Published:Updated:

கொரோனா விவகாரத்தை நாட்டோடு நாடு ஒப்பிடுவது சரிதானா?

corona pandemic
corona pandemic

ஒப்பிட்டறியும் மனப்போக்கு மனிதனின் இயல்பானாலும், கொரோனா விவகாரத்தில் நாடுகளை ஒப்பிடுவது நமக்கு சரியான தீர்வுகளைக் கொடுக்குமா?

தொழில்நுட்ப யுக வரலாற்றில், இதுவரை இல்லாத பேரிழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் உலகில் பலர் இறந்திருப்பதும், ஒரே நேரத்தில் பல நாடுகள் பெரும் பொருளாதார சரிவைக் காண்பதும் இதுவே முதன்முறை. உலகின் வேகத்திற்கு ஓட ஆரம்பித்த பின், நாமே இத்தனை நாள்கள் வீட்டில் முடங்கி இருப்பதும் இதுவே முதல்முறை.

உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த பாதிப்பு இருப்பதால், கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்று தெரிந்துகொள்வதில் அனைவருக்குமே ஓர் அலாதியான ஆர்வம் இருக்கிறது. அதேபோல, எந்தெந்த நாடுகள் வைரஸ் தாக்கத்தை சரியான முறையில் எதிர்கொண்டு வருகின்றன, எந்ததெந்த நாடுகள் கோட்டை விட்டிருக்கின்றன, நம் நாடு மற்ற நாடுகளைவிட சிறப்பாகச் செயல்படுகிறதா, என்கிற ஓப்பீட்டையும் செய்துவருகிறோம். இந்த நாடு சூப்பர் , அந்த நாடு வொர்ஸ்ட் என ரேங்க்கிங் கொடுத்துவருகிறோம். ஒப்பீடு என்பது மனிதனின் இயல்பான குணம் என்றாலும், இதுபோன்ற விஷயத்தில் ஒரு நாட்டுடன் மற்றொரு நாட்டை ஒப்பிடுவது என்பது சரிதானா?

நாடுகளை ஒப்பிடுவது நமக்கு சரியான தீர்வுகளைக் கொடுக்குமா?

Corona Virus
Corona Virus

உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். கொரோனா வைரஸுக்கு அதிக அளவில் மக்கள் பலியாகியுள்ளது அமெரிக்காவில்தான். இதுவரை 45,000-க்கும் அதிகப்படியான மக்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை 32.89 கோடி. மேற்கு ஐரோப்பாவின் ஐந்து பெரிய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகையே 32.5கோடிதான். ஆனால், இந்த நாடுகளில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரம். ஏறத்தாழ அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம். எனவே, நாடுகளின் தனிப்பட்ட புள்ளிவிவரங்களில் ஒப்பிடுவது முழுமையான தீர்வுகளைத் தராது.

இறந்தவர்களின் எண்ணிக்கை!

இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாட்டின் தரவுகளும் ஒவ்வொரு விதத்தில் உள்ளன. பிரான்ஸை எடுத்துக்கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீடுகளில் இறந்தவர்களையும், இறப்பு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மருத்துவமனையில் இறந்தவர்கள் மட்டுமே இறப்பு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இறப்பு எண்ணிக்கையைக் குறிப்பிடுவதற்கு, பொதுவான சர்வதேச அளவீடுகள் என்று ஏதும் இல்லை. அதேபோல, இறந்தவர்களை கொரோனா வைரஸால் இறந்தவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பாஸிடிவ் என வந்திருக்க வேண்டுமா... இல்லை, ஒருவர் இறந்தபின் அவர் கொரோனா வைரஸ் காரணமான இறந்திருக்கலாம் என்கிற மருத்துவரின் சந்தேகம் போதுமானதா என்பன குறித்தும் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகள் என எதுவும் இல்லை.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்
AP

இறப்பு விகிதம்!

கொரோனா உறுதியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இடையேயான விகிதத்தைக்கொண்டு நாடுகளை ஒப்பிடுவது நமக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், அதிலும் பல குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பரிசோதனைத் திட்டங்கள் கையாளப்படுகின்றன. இங்கிலாந்தில், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், அறிகுறிகளுடன் இருப்பவர்களும் அவர்களைச் சுற்றி இருந்தவர்களும் பரிசோதிக்கப்படுகின்றனர். எனவே, கொரோனா உறுதியானவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு இடையேயான விகிதத்தைக்கொண்டு ஒப்பிடுவதும் தவறானது.

ஒரு நாட்டின் மக்கள்தொகை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு இடையேயான விகிதம் அல்லது ஒருலட்சம் மக்களில் இத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற கணக்கில் ஒப்பீடு செய்யலாம். இருப்பினும், கொரோனா பரவும் நிலையைக் கருத்தில்கொள்ளும்போது, முடிவுகள் மாறுபடும். அதாவது, சீனா போன்ற கொரோனா பரவல் தொடங்கிய காலத்திலேயே பாதிக்கப்பட்ட நாடுகளில் நீண்ட காலமாக நோய்தொற்று உள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒருநாடு குறிப்பிட்ட அளவிலான இறப்புகளைச் சந்திக்கும்போது எடுக்கும் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நாடுகளை ஒப்பிடலாம். உதாரணமாக, ஐம்பதாவது இறப்பை சந்திக்கும்போது, எல்லா நாடுகளும் வைரஸ் பரவல் குறித்து தெளிவான அறிவைப் பெறுகின்றன. எனவே, இப்படி ஒப்பிடுவது சரியானதாகத் தோன்றலாம். ஆனால், இப்படி ஒப்பிடுவதிலும் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன.

அரசியல் சவால்கள்!

வெளிப்படைத்தன்மை இல்லாத, மிகவும் இறுகிய அரசியல் கட்டமைப்புகொண்ட வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையானது என நம்பிக்கை கொள்ள இயலாது. உதாரணமாக, சீனா, இரான் போன்ற நாடுகள் வெளியிட்டுள்ள தரவுகளின் உண்மைத்தன்மைமீது அனைத்து நாடுகளுக்கும் சந்தேகங்கள் உள்ளன. வுஹானில் இறந்தவர்களின் எண்ணிக்கையாக சீனா வெளியிட்டுள்ள தகவல்களில், பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சதவிகிதமாக வெளியிடும் கணக்குகளை மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது, இறந்தவர்களின் எண்ணிக்கையில் பல வேறுபாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனா
கொரோனா

மக்கள்தொகை வேறுபாடுகள்!

ஒரு நாட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் இடையே உள்ள மக்கள்தொகைக்கு இடையேயான வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு மக்கள் தொகையில் இளைஞர்களே உள்ளனர். கொரோனா வைரஸ் வயதானவர்களை எளிதில் பாதிக்ககூடியது என்பது நாம் அறிந்ததே.

மேலும், குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் அதிகப்படியான மக்கள் அடர்த்திகொண்ட இடங்களில், அதிகமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதேநேரம், அயர்லாந்து போன்ற நாடுகளில் பெருமளவு மக்கள் நகரங்களில் வசிப்பதில்லை. எனவே, அத்தகைய நாடுகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது எளிது.

சுகாதார அமைப்புகளின் மாறுபட்ட தன்மை

ஐரோப்பிய நாடுகள், பெரும்பாலும் நல்ல நிதியுதவி கிடைக்கக் கூடிய சுகாதார மையங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆப்பிரிக்க நாடுகள் அப்படியில்லை. எனினும், அந்நாடுகளும் தங்கள் மக்களைக் காக்க நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

மக்கள், முறையான தீவிர சிகிச்சை மருத்துவமனைக்குச் செல்வது எவ்வளவு எளிது, தரமான சிகிச்சையைப் பெற மக்கள் பணம் கொடுக்க வேண்டுமா போன்றவை நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.

மேலும், நாட்டின் கலாசாரத்தைப் பொறுத்து, ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிமையானதாகவும் சிக்கலாகவும் உள்ளது. இவற்றிலிருந்து ஒப்பிடுவதன்மூலம் சரியான மதிப்பீடுகள் சாத்தியமாகாது எனத் தெரியவருகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

பரிசோதனை செய்வதில் உள்ள வேறுபாடுகள்...

தொற்றுநோயின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து தீவிரமாக மக்களுக்கு சோதனைகளைச் செய்த நாடுகள், குறைந்த பாதிப்பையே சந்தித்துள்ளன. ஜெர்மனி மற்றும் தென்கொரியா நாடுகளில் பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளதற்கு இதுவே காரணம்.

ஆனால், எல்லா நாடுகளின் சோதனை எண்ணிக்கையையும் ஒப்பிட முடியாது. சில நாடுகள் சோதனைசெய்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை வெளியிடுகின்றன. சில நாடுகள் செய்யப்பட்டுள்ள சோதனைகளின் எண்ணிக்கையை வெளியிடுகின்றன. ஒரு சிலருக்கு ஒன்றுக்கு அதிகமான முறை சோதனை செய்யவேண்டிய தேவை ஏற்படலாம் என்பது நாம் அறிந்ததே.

ஜெர்மனியும் தென் கொரியாவும் தீவிரமாக மக்களுக்கு சோதனைகளை மேற்கொண்ட அதே நேரத்தில், இத்தாலியும் சோதனைகளை மேற்கொண்டது. ஆனால், அந்த நேரத்தில் இத்தாலியில் ஏறத்தாழ பலருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

மேற்கண்ட தரவுகளிலிருந்து ஒப்பீடுகள் மூலம் ஏதேனும் பயனுள்ள மதிப்பீடுகளைப் பெற முடியாது என நாம் அறிந்துகொள்ளலாம்.

நாம் தெரிந்துகொள்ள விரும்புவது, ஒரு நாடு எப்படி மற்ற நாடுகளைவிட சிறப்பாகச் செயல்படுகிறது. அந்த நாடுகளிடமி ருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதே...

ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வழிமுறைகளில் செயல்பட்டு, மக்களைக் காக்கவேண்டிய சூழல் உள்ளது. இந்தச் சூழலில், அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுக்குத் துணை நின்று வைரஸ் ஒழிப்பிற்கு வழிவகை செய்வதே ஆரோக்கியமாகும்.

அடுத்த கட்டுரைக்கு