Published:Updated:

குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1

பச்சிளம் குழந்தை
News
பச்சிளம் குழந்தை

பிறந்த குழந்தையின் முதல் 28 நாள்கள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. `பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவாலானது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. இதற்கு விரிவாக விடை தருவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1

பிறந்த குழந்தையின் முதல் 28 நாள்கள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. `பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவாலானது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. இதற்கு விரிவாக விடை தருவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

பச்சிளம் குழந்தை
News
பச்சிளம் குழந்தை

குழந்தை பிறந்த முதல் 28 நாள்கள், `பச்சிளம் பருவ காலம்’ என்றழைக்கப்படுகிறது. `பச்சிளம் பருவ காலம்’, ஒரு குழந்தையின் முதல் ஐந்து வருடங்களில் வெறும் 1.5% நாள்களைக் கொண்டிருந்தாலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பில் 60%, பச்சிளம் பருவ காலத்தில் ஏற்படும் மரணங்களால் நிகழ்கிறது.

எனவே, குழந்தையின் முதல் 28 நாள்கள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. `பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவாலானது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு, `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும், வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

குழந்தை நல மருத்துவர் மு. ஜெயராஜ்
குழந்தை நல மருத்துவர் மு. ஜெயராஜ்

கேள்வி: 38 வார கர்ப்பகால இறுதியில், எனக்கு உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக `சிசேரியன்’ அறுவைசிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தபோது 3 கிலோ இருந்த என் குழந்தை, மூன்று நாள்களிலேயே 300 கிராம் எடையிழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, குழந்தைக்கு அதிக அளவு மஞ்சள் காமாலை உள்ளதகாவும், ஒளிக்கதிர் சிகிச்சை கொடுக்க வேண்டு மென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் என் குழந்தை முற்றிலும் குணமாவானா? மஞ்சள் காமாலையால் மூளை பாதிப்பு ஏற்படுமென்று படித்துள்ளேன். இதனால், என் மகனுக்கு மூளை குறைபாடு ஏற்படுமா?

பிறந்த முதல்வாரத்தில், 60% நிறைமாத பச்சிளம் குழந்தை களுக்கும், 80% குறைமாத பச்சிளம் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது. எனினும் 5% முதல் 10% பச்சிளம் குழந்தைகளுக்கே தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது. உடலில் பிலிருபின் அளவு 5-7 mg/dL தாண்டும்போது, குழந்தையின் விழிவெண்படலம் மற்றும் சருமத்தில் மஞ்சள் நிறமாற்றம் தொடங்கவரும். அதுவே, பெரியவர்களில் பிலிருபின் அளவு 2 mg/dL தாண்டும்போது, விழிவெண்படலத்தில் மஞ்சள் நிறமாற்றம் தொடங்குகிறது. எனினும், பெரியவர்களுக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கும் வரும் மஞ்சள் காமாலைக்கான காரணங்கள் வெவ்வேறாகும்.

பச்சிளம் குழந்தைகளில் பிலிருபின் அதிகரிக்க காரணங்கள்:

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடிவடையும்போது, அவற்றிலுள்ள ஹீமோகுளோபின் உடைந்து, பிலிருபின் உருவாகிறது. ஒரு கிராம் ஹீமோகுளோபினில் இருந்து 34 mg பிலிருபின் ஏற்படுகிறது. பெரியவர்களின் ரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாள்களாக இருக்கும்போது, பச்சிளம் குழந்தைகளின் ரத்த அணுக்களின் ஆயுட்காலம் 90 நாள்கள் மட்டுமே. மேலும் பச்சிளம் குழந்தைகளின் ரத்தத்தில், ரத்த அணுக்களின் அடர்த்தி மிக அதிகமாகும். இக்காரணங்களால், அதிகமான ரத்த அணுக்கள் உடைவதால், பெரியவர்களைக் காட்டிலும் பச்சிளம் குழந்தைகளில் அதிகமான பிலிருபின் ஏற்படுகிறது.

