Published:Updated:

`3000 ஆண்டுகள் பழைமையான மருத்துவம்’ - கொரோனாவுக்கு எதிராக பாரம்பர்ய முறையைக் கையில் எடுத்த சீனா

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாரம்பர்ய மருந்தை வழங்கி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 20-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வுகான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் அதைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கும் அதிகமான நோயாளிகளுக்குப் பாரம்பர்ய சீன மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதார அமைப்பின் தலைவர் வாங் ஹெஷெங் (Wang Hesheng) கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து... ஆஸ்திரேலிய வாழ் இந்திய விஞ்ஞானியின் நம்பிக்கை தரும் ஆய்வு!

``பாரம்பர்ய சீன மருத்துவர்கள் வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தவும் சிகிச்சையாக்கவும் ஹூபே மாகாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எங்களின் இந்த முயற்சி நல்ல பலனளித்து வருகிறது. வைரஸ் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 2,200 பாரம்பர்ய மருத்துவர்கள் ஹூபே மாகாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வாங் தெரிவித்துள்ளார். சீனர்கள் பயன்படுத்தும் பாரம்பர்ய மருந்துகள் 3,000 ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது.

பாரம்பர்ய சீன மருத்துவம்
பாரம்பர்ய சீன மருத்துவம்

ஹூபே மாகாணத்தில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிக அளவிலான மக்கள் உள்ளனர். அங்கு ஒரே வாரத்தில் இரண்டு பெரும் மருத்துவமனைகள் கட்டப்பட்டாலும் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனாவின் பிற நகரங்களிலிருந்து இன்னும் ஆயிரக்கணக்கான பொது மருத்துவர்களும் ஹூபே மாகாணத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை வசதி, மருத்துவர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறையால் ஹூபே மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு