Published:Updated:

பிரேசில்: `நிச்சயமற்ற சூழலில் இருக்கிறோம்’ - 1 லட்சத்தைக் கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

பிரேசில் கொரோனா உயிரிழப்பு
பிரேசில் கொரோனா உயிரிழப்பு

``இந்தப் பாதிப்புகள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. வைரஸால் 1,50,000 அல்லது 2,00,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்.”

உலகளவில் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் சுமார் 1.96 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். ஏழு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதிப்படைபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருகிறது. ஏற்கெனவே, அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் தற்போது பிரேசிலிலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

அஞ்சலி செலுத்தும் உறவினர்கள்
அஞ்சலி செலுத்தும் உறவினர்கள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 49,970 ஆக உள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 30,12,412 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 905 ஆக உள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 1,00,477 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிரேசிலில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சுமார் மூன்று மாதங்களில் 50,000 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த நிலையில், அடுத்த 50,000 உயிரிழப்புகள் சுமார் 50 நாள்களில் நிகழ்ந்துள்ளன. அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவின் அலட்சியமே இவ்வளவு அதிக பாதிப்புக்கு காரணம் எனத் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பிரேசில்:`கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தைக் கொல்கிறது!’ - அதிபர் பொல்சனாரோ

அதிபர் பொல்சனாரோவும் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்தார். எனினும், அவர் ஊரடங்கு உள்ளிட்ட வைரஸ் பரவலைத் தடுக்கும் நடைமுறைகளுக்கு எதிராகத் தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். பாதிப்புகள் தொடர்பாகத் தொற்றுநோயியல் தொடர்பான மருத்துவர் ஜோஸ் டேவிட் அர்பேஸ் பேசும்போது, ``நம்பிக்கையற்ற சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏனெனில், உலகப் போரைப்போல இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரேசில் கூட்டாக உணர்வற்ற நிலையின் கீழ் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பிரேசிலின் சுகாதாரத்துறை நிபுணர்கள் பலரும் அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாவது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் ஊரடங்கை தளர்த்துவதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் பாதிப்பை இன்னும் கடுமையாக்கும் என்றும் அவர்கள் தங்களது கவலையைத் தெரிவிக்கின்றனர்.

பிரேசில் அதிபர் போல்சனாரோ
பிரேசில் அதிபர் போல்சனாரோ

சுகாதாரத்துறை அமைச்சர்கள் இரண்டு பேர் அதிபர் பொல்சனாரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வைரஸை `சிறிய காய்ச்சல்’ என்றும் `ஊரடங்கை அறிவித்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் கொரோனா பாதிப்பைவிட அதிகமாக இருக்கும்’ என்றும் தொடர்ந்து பொல்சனாரோ தெரிவித்தார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் மற்றும் எதிர்கட்சிகள், வைரஸ் நெருக்கடியை அதிபர் பொல்சனாரோ மோசமாகக் கையாள்வது தொடர்பாக தங்களது விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்து வருகின்றனர். சாவோ பவுலோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் துறை பேராசிரியர் அலெக்ஸாண்ட்ரா நெய்ம், ``இந்தப் பாதிப்புகள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. வைரஸால் 1,50,000 அல்லது 2,00,000 உயிரிழப்புகள் ஏற்படலாம். காலம் மட்டுமே முழு பாதிப்பையும் காண்பிக்கும்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

`கொரோனா நெகட்டிவ்; ஆனால் நுரையீரலில் தொற்று!’ - தொடர் சிகிச்சையில் பிரேசில் அதிபர்
அடுத்த கட்டுரைக்கு