Published:Updated:

`வெள்ளை மாளிகை சந்திப்பு.. ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கொரோனா' -வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் இவாங்கா

வெள்ளை மாளிகை சந்திப்பு
வெள்ளை மாளிகை சந்திப்பு

பீட்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் நேற்று இவாங்கா வீட்டிலிருந்தே பணியாற்றியுள்ளார். அவர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகாக மட்டுமே வீட்டிலிருந்து பணி செய்கிறார். அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கனடா நாட்டு அதிபரின் மனைவி, பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர், பிரேஸில் நாட்டு அதிபர் என உலக அளவில் பல முக்கியப் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய உள்நாட்டுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியுடன்
ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியுடன்

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீட்டர் தன்னுடைய உடல்நிலை குறித்து ட்விட்டரில், ``நான் காலையில் எழுந்தபோது எனக்குக் காய்ச்சலும் தொண்டை எரிச்சலும் இருந்தது. நான் உடனடியாக குயின்ஸ்லேண்ட் சுகாதாரத்துறையைத் தொடர்புகொண்டேன். பின்னர் எனக்கு COVID 19 தொற்று இருப்பது உறுதியானது. சுகாதாரத்துறையின் கோட்பாட்டின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதைப் பின்பற்றி நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது நலமாக உணர்கிறேன். மேலும், என் உடல்நிலை குறித்த தகவல்களைப் பின்பு வெளியிடுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார் பீட்டர்.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

பீட்டர் கடந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டு பின்னர் அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் அமெரிக்க அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் ஆகியோரைச் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமரின் அலுவலகப் பிரதிநிதி இதுகுறித்து கூறுகையில், ``உள்துறை அமைச்சருக்கு அறிகுறிகள் ஏற்படும் 24 மணி நேரம் முன்பு அவருடன் யார் யாரெல்லாம் இருந்தார்களோ, அவர்கள் மட்டும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பீட்டர்  டட்டன்
பீட்டர் டட்டன்

கடந்த வியாழன் அன்று ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபெற்றார் பீட்டர். ஆனால், அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை. ஆஸ்திரேலிய பிரதமரோ மற்ற அமைச்சர்களோ தனிமைப்படுத்தப்படவும் அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் ஜயர் போல்ஸோனரவும் சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகை சென்று வருபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறதா என்ற பேச்சு மக்களிடையே அடிபடுகின்ற வேளையில், ட்ரம்ப்புக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரை தனிமைப்படுத்தவும் தேவையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும். ட்ரம்ப் அவ்வாறு யாரையும் சந்திக்கவில்லை என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவாங்கா ட்ரம்ப்
இவாங்கா ட்ரம்ப்

பீட்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் நேற்று இவான்கா வீட்டிலிருந்தே பணியாற்றியுள்ளார். அவர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக மட்டுமே வீட்டிலிருந்து பணி செய்கிறார், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு