Published:Updated:

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா

சீனா
சீனா ( AP )

சீனாவை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் தாக்குதலால் முதன்முதலில் அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகர் உள்ளிட்ட சீனாவின் 12 நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அந்த நகரங்களுக்குப் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா அதிர்ந்துபோய்க் கிடக்கிறது. வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடல் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், சீனா முழுவதும் வனவிலங்குகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதன் இறைச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

வுஹான் மருத்துவமனை
வுஹான் மருத்துவமனை
AP

வுஹான் நகரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என இந்தியாவைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கின்றனர். வைரஸ் தாக்குதலால் அந்த மாகாணத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்கள் மற்றும் தாய்நாட்டில் இருக்கும் அவர்களது உறவினர்களுக்காக பெய்ஜிங்கில் இருக்கும் இந்தியத் தூதரகம் மூன்றாவது உதவி எண்ணை அறிவித்தது. இதற்காக ஏற்கெனவே, +8618612083629 மற்றும் +8618612083617 என்ற இரண்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது +8618610952903 என்ற உதவி எண்ணிலும் அழைக்கலாம் என்று இந்தியத் தூதரகம் அறிவித்திருக்கிறது.

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் சுமார் 700 இந்திய மாணவர்கள் பயின்று வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு முன்பே அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். அதேநேரம், அப்படி விடுமுறைக்காக அங்கிருந்து கிளம்பாத இந்திய மாணவர்கள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்யும் என்கிறார்கள்.

சீனா - வுஹான் நகரம்
சீனா - வுஹான் நகரம்
AP

கொரோனோ வைரஸ் தாக்குதல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வுஹான் நகரம் உள்ளிட்ட சீனாவில் 12 நகரங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க சீன அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சமீபத்திய கணக்கின்படி கொரோனோ வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஐத் தொட்டிருக்கிறது. மேலும், வைரஸ் தாக்குதலால் 2,700 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டபோது பெய்ஜிங்கில் அதிவேகமாகப் பிரத்யேக மருத்துவமனையைச் சீனா கட்டியது. சார்ஸ் வைரஸ் தாக்குதலால் 800க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதேபோன்றதொரு மருத்துவமனையை வுஹானிலும் ஒருவாரத்தில் கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளது சீனா. இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி முதல்வாரத்தின் மத்தியில் வேலைகள் முடிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன மக்கள் வரும் 30ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை புத்தாண்டுக் கொண்டாட தயாராகி வந்தனர். இந்தநிலையில் வைரஸ் அச்சுறுத்தலால், புத்தாண்டு விடுமுறையை சீன அரசு அதிகரித்திருக்கிறது.

வுஹான் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டவர்களை மீட்க மற்ற நாடுகள் முயன்றுவருகின்றன. இந்தநிலையில், அங்கிருந்து அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற சீனா ஒப்புதல் அளித்திருக்கிறது. வுஹானில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் விமானம் மூலம் தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை தாய்நாட்டுக்குத் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், ஜப்பானும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த சுமார் 500 பேர் ஹுபேய் மாகாணத்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சீனா - வுஹான் நகரம்
சீனா - வுஹான் நகரம்
AP
`வுகானில் பயோ-வெப்பன் ஆய்வுக்கூடம் வைத்துள்ளதா சீனா?!'- உலக நாடுகளை பயமுறுத்தும் புதிய தகவல்

இதனால், அங்கிருந்து இந்தியர்களையும் தாய்நாட்டுக்குக் கொண்டுவரும் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவும் அந்த முயற்சியையும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விரைவில் வுஹானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாய்நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவிகிதம் பேர் சீனாவில் வசிப்பவர்கள். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, சீனாவுக்கு வெளியே இந்த வைரஸால் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 26 பேர் வுஹான் நகர் வழியாகப் பயணித்தவர்கள். கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அதன் அறிகுறிகள் காட்டத் தொடங்கும் என்கிறார்கள் சீன மருத்துவர்கள். இதனால், இரண்டு வார இடைவெளியில் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணித்தவர்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஹாங்காங் அரசு தடை விதித்திருக்கிறது.

சீனா - வுஹான் நகரம்
சீனா - வுஹான் நகரம்
AP

சீனாவிலிருந்து இந்தியா திரும்புவர்களுக்கு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உடல் வெப்பநிலையைக் கண்டறியும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு நாடுகள் சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளை ஸ்கேன் செய்தபிறகே அனுமதிக்கின்றன. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்று சோதனை நடத்தப்படுகிறார்கள்.

`4 சந்திப்புகள்; 7 மணிநேரம்!' - மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்குத் தயாராகும் மாமல்லபுரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான முதல் உச்சி மாநாடு, 2018ம் ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகர், இந்த சந்திப்புக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. சீனப் பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்த நகர் இந்த வுஹான்.

மோடி - ஜி ஜின்பிங் வுஹான் சந்திப்பு
மோடி - ஜி ஜின்பிங் வுஹான் சந்திப்பு

ஹுபேய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரை யாங்க்ட்ஸ் மற்றும் ஹான் (Yangtze and Han rivers) என இரு ஆறுகள் வளப்படுத்துகின்றன. தங்கள் நாட்டின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தவே, மோடி - ஜி ஜின்பிங் இடையிலான முதல் இன்ஃபார்மல் சந்திப்புக்கு அந்த நகரை சீனா தேர்வுசெய்திருந்தது. அந்த நகரம்தான் தற்போது கொரோனோ வைரஸ் தாக்குதலால் வெளிஉலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு