அலசல்
Published:Updated:

கொரோனா பிசினஸ்! - அபகரிக்கும் அமெரிக்கா... தரமற்றதை விற்கும் சீனா!

கொரோனா பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பிசினஸ்

பொதுவாக, உலகின் எந்த மூலையில் பாதிப்பு நிகழ்ந்தாலும் முதலில் ரியாக்ட் செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கும்.

‘பணம் படைத்தவர்களே மருந்துகள் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் அபகரித்துக்கொண்டால், ஏழைகள் என்ன செய்வது?’ - கொரோனா அச்சுறுத்தும் இந்த நேரத்தில் சமூக ஆர்வலர்களின் கேள்வி இது. இந்த ஆதங்கம், மக்கள் மத்தியில் மட்டுமல்ல... உலக நாடுகள் மத்தியிலும் இருக்கிறது. ‘கொரோனா தடுப்பு மருந்துகளும் உபகரணங் களும் உலகின் பல நாடுகளுக்கும் பயன்பட வேண்டிய சூழலில், அமெரிக்கா அவற்றை ஒட்டுமொத்தமாக அபகரிக்கப்பார்க்கிறது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சரியும் வல்லரசு இமேஜ்!

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகம். அந்தத் தேசத்தின் ‘வல்லரசு’ பெருமை, சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. பாதிப்பை சரியாகக் கணிக்கத் தெரியாமலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும் திணறுகிறது அமெரிக்கா. குப்பை போடும் பாலித்தீன் பைகளை, பாதுகாப்புக் கவச உடைபோல் நர்ஸுகள் அணிகின்றனர். டாக்டர்கள், தங்கள் முகக்கவசங்களைத் துவைத்துப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு பற்றாக்குறை!

‘ஒவ்வொரு மாகாணமும் தங்களுக்குத் தேவையானவற்றை நேரடியாக வாங்கிக்கொள்ள வேண்டும்’ என உத்தரவிடப்பட்டதால் வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. நியூயார்க் மிக அதிகளவு பாதிப்புகளுடன் உபகரணங்கள் கிடைக்காமல் திணறுகிறது. ஆனால், இதை கண்டுகொள்ளாமல் பாதிப்பே இல்லாத சில மாகாணங்களும் அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்கிக் குவிக்கின்றன. கிட்டத்தட்ட பதுக்கல்போல்தான் இதுவும். இந்த இரக்கமற்ற போட்டியால், அமெரிக்கர்கள் தவித்துப்போயிருக்கின்றனர்.

பெருமை பேசும் ட்ரம்ப்!

பொதுவாக, உலகின் எந்த மூலையில் பாதிப்பு நிகழ்ந்தாலும் முதலில் ரியாக்ட் செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கும். ஈராக்கில் போர் நடத்துவதாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளைத் தாக்குவதாக இருந்தாலும் அமெரிக்காவே களமிறங்கும். உள்நோக்கங்கள் சில இருந்தாலும், நிதியுதவி செய்வதிலும் குறை வைப்பதில்லை அமெரிக்கா. ஆப்பிரிக்க நாடுகளை `எபோலா’ தாக்கியபோது, அதிக நிதியுதவி செய்தது. இப்போது பணக்கார நாடுகளே கொரோனாவைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் சூழலில், சர்வதேச சமூகத்துக்கு அமெரிக்கா மிகக் குறைவாகவே பங்களிப்பு செய்துள்ளது. என்ன செய்வது? உள்ளூர் தேவைகளைச் சமாளிக்கவே திணற வேண்டியுள்ளதே!

கொரோனா பிசினஸ்
கொரோனா பிசினஸ்

‘‘நம் வாழ்வாதாரத்துக்கு நாம் எந்த வெளிநாட்டையும் நம்பி இருக்கவில்லை’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியில் பெருமை பேசினாலும், உள்ளுக்குள் நடப்பது வேறு! பாதுகாப்பு அவசர சட்டத்தை அமல்படுத்தி யுள்ளார். இதன்படி, அமெரிக்க நிறுவனங்கள் எல்லாமே உள்நாட்டுத் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கொரோனா பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், இந்தக் கருவிகளை அமெரிக்க அரசு இப்போது எடுத்துக்கொள்ள முடியும். இந்தியாவுக்குக் கிடைக்காது. இப்படி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பல அத்தியாவசிய உபகரணங்களை, உலக நாடுகளுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிட்டது.

அடித்துப் பிடுங்கும் உத்தி!

