Published:Updated:

`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்

Representation Image
Representation Image

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வுகான் நகரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சமூக செயற்பாட்டாளரான ஜிங் தன் டைரியில் பதிவு செய்துள்ளார்.

வெறிச்சோடிய வீதிகள்.... மூடப்பட்டுக் கிடக்கும் வணிக வளாகங்கள்... முகமூடி மனிதர்கள் என சீனாவின் வுகான் நகரம் காட்சியளிக்கிறது. இங்கு யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வுகான் மட்டுமல்ல சீனாவின் பல்வேறு நகரங்கள் பீதியில் உறைந்து நிற்கின்றன. சீன அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு மருத்துவமனையை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. நோய் தாக்குதலுக்குள்ளானவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வுகான் நகரத்தின் இந்த அமைதியை சமூக செயற்பாட்டாளரான ஜிங் தன் டைரியில் பதிவு செய்துள்ளார். தன் குறிப்புகளை ஆங்கில ஊடகமான பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கொள்ளை நோயல்ல... பீதியடைய வேண்டாம் - மருத்துவர் கருத்து

ஜனவரி 23, வியாழக்கிழமை - நகரம் முடக்கப்பட்டது

காலையில் கண் விழித்ததும் இந்த நகரம் முடக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இது எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என எனக்குத் தெரியாது. இதற்கு நான் எப்படித் தயாராக வேண்டும் என்றும் தெரியவில்லை. மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. காய்ச்சலால் அவதியுறும் பலருக்கும் சரியான சிகிச்சையளிக்கவில்லை போன்ற தகவல்களை சமூகவலைதளம் மூலம் தெரிந்துகொண்டேன். பலர் முகமூடி அணிந்து செல்வதை காணமுடிந்தது. உணவுப் பொருள்களை வாங்கி சேமித்துக்கொள்ளுமாறு நண்பர்கள் அறிவுறுத்தினர். அரிசி மற்றும் நூடுல்ஸ் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டது.

சீனா
சீனா

கடையில் ஒருவர் அதிகப்படியான உப்பை வாங்கிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஏன் இவ்வளவு உப்புகளை வாங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். ஒரு வருடத்துக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது என அதிர்ச்சியான பதிலை அளித்தார். நான் மருந்தகங்களை நோக்கி பயணமானேன். ஏற்கெனவே குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே இருந்தன. நான் சென்று கேட்டபோது முகமூடிகளும் கிருமிநாசினிகளும் விற்பனையாகிவிட்டது. நான் எனக்கான உணவுகளை வாங்கி சேமித்துவிட்டேன், இருந்தும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன. இந்த நகரத்தின் இயக்கம் திடீரென நின்றுவிட்டது. இந்த நகரம் எப்போது மீண்டும் உயிர்ப்பெறும் எனத் தெரியவில்லை.

`தும்மல் என்றாலே கொரோனா என பதற்றமடையாதீர்கள்!'- வதந்திக்கு அரசுத் தரப்பில் சொல்வது என்ன?#coronavirus

ஜனவரி 24, அமைதியாக கழிந்த சீன புத்தாண்டின் முந்தைய தினம்

இந்த உலகம் அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி எனக்கு பயத்தைக் கொடுக்கிறது. நான் இங்கு தனியாக வாழ்கிறேன். எதாவது சத்தம் கேட்கும்போதுதான் இங்கு மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. எப்படி வாழப்போகிறோம் என்பதை யோசித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் எந்த வளங்களும் இல்லை. என் உடல் நலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது. என்னை நானே பராமரித்துக்கொள்கிறேன். நான் உயிர்வாழ உணவு மிகவும் அவசியம். அதற்குத் தேவையான உணவுகள் என்னிடம் இருக்க வேண்டும்.

சீனா வீதிகள்
சீனா வீதிகள்

இந்த நகரம் எவ்வளவு நாள்களுக்கு முடக்கப்பட்டிருக்கும் என்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த அமைதியான நாள்கள் மே மாதம் இறுதிவரைகூட செல்லலாம் என இங்கிருக்கும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். மருந்தகங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. ஒரே ஆறுதல் என்னவென்றால் இதுவரை ஆர்டர் செய்த உணவுகள் எல்லாம் கூரியரில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் நூடுல்ஸ் எல்லாம் தீர்ந்துவிட்டது. அரிசி மட்டும் இருக்கிறது. நான் இன்று மார்க்கெட் சென்று எனக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டேன்.

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!'- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

நான் வீட்டுக்கு வந்த பிறகு துணிகளைத் துவைத்தேன். நானும் குளித்துவிட்டேன். நம்முடைய சுகாதாரம் மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 20 முதல் 30 முறை கைகளைக் கழுவுகிறேன் என நினைக்கிறேன். நான் வெளியில் செல்லும்போதுதான் இந்த உலகத்துடன் தொடர்பில் இருப்பதாக உணர்கிறேன். வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் இந்த தனிமையை எப்படி உணர்வார்கள் என என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. புத்தாண்டு இரவு கொண்டாட்டம் நண்பர்களுடன் இருக்கும் என்பதால் நான் சமைக்கவில்லை. டின்னர் முடிந்ததும் நண்பர்களுடன் பேசுவதற்காக வீடியோ கால் செய்தேன். இந்த உரையாடலில் கொரோனா வைரஸ் குறித்த பேச்சுகள் நிச்சயம் இருந்தது.

Representation Image
Representation Image

வுகான் நகரத்துக்கு அருகில் வசிக்கும் நண்பர்கள் சிலர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்திருந்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக நண்பர்களுடன் உரையாடினேன். நல்ல எண்ணங்களுடன் உறங்கச் சென்றேன். கண்களை மூடியதும் பழைய நினைவுகளில் நான் மூழ்கினேன். கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. நான் உதவியற்றவளாக இருந்தேன். கோபமாகவும் வருத்தமாகவும் காணப்பட்டேன். மரணத்தைப் பற்றிக்கூட சிந்தித்தேன். எனக்குப் பெரிதாக வருத்தங்கள் இல்லை. ஏனென்றால் என்னுடைய பணி அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனாலும் என் வாழ்க்கை முடிவடைவதை நான் விரும்பவில்லை.

`தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; மக்கள் பீதியடைய வேண்டாம்!'- அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜனவரி 25., சனிக்கிழமை தனிமையில் கழிந்த சீன புத்தாண்டு

இன்று சீனப்புத்தாண்டு. பண்டிகையைக் கொண்டாடுவதில் எனக்குப் பெரிய அளவில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், இப்போது இந்தப் புதிய ஆண்டு இன்னமும் பொருத்தமற்றதாக உணர்கிறேன். காலையில் நான் தும்மியபோது சிறிய அளவு ரத்தத்தைக் கண்டேன். அது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. என் மூளை கவலைகளால் சூழப்பட்டிருந்தது. எனக்கு வெளியில் செல்லலாமா? வேண்டாமா? எனக் குழப்பமாக இருந்தது. எனக்கு காய்ச்சல் இல்லை என்பதால் வெளியில் செல்லலாம் என முடிவெடுத்தேன். நான் இரண்டு முகமூடிகளை அணிந்துள்ளேன். இந்த முகமூடிகளால் எந்தப் பயனும் இல்லை என மக்கள் பேசிக்கொள்வதை என்னால் கேட்கமுடிந்தது. ஆனால், நான் முகமூடியை அணிந்துகொண்டே சென்றேன். மிகவும் அமைதியாக இருந்தது.

Representation Image
Representation Image

பூக்கடைகள் திறந்திருந்தன. அந்தக் கடையின் வாயிலில் இறுதிச்சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பூக்கள் காணப்பட்டது. எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வைக்கப்படும் இடங்கள் காலியாக இருந்தன. ஒரு சில மக்களை மட்டுமே காண முடிந்தது. ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும்போது அதிகப்படியான உணவுப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற தவிப்பு எனக்கு இருந்தது. என் வீட்டில் 7 கிலோ அரிசி இருந்தும் மேலும் 2.5 கிலோ வாங்கினேன். உருளைக்கிழங்கு, பீன்ஸ், மூட்டை ஆகியவற்றை வாங்கினேன். முட்டை எனக்குப் பிடிக்காது இருந்தாலும் வாங்கிக்கொண்டேன். என் நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என வாங்கினேன். ஒரு மாதத்துக்குத் தேவையான பொருள்கள் இருந்தும் இன்னும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் இது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆற்றங்கரையோரம் நடந்து சென்றேன். இதற்கு முன்பு இந்தச் சாலையில் நான் நடந்ததில்லை, என்னுடைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்ததைப் போல் உணர்ந்தேன்.

ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை

வுகான் நகரம் மட்டுமல்ல மக்களின் குரல்களும் சிக்கிக்கொண்டது. வுகான் நகரம் முடக்கப்பட்ட முதல்நாளில் சமூகவலைதளத்தில் என்னால் எதையும் எழுதமுடியவில்லை. அரசின் தணிக்கைதான் இதற்குக் காரணம். வீசாட்டில் கூட என்னால் எதுவும் எழுத முடியவில்லை. இணையதள தணிக்கை என்பது சீனாவில் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். ஆனால், அது தற்போது மிகவும் கொடூரமாகத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. உங்களது பழைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பது என்பது சவாலான காரியம். நான் என் வீட்டைவிட்டு வெளியேறி எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என காணச் சென்றேன். நான் ஒரு 500 மீட்டர் சென்றிருப்பேன் வெறும் 8 நபர்களை மட்டுமே காண முடிந்தது. இந்த நகரத்துக்கு நான் குடிபெயர்ந்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இங்கு எனக்கு நிறைய முகங்கள் பரிச்சயம் கிடையாது. மீண்டும் வீட்டுக்குச் செல்லவும் எனக்கு விருப்பமில்லை. இன்று 100 பேரை பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். இரவு 8 மணி இருக்கும் ஜன்னல்களின் வழியே `கோ வுகான்’ என மக்கள் கூச்சலிடுவதை என்னால் கேட்கமுடிந்தது. அந்தக் குரல்கள் தனக்குத்தானே நம்பிக்கையூட்டுவதாக எனக்குத் தெரிந்தது.

Representation Image
Representation Image

ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறது. பல நகரங்களில் மக்கள் முகமூடி அணிந்துகொண்டு செல்கிறார்கள். ஆனாலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் முகமூடி இல்லாமல் செல்வதைக் காணமுடிந்தது. அந்த மக்கள் ஏன் அப்படிச் செல்கிறார்கள். மக்கள் வீட்டிலே இருக்க வைக்க அரசாங்கத்தால் முடியும். அவர்களுக்கு நிதியுதவி வழங்கலாம். இன்று நான் இறுதியாக சூரிய வெளிச்சத்தைக் காண முடிந்தது. என் வளாகத்தில் அதிகமான மக்களைப் பார்க்கமுடிந்தது. ஒரு சில தொழிலாளர்களும் இருந்தனர். மூடக்கப்பட்ட நகரத்தில் நம்பிக்கையூட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. உயிர்வாழ்வது குறித்த எனது கவலைகள் என்னைவிட்டு மெல்ல அகன்று வருகிறது. இங்குள்ள மக்களிடம் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நான் இங்கிருப்பதே அர்த்தமற்றது. இந்தத் தனிமையான நகரத்தில் எனது பங்கை நான் கண்டுபிடிக்க வேண்டும்’ என பக்கங்கள் முடிகிறது.

News Source : BBC

அடுத்த கட்டுரைக்கு