ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

“நானும் டாக்டர்தான்!” பைக் மெக்கானிக் கௌதமன்

பைக் மெக்கானிக் கௌதமன்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் மெக்கானிக் கௌதமன்

உடலுக்கும் தொழிலுக்கும் - 16

‘தொட்டுத் தொட்டு என்னை

வெற்றுக் களி மண்ணைச்

சிற்பமாக யார் செய்ததோ...’

- ‘காதல்’ திரைப்படத்துக்காக நா.முத்துக்குமார் எழுதிய பிரபலமான பாடல். இந்தப் படத்தின் கதாநாயகன் பைக் மெக்கானிக். அழுக்கு உடை, கிரீஸ் டப்பா, ஸ்பேனர், டயர் சகிதமாக, பழைய வாகனங்களுடன் நாள்களைக் கடத்தும் இளைஞனுக்குள் பூக்கும் காதலை மையமாகக்கொண்ட திரைப்படம். இந்தக் கட்டுரையின் நாயகனும் பைக் மெக்கானிக்தான். இவரும் காதல் திருமணம் செய்துகொண்டவரே.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன். கோடம்பாக்கம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பைக் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க உடலுழைப்பை மூலதனமாகக்கொண்ட இந்தத் தொழிலின் மறுபக்கத்தை அறிந்துகொள்ள அவரைச் சந்தித்தோம்.

 “நானும் டாக்டர்தான்!” பைக் மெக்கானிக் கௌதமன்

“எட்டாவதுவரை படிச்சேன். அதுக்கப்புறம் படிப்பு ஏறாததால, எங்க அப்பா ஒரு மோட்டார் கம்பெனியில என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். முதல்ல மெக்கானிக் ஒருத்தரிடம் ஹெல்ப்பரா வேலைக்குச் சேர்ந்து படிப்படியா வேலைகளைக் கத்துகிட்டேன். 1986-ம் வருஷம் கோடம்பாக்கத்துல தனியா கடை ஆரம்பிச்சேன்.

என் மனைவி தேவி ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கும்போதே காதலிச்சு, திருமணம் செய்துகிட்டேன். `நாமதான் படிக்கலை; தேவியையாவது படிக்கவெச்சிடணும்’னு நினைச்சேன். கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க படிப்பு பாதியில நின்னுடக் கூடாதுனு ப்ளஸ் டூ முடிச்சதும், அவங்களை பி.ஏ படிக்க வெச்சேன். இப்போ ஒரு தனியார் நிறுவனத்துல நிதிப் பிரிவுல வேலை பார்க்குறாங்க.

மெக்கானிக் தொழிலுக்கு நிறைய டிமாண்ட் இருக்கு. ஆனா, முன்ன மாதிரி உதவிக்கு ஆள் (ஹெல்ப்பர்) கிடைக்கறதில்லை. அதனால எல்லா வேலைகளையும் நான் ஒருத்தனே பார்க்கிறேன். முன்னாடியெல்லாம் காலைல 9 மணிக்கு கடையைத் தொறந்தா, ராத்திரி 12 மணிவரைகூட வேலை இருந்துட்டே இருக்கும். ஒரு நாளைக்கு அஞ்சாறு வண்டிகள்ல வேலை பார்ப்பேன். இப்போ காலைல 11 மணியிலருந்து ராத்திரி 9 மணிவரைதான் வேலை பார்க்கிறேன். அதுக்கு மேல கடையைத் தொறந்துவெச்சா போலீஸ் தொந்தரவு பண்ணுவாங்க. ஒரு நாளைக்கு இரண்டு வண்டிங்கதான் எடுத்துப்பேன். உதவிக்கு ஆள் இல்லாததால சின்னச் சின்ன வேலைகளையெல்லாம் எடுக்குறதில்லை. சர்வீஸ் பண்ற வண்டிங்க, இன்ஜின் ரிப்பேர் இது ரெண்டுதான் முக்கியமா பண்றேன். டிவிஎஸ்-50லருந்து ராயல் என்ஃபீல்டு வரைக்கும் எல்லா வண்டிகளையும் ரிப்பேர் பார்ப்பேன்.

சிலர் ஸ்பேர் பார்ட்ஸே கிடைக்காத ரொம்ப பழைய வண்டியையெல்லாம் ரிப்பேர் பண்ணித்தரச் சொல்வாங்க. அதுல சிலர் ரொம்ப சென்டிமென்ட்டா அந்த வண்டியைப் பல வருஷமா வெச்சிருந்திருப்பாங்க. சிலர், ‘ஓடுறவரைக்கும் ஓடட்டும்’னு வெச்சிருப்பாங்க. அதனால முதல்லயே தெளிவா சொல்லிருவேன். ‘இந்த வண்டிக்கெல்லாம் இப்போ ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது, ரெடி பண்ணணும்னா கொஞ்சம் செலவாகும்.’ அதுக்குத் தயாரா இருந்தாதான் வண்டியை ரிப்பேர் பார்ப்பேன். இல்லைன்னா அந்த வேலையை எடுத்துக்க மாட்டேன்.

