Published:Updated:

`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை!' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona

செவிலியர்கள்
செவிலியர்கள்

சீனாவில் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

`கொரோனா வைரஸ்’ இந்தப் பெயர் சீன மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செவிலியர்களின் புகைப்படங்கள் நம்மைக் கண்கலங்கச் செய்கின்றன. வுகான் நகரம் மருத்துவத் துறைக்குப் பெயர் போன நகரம். மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என நிரம்பியிருக்கும் இந்த மாகாணத்திலிருந்துதான் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதமே காய்ச்சல் காரணமாக அனுமதியான 7 நபர்களுக்கு வித்தியாசமான பாதிப்பு இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 நபர்களும் வுகான் மாகாணத்தில் உள்ள விலங்குகள் சந்தைக்கு அருகே வசித்தவர்கள். டிசம்பர் மாதமே வுகான் மருத்துவர்களிடம் இந்த நோய் குறித்த விவாதங்கள் எழுந்தன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது. ஜனவரி மாதத்தில் இந்த நோய் மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு பின்னர்தான் உணர்ந்துகொண்டது. ஆனால், அதற்குள் கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உறுதிசெய்ய, ஜனவரி 31-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘சர்வதேச மருத்துவ அவசரநிலை’எனப் பிரகடனப்படுத்தியது.

`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி

கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தன் தாய்க்கு 9 வயது மகள் உணவு கொண்டு வந்து தரும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதேபோல் தற்போது சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன. முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு நேரம்காலம் பார்க்காமல் மருத்துவ சேவைகள் செய்யும் செவிலியர்களின் புகைப்படம் அது.

செவிலியர்கள்
செவிலியர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர். முகத்தில் அணிந்திருக்கும் `மாஸ்க்’ செவிலியர்களுக்குக் கடுமையான வடுக்களை ஏற்படுத்துகின்றது. நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் இதுபோன்ற வடுக்கள் ஏற்படுகின்றன. அந்தக் காயத்துக்கு பிளாஸ்திரிகளைப் போட்டுக்கொண்டு மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்ந்து வருகின்றனர் செவிலியர்கள். இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.

`மகளால் கலங்கிய தாய்; வைரல் வீடியோ'!- பாசப்போராட்டத்தில் சீன செவிலியர்கள் #Coronavirus
அடுத்த கட்டுரைக்கு