Published:Updated:

`ஜனவரி 10-24; வுஹானை விட்டு வெளியேறிய 50 லட்சம் பேர்!' - #Corona பரவலை தடுக்கத் தவறியதா சீனா?

சீனா - கொரோனா
சீனா - கொரோனா ( AP )

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐத் தாண்டியிருக்கிறது. இது, கடந்த 2002-3-ம் ஆண்டில் பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸ் உயிரிழப்புகளை விட அதிகமாகும்.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருக்கும் வுஹான் நகரில், கொரோனா பாதிப்பு முதல்முதலாகக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கிருந்த இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விற்கும் சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 61 வயதான முதியவரின் இறப்புக்குப் பின்னரே இந்த வைரஸ் பரவல் உறுதிசெய்யப்பட்டது.

சீனா
சீனா
AP
`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona

இதையடுத்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. முதலில், சீனா இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பாதிப்புகள் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 12-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பயணிக்கவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும், சீன அரசு கடந்த ஜனவரி 23ல் தடை விதித்தது. அந்த நகர மக்கள் வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால், அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய வுஹான் நகர மேயர், அந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்று குறிப்பிட்டார். சீன அரசு தடை விதிப்பதற்கு முன்பாகவே 50 லட்சம் மக்கள் நகரை விட்டு வெளியேறியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார். சீன புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, விமானங்கள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி அவர்கள் நகரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

சீனா
சீனா
AP

மேயர் குறிப்பிட்ட 50 லட்சம் மக்கள், வுஹான் நகரை விட்டு வெளியேறி எங்கு சென்றார்கள் என்ற ஆய்வை அசோசியேட் பிரஸ் நிறுவனம் மேற்கொண்டது. கூகுள் மேப் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான பைடு (Baidu) நிறுவனத் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கூகுள் மேப்ஸ் வசதியைப் போலவே பைடு நிறுவனம், மேப் வசதியை சீன வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. அந்த நிறுவனத்தின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, உள்நாட்டு போக்குவரத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை!' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona

பயணத் தடை விதிக்கப்பட்ட ஜனவரி 23-ம் தேதியை அடிப்படையாக வைத்து, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பயணம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில், வுஹான் நகரிலிருந்து 70 சதவிகிதம் பேர், ஹூபே மாகாணத்துக்குள்ளேயே பயணித்திருந்தது தெரியவந்தது. மேலும் 14 சதவிகித பயணங்கள், அருகிலிருக்கும் ஹெனான், ஹுனான், அன்ஹூயி மற்றும் ஜியான்க்ஸி (Henan, Hunan, Anhui and Jiangxi) ஆகிய மாகாணங்களுக்கும், 2 சதவிகித பயணங்கள் ஹாங்காங்கை ஒட்டிய கடற்கரையைக் கொண்ட குவாங்டாங் (Guangdong) மாகாணத்துக்கும் நிகழ்ந்திருக்கின்றன.

வுஹான் நகரிலிருந்து 70 சதவிகிதம் பேர், ஹூபே மாகாணத்துக்குள்ளேயே பயணித்திருந்தது தெரியவந்தது.
ஆய்வு

மீதமுள்ளவர்கள், சீனாவின் மற்ற பகுதிகளுக்குப் பயணித்திருக்கிறார்கள். அதேபோல், ஜனவரி 10 முதல் 24-ம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வுஹான் நகரிலிருந்து அதிகம் பேர் பயணித்த நகரங்களாக ஹூபே மாகாணத்தை ஒட்டியுள்ள சாங்கிங் (Chongqing), தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொடக்கத்தில் பரவியதாகக் கண்டறியப்பட்ட இடங்களுடன் இந்தப் பயண விவரங்களை ஒப்பிடும்போது, இரண்டுக்கும் இடையே ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹூபே மாகாணம், சீனாவின் மத்தியப் பகுதிகள், அதையடுத்து பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என இரண்டுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதையும் காண முடிகிறது. இதனால், கொரோனா விவகாரத்தில் சீனா தொடக்கத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளையும் வைரஸ் பரவுவதையும் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சீனா
சீனா
AP

அதேபோல், பைடு நிறுவனத் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பாக மற்றொரு கவலையும் தெரிவிக்கிறார்கள். பைடு நிறுவனத்தின் இருப்பிடத்தை அடிப்படையாக வைத்து சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் 120 பில்லியன் மக்களின் தரவுகளைக் கொண்டு மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வு இது. குறிப்பிட்ட அந்தக் கால இடைவெளியில், வுஹான் நகரை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள். அவர்களில் அதிகம் பேர் செல்போன் பயன்படுத்தாதவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், வைரஸ் பரவலைத் தடுப்பது சீனாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு