Published:Updated:

'அமிலாய்டோசிஸ்' எனும் அபூர்வ நோய் தாக்குதல் - படுத்தபடுக்கையான பர்வேஷ் முஷரஃப்!

'அமிலாய்டோசிஸ்' எனும் அபூர்வ நோய் தாக்குதல் - படுத்தபடுக்கையான பர்வேஷ் முஷரஃப்!
'அமிலாய்டோசிஸ்' எனும் அபூர்வ நோய் தாக்குதல் - படுத்தபடுக்கையான பர்வேஷ் முஷரஃப்!

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப் 'அமிலாய்டோசிஸ்' என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிகிச்சை எடுத்துவருகிறார். பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக, துபாய்க்குச் சென்றவர், பின்னர் லண்டனில் குடியேறினார்.  தற்போது, அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால்,  துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து முதல் ஆறு மாதங்கள் அங்கு தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்புவார் எனவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.

உடலில் 'அமிலாய்ட்' என்னும் புரதம் தேவைக்கதிகமாக சுரக்கும்போது இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தப் புரதம், உடைந்து உடலின் பல்வேறு உறுப்புகளில் படிந்துவிடும். அதன் காரணமாக,  சிறுநீரகங்கள் , இதயம், கல்லீரல், புற நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம் ஆகியவை பாதிக்கப்படும். பர்வேஷ் முஷரஃப்புக்கு நரம்புகள்  பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமலும் நிற்கமுடியாமலும் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

photo credit: dawn

பெரும்பாலும் 60 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு, அதிக அளவில் 'அமிலோய்டோசிஸ்' பாதிப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும், ஒவ்வொரு வருடமும் புதிதாக 20,000 பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள், 30 சதவிகிதம் பேர் பெண்கள். வளர்ந்த நாடுகளில் அமிலோய்டோசிஸால் 1,000 பேரின் ஒருவர் மரணமடைகிறார்.

PC : https://newsnetwork.mayoclinic.org / Dana Sparks

பொதுவாக, இந்தப் பாதிப்பு எதனால் உண்டாகிறது, பொதுநல மருத்துவர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்... ''காசநோய், சர்க்கரை நோய் போன்ற நோய் பாதிப்புகள் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரும். எந்தப் பாதிப்பும் இல்லாதவர்களுக்கும் வரலாம். 'அமிலாய்ட்' என்னும் புரதம் அதிகமான அளவு உற்பத்தியாவதுதான்  இதற்குக் காரணம். அது, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தேங்கிவிடும். அப்படித் தேங்கும்போது, அந்த உறுப்புகளின் இயல்பான செயல்பாடுகளில் பாதிப்பு உண்டாகும். தோலில் படிந்து, தோல் சம்பந்தமான பாதிப்புகளும் வரலாம். 

உதாரணமாக, சிறுநீரகத்தில் இது தேங்கும்போது, சிறுநீருடன் அதிக அளவு புரதம் வெளியேறும். அதனால்,  கால் வீக்கம், சோர்வு, தலைசுற்றல், மயக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகள்  ஏற்படும். அதுதவிர, மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, படபடப்பு, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். புற்றுநோய்க்குரிய சிகிச்சைகள்தான் இதற்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்'' என்கிறார் சுந்தர்ராஜன்.