இந்த வேலையில அடிக்கடி காயம்படும். பைக் செயின்ல ஆயில் போடும்போது விரல், செயினுக்கு நடுவுல மாட்டிக்கும். மட்கார்டு தகரம் கையைக் கிழிச்சுடும். ஒரு தடவை தீவிரமா வேலை பார்த்துட்டு இருக்கும்போது ஒரு ஸ்க்ரூ டிரைவர் தெறிச்சி விழுந்து, நான் போட்டிருந்த ஷூவையும் தாண்டி என் காலைக் குத்திக் கிழிச்சிருச்சு. காயம் இல்லாம வீட்டுக்குப் போற நாள்கள் ரொம்ப கம்மி. உட்கார்ந்து ஒரேநிலையில வேலை செய்றது முதுகுவலி, மூட்டுவலினு தொந்தரவு தரும்.

ஆரம்பத்துல மெக்கானிக் வேலைக்கான அழுக்கு டிரெஸ்ஸை வீட்டுலருந்தே போட்டுட்டு வந்துருவேன். வேலை முடிஞ்சு போகும்போதும் அந்த டிரெஸ்ஸோடவே போயிடுவேன். ஆனா இப்போ காலைல வீட்லருந்து வரும்போது நல்ல டிரெஸ் போட்டுட்டு வந்துடுறேன். இங்கே வந்து மெக்கானிக் டிரெஸ்ஸை மாத்திப்பேன். அதையும் மூணு நாளைக்கு ஒருமுறை மாத்திடுவேன். வீட்டுக்குப் போகும்போது காலைல போட்டுட்டு வந்த டிரெஸ்ஸைப் போட்டுட்டுப் போவேன்.

இந்தத் தொழில்ல வேளா வேளைக்கு சாப்பிடுறது சிரமம். சாப்பிடுற நேரத்துல அவசர வேலை வந்தா சாப்பாட்டை மறந்திட வேண்டியதுதான். அடிக்கடி தண்ணி குடிக்கவும் முடியாது. டீ, காபிலதான் என் வண்டி ஓடுது. சாப்பிட்டாலும் கடை சாப்பாடுதான். இதனால ஒரு கட்டத்துல அல்சர், சிறுநீரகக்கல்லுனு பல பிரச்னைகள் வந்தது. அதனால இப்போ சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருக்கேன். வீட்லருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்திடுறேன். முடிஞ்சவரைக்கும் நேரத்துக்குச் சாப்பிடறேன். டீயையும் குறைச்சிட்டேன். கஸ்டமர் யாராவது டீ வாங்கித் தந்தாக்கூட, ‘இப்போதான் குடிச்சேன்’, `சாப்பிடப் போகணும்’னு எதையாவது சொல்லி நாகரிகமா தவிர்த்திடுவேன்.

வண்டிப் புகை என்னை மாதிரி மெக்கானிக்குகளுக்கு பெரிய பிரச்னை. மெக்கானிக் கடைகள் பெரும்பாலும் மெயின் ரோட்டுலதான் இருக்கும். ‘ரிப்பேர் பார்க்குற வண்டிகள்லருந்து வெளியேறும் புகை மட்டுமில்லாம, ரோட்ல ஓடுற வண்டிங்களோட புகையெல்லாம் சேர்ந்து ஏதாவது பிரச்னையை உண்டு பண்ணும்’னு பயமா இருக்கும். இந்தத் தொழில்ல இருக்கிறவங்களுக்கு ஆயுசு கம்மிதான்.

 “நானும் டாக்டர்தான்!” பைக் மெக்கானிக் கௌதமன்

முன்னாடியெல்லாம் மெக்கானிக்கைப் பெருசா மதிக்க மாட்டாங்க. ஆனா இப்போ ‘சார்’, `ஜி’னு மரியாதையாதான் பேசுறாங்க. யார் வீட்டுக்காவது வண்டியை விடுறதுக்கு போனாக்கூட உள்ளே கூப்பிட்டு உட்காரவெச்சு காபி, டீ தந்துதான் அனுப்புவாங்க. ‘சட்டை அழுக்கா இருக்கு’னு சொன்னாக்கூட, ‘அதனால என்னங்க, மனசு சுத்தமா இருந்தாப் போதும், முதல்ல உட்காருங்க’னு சொல்றவங்க இருக்காங்க. மெக்கானிக் வேலையைப் பொறுத்தவரைக்கும், வருமானத்துக்கு குறைவில்லை. ஆனா, இந்தத் தொழிலுக்கு வர்றவங்க குறைஞ்சிட்டாங்க. இதுக்கான படிப்புகளைப் படிக்கிறவங்க பெரிய பெரிய கம்பெனியில வேலைக்குப் போயிடுறாங்க. அதனால மெக்கானிக் கடைகளுக்கு டிமாண்ட் இருந்துட்டுதான் இருக்கு.

உதவிக்கு ஆள் கிடைக்காததுதான் பெரிய சிரமமா இருக்கு. ‘இந்த வயசுல வாழ்க்கையில செட்டில் ஆகியிருக்கணும். உதவிக்கு ஆள்கூட இல்லாம ஒண்டியா கஷ்டப்படுறோமே’னு சில நேரம் மனசு ரொம்ப வருத்தமா இருக்கும். எத்தனை சலிப்பு இருந்தாலும், இத்தனை வருஷமா என்னைக் காப்பாத்துன இந்தத் தொழில் என்னை எப்பவும் கைவிடாது.

ஆபத்துல உயிரைக் காப்பாத்துற டாக்டர் மாதிரி, பைக்கை சரி செஞ்சு, மறுபடியும் ஓடவைக்கிறோம். அதனால மெக்கானிக்கும் ஒருவகையில டாக்டர்தான்... அதாவது ‘டூ வீலர் டாக்டர்’’ - பெருமையாகச் சொல்கிறார் கௌதமன்.

வந்தனை செய்வோம்...

முகக்கவசம் அணிந்து வேலை பார்ப்பது நல்லது!

மெக்கானிக் தொழிலில் ஈடுபடுவர் தனது உடல்நலனை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் பொது மருத்துவர் அர்ஷத் அகில்.

“மெக்கானிக் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள் என்பதால் செரிமானக் கோளாறு, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு அடிக்கடி டீ குடிப்பது, புகைப்பழக்கம் போன்றவை இருக்கும். அதனால் இருமல், நுரையீரல் கோளாறு, காசநோய், புற்றுநோய் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே, புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. அடிக்கடி டீ குடிக்கும் பழக்கத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

 “நானும் டாக்டர்தான்!” பைக் மெக்கானிக் கௌதமன்

உடலுழைப்பு, வெப்பத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவது போன்றவற்றால் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு தண்ணீர். வேலையின் நடுவே தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டியது முக்கியம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் மலச்சிக்கல், மூலநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையின் நடுவே 5, 10 நிமிடங்கள் எழுந்து அந்தப் பகுதியிலேயே சிறிய நடைப்பயிற்சி செய்ய வேண்டும். காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாகனப் புகை, சாலை ஓரத்தில் வேலை பார்ப்பதால் ஏற்படும் காற்று மாசு ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி தும்மல், இருமல், சுவாசப் பிரச்னை, ஆஸ்துமா போன்றவற்றை வரவழைக்கலாம். அதனால் எப்போதும் முகக்கவசம் அணிந்து வேலை பார்ப்பது நல்லது. முகக்கவசம் அணிவதற்குத் தொடக்கத்தில் சிறிது சங்கோஜமாக இருக்கும். நாளடைவில் அது பழகிவிடும். பல நாடுகளில் மாசு நிறைந்த இடங்களில் வேலை பார்ப்பவர்கள் தவறாமல் முகக்கவசம் அணிகிறார்கள்.

காயம் அதிகம் ஏற்படும் துறை என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காயங்களால் ரண ஜன்னி ஏற்பட்டு சில நேரங்களில் ஆபத்தில் முடியலாம். காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி மருந்து போட வேண்டும். பெரிய அளவிலான காயம் என்றால் உடனே மருத்துவரை அணுகி தையல் போட்டு, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக டெட்டனஸ் டாக்ஸைடு (டி.டி) ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு முறை ஊசி போட்டால், மூன்று மாதங்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கும். காயங்களைப் பொறுத்தவரை, ‘இது வழக்கமாக ஏற்படுவதுதானே’ என்று அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எந்தத் துறையில் வேலை செய்தாலும், தான் பணியாற்றும் துறையில் என்னவெல்லாம் பிரச்னை ஏற்படும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டும். அப்படி விழிப்புணர்வுடன் இருந்தாலே உடல்நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கிவிடுவார்கள்.”

குளிர்பானங்கள் வேண்டாமே!

ஒரு நாளைக்கு ஒருவர் கால் லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றால், அவரது இரைப்பை கால் லிட்டர் அளவு விரிவடையும்.

 “நானும் டாக்டர்தான்!” பைக் மெக்கானிக் கௌதமன்

அதுவே வாயு நிரப்பப்பட்ட கால் லிட்டர் குளிர்பானத்தைப் பருகினால், இரைப்பையானது அரை லிட்டர்வரை விரிவடையும், இதன் காரணமாக உணவுக்குழாய் நோக்கி, இரைப்பையின் அமிலம் கலந்த கூழ்மங்கள் எதுக்களிக்கும். தொடர்ந்து இப்படி நிகழும்போது, உணவுக்குழாயின் திசுக்கள் பாதிப்படைவதை `பாரட்ஸ் ஈஸோபேகஸ்' என மருத்துவ உலகம் அழைக்கிறது. இதனால் உணவுக்குழாயில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.