பிலிருபின் கல்லீரலுக்கு கடத்தப்பட்டு, UGT1A1 (Uridine Diphospho Gluconurate Glucuronosyl Transferase 1A1) என்ற நொதியின் மூலம், நீரில் கரையக்கூடிய பிலிருபினாக மாற்றப்பட்டு, பித்தநீரில் கலந்து மலத்தில் கழிவாக வெளியேற்றப்படுகிறது. எனினும், பச்சிளம் குழந்தைகளில் UGT1A1-ன் செயல்பாடு பெரியவர் களுடன் ஒப்பிடும்போது வெறும் 1% தான். அது முழு செயல்பாட்டை அடைய 3 மாதங்கள் தேவைப்படுவதால், பச்சிளம் குழந்தைகளின் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாகவே இருக்கிறது.

Transcutaneous Bilirubinometer (TcB)
Transcutaneous Bilirubinometer (TcB)

பித்தநீருடன் குடலுக்கு கடத்தப்பட்ட பிலிருபின், Beta-Glucuronidase என்னும் நொதியின் மூலம் உடைக்கப்பட்டு, மீண்டும் கல்லீரலுக்கே கடத்தப்படுகிறது. இதனை ‘குடல்-கல்லீரல் சுழற்சி’ என்றழைப்போம். இந்த நொதி இயற்கையிலேயே அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் பிலிருபின் அளவு மிக அதிகமாக காணப்படும். தாய்ப்பால் சரியாகக் கிடைக்காத குழந்தைகளில், இந்த ‘குடல்-கல்லீரல் சுழற்சி’ மிக அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்கும் பிலிருபின் அளவு மிகவும் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதை `Breastfeeding failure Jaundice’ என்றழைப்போம்.

இவ்வாறு, இயற்கையான காரணங்களால், பச்சிளம் குழந்தை களில் பிலிருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை ஏற்பட்டாலும், பெரும்பாலும் எவ்வித சிகிச்சையுமின்றி தானாகவே சரியாகிவிடும். இதை `Physiological Jaundice’ என்றழைப்போம். எனினும், வேறு காரணங்களால் பிலிருபின் அளவு மிகவும் அதிகரித்து சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில், அதை `Pathological Jaundice’ என்றழைப்போம்.

பேத்தாலாஜிக்கல் மஞ்சள் காமாலையை எவ்வாறு கண்டறிவது?

* பிறந்த 24 மணி நேரத்துக்குள் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றம்.

* பிறந்ததிலிருந்து 2-வது நாளில், கால்கள் மற்றும் கைகளில் மஞ்சள் நிறமாற்றம்.

* உள்ளங்கை மற்றும் பாதங்களில் மஞ்சள் நிறமாற்றம்.

* பிலிருபின் ஒரு மணி நேரத்தில், 0.2 mg/dL மேல் அதிகரிப்பு அல்லது 24 மணி நேரத்தில் 5 mg/dL மேல் அதிகரிப்பு.

* மந்த நிலை, தாய்ப்பால் அருந்தாமை, தாழ்வெப்பநிலை போன்ற அறிகுறிகள்.

* நிறை மாத குழந்தைகளில் 14 நாள்களுக்குப் பிறகும், குறை மாத குழந்தைகளில் 21 நாள்களுக்குப் பிறகும் மஞ்சள் நிறமாற்றம் தொடர்வது.

குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை... சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 1

பேத்தாலாஜிக்கல் மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான காரணங்கள்?

Rh இணக்கமின்மை: தாய்க்கு நெகட்டிவ் ரத்தப் பிரிவும், குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருப்பின், Rh இணக்கமின்மை ஏற்பட்டிருப்பின், குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் சிதைவுற்று, பிலிருபின் அளவு மிக மோசமாக அதிகரிக்கும். பிலிருபினால் மூளை பாதிப்பு ஏற்படக் கூடாதென்று, Rh இணக்கமின்மை இருப்பின், உடனடியாக குழந்தையின் ரத்தம் வெளியேற்றப்பட்டு, O-ve ரத்த மாற்றம் செய்யப்படும். Rh இணக்கமின்மை குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

ABO இணக்கமின்மை: தாய்க்கு O ரத்தப் பிரிவும், குழந்தைக்கு A/B/AB ரத்தப் பிரிவும் இருப்பின் ABO இணக்கமின்மை ஏற்படலாம்.

குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல்: ஹெரிடிட்டரி ஸ்பீரோசைட்டோசிஸ் (Hereditary Spherocytosis), G6PD குறைபாடு, பைருவேட் கைனேஸ் (pyruvate kinase) குறைபாடு போன்ற ஜெனடிக் நோய்களில், குழந்தைகளின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுற்று, பிலிருபினின் அளவு அதிகரிக்கும்.

பிலிருபினின் குறைந்த வெளியேற்றம்: குறைமாத குழந்தைகள் மற்றும் UGT1A1 ஜீனில் ஏற்படும் பிறழ்வால் உண்டாகும் ஜெனடிக் நோயுடன் பிறக்கும் குழந்தைகளில், பிலிருபினின் வெளியேற்றம் குறைந்து, ரத்தத்தில் அதன் அளவு அதிகரிக்கும்.

Breastfeeding failure Jaundice - `தாய்ப்பால் சரியாகக் கிடைக்காத குழந்தைகளில், பிலிருபினின் `குடல்-கல்லீரல் சுழற்சி’ அதிகரித்து, ரத்தத்தில் பிலிரூபினின் அளவு அதிகரிக்கிறது.

பிறவிக்குறை தைராய்டு சுரப்பு (Congenital Hypothyroidism)

Breast milk Jaundice - பிறக்கும் குழந்தைகளின் 2.4% பேருக்கு இது காணப்படுகிறது. சில தாய்மார்களுக்கு ஜெனடிக் காரணங்களால், Beta-Glucuronidase தாய்ப்பாலில் அதிகம் காணப்படுவதால், அதுவே குழந்தையின் பிலிருபினின் அளவு அதிகரிக்க காரணமாகிறது. பிலிருபினின் அளவு இயல்பான நிலையை அடைய 3 - 12 வாரங்கள் ஆகும். எனினும் இதனால், லேசான மஞ்சள் காமாலையே ஏற்படுவதால், தாய்ப்பாலை நிறுத்துவதற்கு மருத்துவர் அறிவுறுத்தமாட்டர்.

மூளை
மூளை

பிலிருபின் மிகவும் அதிகரித்தால் மூளை பாதிப்பு ஏற்படுமா?

பிலிருபினின் அளவு ரத்தத்தில் மிகவும் அதிகரித்து குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ரத்தம்-மூளைக்கு இடையே உள்ள தடையைத் தாண்டி மூளையைச் சென்றடையும். அதன் மூலம் மூளை பாதிப்பு ஏற்படும்போது, மந்த நிலை, தாய்ப்பால் அருந்தாமை, தொடர்ந்து உச்சத்தொணியில் அழுது கொண்டிருத்தல், உடல் தளர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். பிலிருபினால் ஏற்படும் மூளை பாதிப்பை `கெர்னிக்டரஸ் (Kernicterus)’ என்றழைப்போம். ஒளிக்கதிர் சிகிச்சைக்குப் பிறகும் பிலிருபின் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்றாலோ, மூளை பாதிப்புகளுக்கான அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிலிருபினின் அளவை உடனடியாகக் குறைத்திட ரத்த மாற்றம் (Exchange Transfusion) செய்யப்படும்.

குழந்தைக்கு இந்தச் சிகிச்சைகள் கிடைக்காமல், மூளை பாதிப்பு முற்றிலும் ஏற்பட்டிருந்தால், மூளை வளர்ச்சியின்மை (Cerebral Palsy), காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

நிறமாற்றத்தைக் கொண்டு மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிவது எப்படி? அடுத்த அத்தியாயத்தில்...

பராமரிப்போம்...