Election bannerElection banner
Published:Updated:

`பப்பாளிக்கு கொரோனா, சிகரெட் கடத்தல், மூலிகை மருந்து' - கொரோனா காலத்தில் ஆப்பிரிக்கா- ஒரு பார்வை!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆசியாவையும் அமெரிக்காவையும் ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்கா கண்டத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையில் `இருண்ட கண்டம்' என்று அழைக்கப்பட்டது ஆப்பிரிக்கா. மனிதனால் அதிகம் ஊடுருவப்படாத பூமியின் புதிர்ப் பிரதேசங்கள், அச்சுறுத்தும் பாலைவனங்கள், அடர்ந்த காடுகள் கொண்டதால் திரை மறைவில் மறைந்திருக்கும் ஆப்பிரிக்கா `இருண்ட கண்டம்' என்ற பெயர்பெற்றது. (எனினும் அது நிறவெறியைக் குறிக்கும் சொல் என்ற வாதமும் இன்று உண்டு). இன்று அபாரமான தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட உலகில், மனிதன் அறிந்திராத நிலப்பகுதி இல்லை எனலாம். ஆனால், ஆப்பிரிக்கா உலகின் பார்வையில் இருட்டுக்குள் வைக்கப்படுவது மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உலகம் முழுவதற்குமான ஒரே பிரச்னையாக உருவெடுத்திருக்கும் கொரோனா பெருந்தொற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் அதிகம் கவனிக்கின்றோம். அதே சமயம், இந்த நோய் ஆப்பிரிக்கா கண்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழிவைப் பற்றி நாம் பெரிதாய் அறிந்திருக்கவில்லை. ஆனால், உலகின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகித மக்கள் வசிக்கும் ஆப்பிரிக்காவின் நிலையை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா கண்டத்தில் மொத்தம் 54 நாடுகள் (எல்லை சர்ச்சையில் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து) உள்ளன. அந்த 54 நாடுகளிலுமே கொரோனாவின் பாதிப்பு பரவலாக இருக்கிறது. சில இடங்களில் மிக அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் மிக அதிகமாக சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்கா கண்டம் முழுவதிலும் மே மாத இறுதி வார அறிக்கையின்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 20,000.

பிற நாடுகளைவிட தாமதமாகவே ஆப்பிரிக்காவில் நுழைந்தது கொரோனா. அடிப்படை சுகாதாரக் கட்டமைப்புகள் கூட இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில், ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்கா கண்டத்தில், சுமார் 3,500 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அதேசமயம் 41,000 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்!" - எச்சரிக்கும் WHO

உலகின் மற்ற நாடுகளை விடவும் கொரோனாவை ஆப்பிரிக்கா மிகச்சிறப்பாகவே எதிர்கொள்வதை தரவுகள் காட்டுகின்றன. வல்லரசுகள் கூட இந்த நோய்க்கு முன்னால் நிலைகுலைந்து போக, மிகவும் பின்தங்கிய சூழல் கொண்ட ஆப்பிரிக்கா நாடுகளால் எப்படி இந்த நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க முடிந்தது என்பதே பலரின் கேள்வி. அவற்றுக்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...

* ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் முதல் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்ட உடனே, மிகக் கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நோய்ப் பரவுதல் பெருமளவு தடுக்கப்பட்டது.

*ஆப்பிரிக்காவில், மக்கள்தொகை அடர்த்தி மிகவும் குறைவு. அதுமட்டுமன்றி பிற நாட்டு மக்களைப் போல அதிகம் பயணம் செய்யும் வழக்கம் ஆப்பிரிக்காவில் இல்லை. இதனால் நோய் சமூகப் பரவலாக மாறவில்லை. அதன் காரணமாகவே ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்களில் நோய் பரவுதல் சற்று அதிகமாக இருக்கிறதே தவிர கிராமங்களில் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது.

ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா
AP

* ஆப்பிரிக்காவில், தொடர் வன்முறை, பஞ்சம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைவு. எனவே, அங்கு முதியவர்களைவிட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் (மொத்த மக்கள் தொகையில் 60% பேர் 25 வயதுக்கு குறைவானவர்கள்). கொரோனா முதியவர்களை அதிகம் பாதிக்கும் நோய். ஆதலால், ஆப்பிரிக்காவில் நோய் பாதிப்பு மிக அதிக அளவில் இல்லை.

* ஆப்பிரிக்காவில் நோய்த்தொற்றுகள் மிகவும் அதிகம். கோவிட் 19 வருவதற்கு முன் எபோலா கொடூரமாய்த் தாக்கியதும் இங்கேதான். மிகக் கடுமையான சூழலில், குறைவான சுகாதார வசதிகளோடு வாழும் ஆப்பிரிக்கா மக்களின் உடல் பல்வேறு நோய்களுடன் போராடி இயல்பாகவே அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதாக இருக்கின்றது. அதன் காரணமாகவும் அங்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

*இவை எல்லாவற்றையும் விட ஆப்பிரிக்காவில் மிகக் குறைவான அளவே பரிசோதனைகள் (Testing) செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாகத்தான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை பிற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கின்றது என்கிறார்கள் ஒரு சில வல்லுநர்கள்.

`இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிப் போக முடியுமா?!' -கொரோனா தாக்கம் குறித்து கூகுள் சிஇஓ

இந்த நிலையில், பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், நீண்ட கால முடக்கத்துக்குப் பிறகு ஆப்பிரிக்கா நாடுகள் ஒவ்வொன்றாக மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இனிதான் ஆப்பிரிக்கா இதிலிருந்து தப்பிக்கப் போகின்றதா என்பதை நாம் அறிய முடியும். இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், இந்த நோய் நீண்ட நாள்களுக்கு நம்முடன் இருக்கப்போகிறது என்பதே அறிவியல் சொல்லும் உண்மை. அதற்கு மக்களை தயாராகச் சொல்கின்றன ஆப்பிரிக்க நாடுகள்.

செனெகல் நாட்டு அதிபர் மக்கி சால், "உங்கள் தனிப்பட்ட, சமூக பழக்கவழக்கங்களை ஒவ்வொருவரும் மாற்றியமைத்துக் கொண்டு, இந்த நோய்த் தொற்றோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்க நாட்டு அதிபர், "பலர் வேலைக்குத் திரும்ப இருப்பதால், நோய்ப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. உண்மையை உணர்ந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப பாதுகாப்போடு செயல்படுங்கள்" என்று மக்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

செனெகல் நாட்டு அதிபர் மக்கி  சால்
செனெகல் நாட்டு அதிபர் மக்கி சால்
AP

வேறொரு கண்டம் என்றாலும் இந்தியாவை ஒத்த பல பிரச்னைகள் ஆப்பிரிக்காவிலும் இருப்பதைக் காண முடிகின்றது. அங்கிருக்கும் மக்களுக்கான முதல் எதிரியாக இருக்கின்றது வறுமை. நோயைக் காட்டிலும், இதுவே அங்கு பிரதான பிரச்னை. அரசாங்க முடக்கம் அங்கிருக்கும் மக்களை உணவுத் தேவைக்குக் கூட அல்லல்பட வைத்திருக்கிறது. பெரும்பாலான இல்லங்களில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை அதிகரித்திருக்கிறது. சில நாடுகளில் வன்முறையைக் குறைக்க மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒவ்வொரு நாடும், தனித்தனியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மிகப்பெரும் கள்ளச்சந்தை ஒன்று உருவாகியிருக்கிறது. இரண்டு மாதங்கள் வரை சட்டபூர்வமாக கிடைத்த சிகரெட்டுகள் கடைகளில் கிடைப்பதில்லை. விளைவு கடத்தல்கள் அதிகமாகி இருக்கின்றன.

`தமிழகத்தில் 18,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு’ -  சுகாதாரத்துறை #NowAtVikatan

டான்சனியா நாட்டில் மக்களை விட அதிகம் பிரச்னையாக இருப்பது அந்நாட்டு அதிபரே. கொரோனா ஓர் அச்சுறுத்தலே இல்லை எனப் பிடிவாதமாய் மறுத்து வருகிறார் டான்சனியா அதிபர் ஜான் மகுபியூலி. பலர் நோய்க்கான டெஸ்ட் பாசிட்டிவ் என வருவதை விரும்பாதவர், நாட்டின் பரிசோதனையைக் குறை கூறியிருக்கிறார். அந்நாட்டின் தேசிய சுகாதார ஆய்வகத்தின் தலைவர் மீது, முறையற்று சதியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தி அவரை சஸ்பெண்டு செய்திருக்கிறார் டான்சனியா அதிபர்.

அங்கு தான் ரகசியமாக பரிசோதனை செய்து பார்த்ததாகவும். அந்தப் பரிசோதனையில் ஒரு பப்பாளி, ஓர் ஆடு, இன்ஜின் ஆயில் ஆகியவற்றிற்கும் கொரோனா இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும் குற்றம்சாட்டுகிறார். இரு வாரங்களுக்கு முன்பே பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டது டான்சனியா அரசு. எதிர்க்கட்சி அதை கடுமையாக விமர்சிக்க, அங்கு தீவிர அரசியல் ஆயுதமாகியிருக்கிறது கொரோனா.

டான்சனியா அதிபர்
டான்சனியா அதிபர்
AP

சோமாலியாவில் கொரோனா மரணங்கள் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியிருப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியா ஆப்பிரிக்காவின் சமீபத்திய கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியிருக்கிறது. பல மருத்துவர்கள் அங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொடர் எச்சரிக்கைகளை மீறி மடகாஸ்கர் நாடு, கொரோனாவுக்கு மருந்தாக ஒரு மூலிகை கஷாயத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. உறுதி செய்யப்படாத இந்த மருந்து ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

பணக்கார நாடுகளே தத்தளித்துக் கொண்டிருக்க, ஆப்பிரிக்காவின் ஏழ்மை நிலை அந்நாட்டின் பொருளாதாரத்தை, அம்மக்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதிக்கவே செய்யும். உலகம் முழுவதும் ஒரு திசையில் பயணிக்க, இந்த கொரோனாவுக்கு எதிரான போரில், என் வழி தனி வழி எனப் பயணித்துக் கொண்டிருக்கின்றன ஆப்பிரிக்க நாடுகள். இந்த ஆபத்தை ஆப்பிரிக்கா கடப்பது இயற்கையின் கையில் மட்டுமே இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு