Published:Updated:

`2 மணிநேரம் மட்டுமே அனுமதி!'- கொரோனா வைரஸ் பயத்தில் சீனாவில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மாணவர்கள் தங்குமிடத்தில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், விரைவில் தங்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 106 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் 4,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் வசிக்கும் பிற நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவின் அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 8 மாணவர்கள் வுகான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்குமிடத்தில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் விரைவில் தங்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாணவர்களில் ஒருவரான அஸ்ஸாமைச் சேர்ந்த 22 வயதான கவுரவ் ஏ.என்.ஐ-யிடம் தொலைபேசி வழியாக பேசியுள்ளார். அதில், ``நகரில் கொரோனோ வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தங்குமிடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பொருள்களை வாங்க ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நகரின் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் இவை தீர்ந்துவிடும்" என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும், ``சீனாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எங்களை மீட்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். எங்களுடன் தொடர்பிலேயே இருக்கின்றனர். இந்திய அரசு எங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சீன அரசுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வுகான் நகரில் இருக்கும் மக்களைக் குறிப்பாக அங்கு படிக்கும் மாணவர்களை விமானத்தின் மூலமாக அழைத்துவர முயற்சி செய்கிறோம். முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு விரைந்து செயல்பட்டு சில தீர்வுகளைக் கொண்டுவரும் என உறுதியளிக்கிறேன்" என்று பேசினார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வுகான் நகரில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக 747- 400 போயிங் ரக விமானத்தை ஏர்- இந்தியா நிறுவனம் தயாராக வைத்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களின் அனுமதி கிடைத்ததும் இந்த விமானம் மும்பையிலிருந்து புறப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு குழப்பத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தாலும்கூட 400 பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அரசு இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு