Published:Updated:

வெளியேறிய 50 லட்சம் பேர்; ஒரே நாளில் 108 பேர் பலி... வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! #Corona

கொரோனா நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சீன அதிபர்
கொரோனா நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சீன அதிபர்

சீன அதிபர் ஷீ ஜின்பிங் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைப் பார்வையிட்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரமாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 108 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகின் பொருளதார வல்லரசான சீனாவை கொரோனா வைரஸ் சீரழித்து விட்டது என்று சொல்லுமளவுக்கு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலத்தைத் தாண்டி மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தற்போது வரை 42,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொரோனா தாக்கியுள்ளது. இவர்கள், தீவிர சிகிச்சையில் உள்ளனர். 1.87 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

கொரோனா தாக்கி இறந்தவர்கள் புதைப்பு
கொரோனா தாக்கி இறந்தவர்கள் புதைப்பு

வுகான் நகரில் மட்டும் 20,000 டாக்டர்கள் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் குழு இன்று சீனா வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் வாழும் சீன தொழிலதிபரான குவாங் வெங்கூய், ``15 லட்சம் சீன மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். சீன அரசு உண்மையான தகவல்களை மறைத்து வருகிறது'' என்று குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட வுகான் நகரிலிருந்து 50 லட்சம் பேரைக் காணவில்லை. அவர்கள் எங்கே சென்றனர் என்று தெரியவில்லை. இவர்களால் கொரோனா சீனா முழுவதும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சில வருடங்கள் இடைவெளியில் சீனாவை ஏதாவது ஒரு வைரஸ் தாக்குவது வழக்கமாகவே உள்ளது. 2003- ம் ஆண்டு சீனாவை சார்ஸ் வைரஸ் தாக்கிய போது 774 உயிர்கள் பலியாகின. இப்போது, கொரோனா சீன மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று வருகிறது. சீனாவில் புத்தாண்டு விடுமுறை முடிந்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

மருத்துவமனையில் சீன அதிபர்
மருத்துவமனையில் சீன அதிபர்

சீன பிரதமர் லீ கெக்யாங் வசம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியை சீன அதிபர் ஜின் பிங் ஒப்படைத்துள்ளார். வுகானுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை லீ கெக்யாங் பார்வையிட்டார். ஆனால், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்து விட்டதாகவும் கடந்த மூன்று வாரங்களாக அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. சாகும் வரை சீன அதிபராக இருக்கும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த ஜின்பிங் மக்களின் இக்கட்டான தருணத்தில் உடனிருந்து உதவவில்லை என்றும் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஜின்பிங் குடும்பத்துடன் வெளியேறி விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தகவலில் உண்மை இல்லை என இன்று தெரியவந்திருக்கிறது.

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?

சீன அதிபர் ஜின்பிங் நேற்று பெய்ஜிங்கில் உள்ள திதான் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தார். அப்போது, சீன அதிபர் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்தார். `தனக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா' என்று பரிசோதித்துக்கொண்டார். மேலும், வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸிங் வழியாக ஜின்பிங் பேசி ஆறுதலளித்தார். பின்னர், மருத்துவக் குழுவினரிடத்தில் நிலைமையைக் கேட்டறிந்த ஜின்பிங், மோசமாகவே சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

ஜின்பிங்
ஜின்பிங்

கொரோனா வைரஸ் விஷயத்தில் சீன சுகாதாரத்துறை அலட்சியம் காட்டியதன் விளைவாகவே அதிகளவில் உயிர்கள் பலியானதாகச் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே சார்ஸ் போன்ற வைரஸ் சீனாவைத் தாக்கியுள்ளதாக வீ சாட் மெசஞ்சரில் மருத்துவர்கள் சிலர் பேசிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. அதற்குப் பிறகு, மூன்று வாரங்கள் கழித்தே கொரோனா வைரஸ் பாதிப்பை சீனா ஒப்புக் கொண்டது. சீனாவில் பள்ளி, பல்கலைக்கழகங்கள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து இல்லை. மக்கள் கூட்டமாகச் சேர்ந்து உணவு அருந்தவேண்டாம் என்றும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாகவும் சீனாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிலும் பொருளதார மந்த நிலை அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல் துறை உற்பத்தியில் இந்தியா, பெரும்பாலும் சீனாவைச் சார்ந்துள்ளது. மூலப் பொருள்கள் கிடைக்காத பட்சத்தில், அதிக தொகை கொடுத்து பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியிலும் சீனப் பொருள்களின் பயன்பாடு அதிகம். இதனால், மாருதி உள்ளிட்ட இந்திய கார் நிறுவனங்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை
`ஜனவரி 10-24; வுஹானை விட்டு வெளியேறிய 50 லட்சம் பேர்!' - #Corona பரவலை தடுக்கத் தவறியதா சீனா?

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளில் 3.12 சதவிகிதம் பேர் சீனர்கள். கொரோனா வைரஸ் காரணமாக இந்திய சுற்றுலாத்துறையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 14 சதவிகிதப் பொருள்களை சீனா இறக்குமதி செய்கிறது. சீனா தன் மொத்த உற்பத்தியில் 5 சதவிகிதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. கொரோனா பாதிப்பால் சீனா மட்டுமல்ல, இந்தியாவும் பொருளாதாரரீதியாக இழப்பைச் சந்தித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு