கொரோனா பெருந்தொற்று இப்போதைக்கு இந்த உலகத்தை விட்டு அகலாது, இன்னும் சில பல வருடங்களுக்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என உலக சுகாதார மையம் தொடங்கி பல்வேறு மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இங்கிலாந்தில் கட்டாய முகக்கவசங்கள் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ``ஒமிக்ரான் அலை இப்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டிவிட்டது. இனி அதன் வீரியம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும் என்று எங்கள் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எனவே,அரசாங்கம் இனி வீட்டிலிருந்து வேலை செய்யும்படி மக்களைக் கேட்காது" என்று அவர் கூறியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகிலேயே தடுப்பூசியை வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து என்றும், ஐரோப்பாவிலேயே வேகமாக தடுப்பூசிகளைச் செலுத்திய நாடு அது என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
``மற்றவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த கோடையில் நாங்கள் ஊரடங்கைத் தளர்த்துவதென கடினமான முடிவை எடுத்தோம். மற்றவர்கள் லாக்டௌனில் இருக்கும் இந்தக் குளிர்காலத்திலும் நாங்கள் ஊரடங்கின்றி இயங்கினோம். இதன் விளைவாக, நாங்கள் பொருளாதார பின்னடைவையும் சந்திக்கவில்லை'' என்கிறார்.
மேலும், ஒமிக்ரான் அலையில் இருந்து வெளியே வரும் முதல் நாடு இங்கிலாந்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ``பூஸ்டர் டோஸ் பிரசாரம் மற்றும் பிளான் பி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக நாங்கள் இனி பிளான் ஏ-வுக்கு திரும்பலாம் மற்றும் பிளான் பி விதிமுறைகள் இனி எங்களுக்குத் தேவையில்லாமல் போகலாம்" என்று ஜான்சன் கூறியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும். அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணியாற்றுவதும் தேவையில்லை. ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியச் சொல்லி அரசும் அறிவுறுத்தாது. கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ற விதியும் முடிவுக்கு வரும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், மக்களின் நடவடிக்கைகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பினால், தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும் என்றும், இப்போதுள்ளதுபோலவே தொற்று எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும், தொற்று எண்ணிக்கை இன்னும் முழுமையாகக் குறையாததால் படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அணுகுமுறையே சரியானது என்றும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
- ராஜலட்சுமி