Published:Updated:

`தாயின் வேதனையைத் தாங்க முடியல!'- கருணைக் கொலையான அம்மா

தெ.சு.கவுதமன்

புற்றுநோயால் தாய் படும் வேதனைகளை மகள்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது வலியை உணர்ந்துகொண்டவர்கள், தங்களது தாய்க்கு அவரது விருப்பப்படியே அதிக சிரமம் இல்லாமல் விடைகொடுக்க முடிவெடுத்தனர்.

தாயின் கருணைக்கொலை குறித்து மகள்கள்
தாயின் கருணைக்கொலை குறித்து மகள்கள் ( vikatan )

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண் கெர்ரி ராபர்ட்சன், கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான இவர், மார்பகப் புற்றுநோயால் பெரிதும் அவதிப்பட்டுவந்தார்.

விக்டோரியா மாகாணத்தில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கருணைக்கொலை அனுமதிக்கான சட்டம், கடந்த ஜூன் மாதத்தில் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி கருணைக்கொலை செய்யப்பட்ட முதல் ஆஸ்திரேலியப் பெண், கெர்ரி ராபர்ட்சன்.

அம்மாவும் மகள்களும்
அம்மாவும் மகள்களும்

கெர்ரி ராபர்ட்சனுக்கு 2010-ம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான தீவிர சிகிச்சை எடுத்தபோதும் படிப்படியாக எலும்புகள், நுரையீரல், கல்லீரல், இதயம் என அனைத்துப் பாகங்களுக்கும் புற்றுநோய் பரவியது. உடல்வலியால் மிகக்கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தார். கீமோதெரபி, லேசர் சிகிச்சைகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளும் அவரை மோசமாகப் பாதித்தன. ஒருகட்டத்தில், அவருக்குக் கொடுத்துவந்த சிகிச்சைகளை நிறுத்தும்படி கூறிவிட்டார். கருணைக்கொலைக்கான சட்டம் அமலுக்கு வந்ததும் தனது முடிவைத் தேடிக்கொள்ள விரும்பினார்.

இந்நிலையில், தங்களுடைய தாய் படும் வேதனைகளை மகள்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது வலியை உணர்ந்துகொண்ட மகள்கள், அவரது விருப்பப்படியே அதிக சிரமம் இல்லாமல் விடைகொடுக்க முடிவெடுத்தனர். கருணைக்கொலை அனுமதிக்கான செயல்முறைகள், 26 நாள்களாக நடைபெற்றன. அதற்கான ஏற்பாடுகளை 'கோ ஜென்டில் ஆஸ்திரேலியா' என்ற அமைப்பு பார்த்துக்கொண்டது.

மகள்கள்
மகள்கள்
vikatan

``என் தாய் முன்னதாகவே கருணைக்கொலையை எதிர்பார்த்திருக்கக்கூடும். சட்டம் அமலுக்கு வருவது தாமதமானதால், அவர் அதிக வேதனையை அனுபவித்திருக்கக்கூடும். எனவேதான், அவரது எண்ணத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தோம்'' என்று கெர்ரி ராபர்ட்சனின் மகள் நிகோல் ராபர்ட்சன் தெரிவித்தார்.