உள்நாட்டுத் தயாரிப்புகளை தங்களுக்கு மட்டுமே எடுத்துக்கொள்வதுடன் விடவில்லை அமெரிக்கா. உலகெங்கும் போய் அடித்துப் பிடுங்குகிறது. ‘கொரோனாவைச் சமாளிக்க முகக்கவசம் தொடங்கி வென்டிலேட்டர் வரை 25 விதமான பொருள்கள் தேவை’ என அமெரிக்க அரசு பட்டியல் போட்டு அனுப்பிவைத்துள்ளது. உலகெங்கும் இருக்கும் அமெரிக்கத் தூதர்கள் பலரும், அந்தந்த நாடுகளில் கிடைக்கும் தரமான பொருள்களை வாங்கி அனுப்பிவைக்கும் பணியில் இப்போது பிஸி!

‘நோய்த்தொற்றைப் பரப்பி உலகையே தீவிர சிகிச்சைப் பிரிவில் தள்ளிவிட்டது சீனா. இப்போது உலகெங்கும் தொழில்கள் முடங்கிய நேரத்தில், தான் மட்டுமே உற்பத்தி செய்து சம்பாதிக்கிறது!’

தென் கொரியாவில் முகக்கவசமும் பரிசோதனைக் கருவிகளும் நிறைய இருப்பதாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு அதிபருக்கு ட்ரம்ப் போனில் பேசி உதவி கேட்டார். ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்’ என்ற மலேரியா மருந்தையே கொரோனா சிகிச்சையில் பிரதானமாகப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. இந்த மருந்து, இந்தியாவில் அதிகம் தயாராகிறது. நம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, இதன் ஏற்றுமதியைத் தடைசெய்தது மத்திய அரசு. இந்தத் தடையைத் தளர்த்தி அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப வேண்டும் என்பதற்காகவே ஏப்ரல் 4-ம் தேதி நம் பிரதமர் மோடியுடன் பேசினார் ட்ரம்ப்.

நவீன கொள்ளை!

அதிக கொரோனா மரணங்களைச் சந்தித்து, திணறிக்கொண்டிருக்கிறது இத்தாலி. ஆனால், அங்கிருந்துகூட ஐந்து லட்சம் பரிசோதனை உபகரணங்களை அமெரிக்கா வாங்கிவிட்டது. இதைவிட மோசமாக இன்னொரு விஷயம் நடந்தது. ‘3எம்’ என்ற அமெரிக்க நிறுவனம் முகக்கவசங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை சீனாவில் வைத்திருக்கிறது. காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக இங்கிருந்து இரண்டு லட்சம் ‘என்95’ முகக்கவசங்களைக் கேட்டிருந்தது ஜெர்மனி. அவை ஒரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இடையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் விமானநிலையத்தில் அந்த விமானம் இறங்கியது. அமெரிக்க அரசு ஓர் அவசர உத்தரவு பிறப்பித்து, அந்த விமானத்தை அப்படியே தங்கள் நாட்டுக்கு எடுத்துப் போய்விட்டது. வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்திடாத சம்பவம் இது. ‘கடல் கொள்ளையர்கள் செய்வதைவிட மோசமான செயல் இது. நவீன கொள்ளை’ என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், ட்ரம்ப் கவலைப்படவில்லை.

கொரோனா பிசினஸ்
கொரோனா பிசினஸ்

அண்டைநாடான கனடாவிலிருந்தும் இதே போன்ற வேலைகளை அமெரிக்கா செய்ய, ‘எல்லா நாடுகளுமே நோயுடன் போராடும்போது, இந்தப் பொருள்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்’ எனக் கண்டித்துள்ளது கனடா.

மருத்துவ நட்புறவு!

இப்படி அமெரிக்கா தன் சொந்தப் பிரச்னைகளால் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், உலக நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது சீனா. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்துக்கு வென்டிலேட்டர்கள் வழங்கி, ‘உன்னைவிட நான் பெரிய ஆள்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

சீனாவின் வர்த்தகக் கரங்களை உலகெங்கும் கொண்டுசெல்வதற்காக ‘பெல்ட் ரோடு’ என்ற பெயரில் ஒரு மெகா போக்குவரத்துத் திட்டத்தை சீனா சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. இதில் தன்னுடன் இணைந்த இத்தாலி, செர்பியா, செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உதவிகள் செய்துள்ளது. பாகிஸ்தான், ஈரான், ஈராக், இலங்கை போன்ற நாடுகளுக்கு மருத்துவப் பொருள்களையும் டாக்டர்கள் குழுவையும் அனுப்பியுள்ளது.

அதிக இழப்புகளைச் சந்தித்துள்ள ஸ்பெயின் பிரதமரிடம் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘‘புயலுக்குப் பிறகு ஒரு விடியல் வரும்’’ என நம்பிக்கை தந்திருக்கிறார். செர்பிய அதிபரோ, ‘‘எங்களுக்கு நெருக்கடியான நேரத்தில் சீனா மட்டும்தான் உதவியது. ஜி ஜின்பிங் எனக்கு சகோதரர்போலவும் நண்பர்போலவும் இருக்கிறார்’’ என நெகிழ்கிறார். கொரோனா உலகெங்கும் நிகழ்த்தும் இழப்புகளுக்கு, சீனா மீது இயல்பாக எழும் கோபத்தை இந்த ‘மருத்துவ நட்புறவு’ தன்னை உலகின் நம்பகத்துக்குரிய தலைவனாக மாற்றும் என நம்புகிறது சீனா.

உண்மை முகம் தெரிகிறது!

ஆனால், சீனாவுக்கு எதிர்ப்பு களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் அரசியல் எல்லைகளைத் தாண்டி சீனாவுக்கு எதிரான கோபம் பெரிதாக வெடித்துள்ளது. கொரோனாவுக்கு சீனா மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த ஆரம்பக் காலத்தில் முகக்கவசங்கள் முதல் டாக்டர்களுக்கான பாதுகாப்பு உடைகள் வரை எல்லாவற்றுக்கும் அங்கு பெரும்தேவை இருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் செயல்படும் இரண்டு சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அங்கிருந்து எல்லாவற்றையும் வாங்கி சீனாவுக்கு அனுப்பின. பாதுகாப்பு உடைகளே சுமார் ஒரு லட்சம் வரை போயிருக்கும் என்கிறார்கள்.

கொரோனா பிசினஸ்
கொரோனா பிசினஸ்

ஆஸ்திரேலியா கடும் நெருக்கடியில் தவிக்கும் போது அங்கு எதுவுமே இல்லை. ஏற்றுமதிகளுக்குத் தடை போட்டுவிட்டு, இப்போது அவர்கள் அதிக விலை கொடுத்து சீனாவிலிருந்து வாங்குகிறார்கள். ‘நோய்த்தொற்றைப் பரப்பி உலகையே தீவிர சிகிச்சைப் பிரிவில் தள்ளிவிட்டது சீனா. இப்போது உலகெங்கும் தொழில்கள் முடங்கிய நேரத்தில், தான் மட்டுமே உற்பத்தி செய்து சம்பாதிக்கிறது’ என்பது, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் கோபம்.

திரும்பிவரும் தரமற்ற பொருள்கள்!

சீனாவின் முகமூடிக்குப் பின்னே இருக்கும் உண்மையான முகத்தை இப்போதுதான் பார்ப்பதாக இன்னும் சில நாடுகளும் கொந்தளிக் கின்றன. முகக்கவசம் முதல் வென்டிலேட்டர் வரை எல்லாவற்றுக்கும் சீனாவையே பல நாடுகள் நம்பியுள்ளன.

ஸ்பெயின் மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு பொருள்களை வாங்கியுள்ளது. ஆனால், அவர்கள் வாங்கிய சுமார் 50,000 பரிசோதனைக் கருவிகள் தரமற்றவையாக இருப்பதாகக் குற்றம்சாட்டி திருப்பி அனுப்பி யுள்ளனர். ‘‘இவற்றை ‘பயோ ஈஸி’ என்ற நிறுவனம் எந்த லைசென்ஸும் இல்லாமல் தயாரித்துவிட்டது. அதுதான் பிரச்னை’’ எனச் சமாளித்திருக்கிறது சீனா. ‘தவறான ஒரு முடிவுகூட ஆபத்தை ஏற்படுத்திவிடும். இவ்வளவு அலட்சியமாகவா இருப்பது’ எனக் கொந்தளிக்கிறது ஸ்பெயின். துருக்கி, செக் குடியரசு, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் ‘சீன பரிசோதனைக் கருவிகள் தவறான முடிவைக் காண்பிக்கின்றன’ எனத் திருப்பி அனுப்பிவிட்டன.

‘சீனா இலவசமாகக் கொடுத்த முகக்கவசங்கள் தரமற்றவையாக இருக்கின்றன’ என துருக்கி மருத்துவத் துறை குற்றம் சாட்டியுள்ளது. நெதர்லாந்தும், ‘இந்த முகக்கவசங்கள் முகத் துக்குப் பொருந்தவும் இல்லை. அவற்றில் உள்ள வடிகட்டிகள் எந்த வைரஸ் தொற்றையும் தடுக்காது’ எனக் குற்றம் சாட்டியுள்ளது.

சீனா அனுப்பிய மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடையும் இதேபோன்ற சர்ச்சையைச் சந்தித்துள்ளது. அயர்லாந்தும் நெதர்லாந்தும், ‘இவை, மருத்துவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்காது’ என வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தன. உலகமே அச்சத்தில் இருக்கும் நேரத்திலும் இப்படி ‘அவசர அடி’ வியாபாரத்தில் சீனர்கள் இறங்கியிருப்பது, அந்த நாட்டின் மீதான அதிருப்தியை அதிகமாக்கி யுள்ளது. கொரோனா காட்டும் மற்றுமொரு கொடூர முகம் இது. உலக நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணமும் இதுவே!