Published:Updated:

`சிறுநீரக பாதிப்பு; சீரற்ற இதயத் துடிப்பு’- உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் கொரோனா?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பதாக உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மனிதக் குலத்தை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,84,723- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,34,685- ஆகவும் உள்ளன. வைரஸால் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் உள்ள சிறிய காற்று பையில் வீக்கத்தை ஏற்படுத்தி அடைப்பதன் மூலம் ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டு மூச்சுத் திணறல் உருவாகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.

கொரோனா
கொரோனா

ஆனால் கொரோனா வைரஸால் நுரையீரல் மட்டுமல்லாது இதய பாதிப்பு, கடுமையான சிறுநீரக நோய், நரம்பியல் செயலிழப்பு, இரத்த உறைவு, குடல் பாதிப்பு மற்றும் கல்லீரல் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, இருமல், தும்மல், உடல் வலி போன்றவையே கூறப்பட்டன. பிறகு வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்குச் சுவை மற்றும் நுகரும் திறன் இல்லை எனத் தெரிவித்தனர். அதனால் கொரோனா வைரஸின் முழுமையான அறிகுறிகள் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வந்தனர்.

`கொரோனா பாதித்தவர்கள் அதிகம் குணமானது இங்குதான்!’ -புள்ளிவிவரங்களை வெளியிட்ட பினராயி விஜயன்

இந்த நிலையில்தான் தற்போது புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதிப் பேரின் சிறுநீரில் ரத்தம் அல்லது புரதம் இருப்பதால் அவர்களின் சிறுநீரகங்களுக்கு ஆரம்பத்திலேயே சேதம் ஏற்படுகிறது என அமெரிக்காவின் யெல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் சிறுநீரக நிபுணர் ஆலன் கிளிஜர் கூறியுள்ளார்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

இதுபோன்ற பாதிப்புள்ள நோயாளிகளுக்கு டயாலிசிஸ் கட்டாயம் தேவைப்படுவதாகவும் அதற்கான போதுமான பணியாளர்கள் இல்லாததால் நியூயார்க்கில் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மக்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதை தன் மருத்துவ வாழ்வில் பார்த்ததில்லை என்றும் இது தனக்கு மிகவும் புதிதாக இருப்பதாகவும் கிளிகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல வுகானில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனையில் 26 பேரில் 9 பேருக்குக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு இருந்ததும் 7 பேருக்குச் சிறுநீரகங்களில் கொரோனா வைரஸின் துகள்கள் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக, கிட்னி இன்டர்நேஷனல் என்ற மருத்துவ இதழில் வெளியான வுகான் விஞ்ஞானிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய வலி
இதய வலி

கொரோனா வைரஸ் சிறுநீரகத்தைப் போலவே இதயத்தையும் பாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சீனா மற்றும் நியூயார்க்கில் உள்ள மருத்துவர்கள் தாங்கள் பரிசோதித்த கொரோனா நோயாளிகளுக்கு மாரடைப்பு, இதய தசை அழற்சி, மிகவும் ஆபத்தான மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்ததாகச் சொல்லியுள்ளனர். நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கினாலும் திடீரென அவர்களின் இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததாக கொலம்பியா பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் மிட்செல் எல்கிண்ட் கூறியுள்ளார். இதேபோல் நரம்பு, குடல், கல்லீரல் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு