Published:Updated:

`2 மாதத்துக்கு முந்தைய நிலை இல்லை; வைரஸ் வலுவிழந்துள்ளது!’- இத்தாலி மருத்துவர்கள் #Corona

இத்தாலி
இத்தாலி ( AP )

`வைரஸ் முற்றிலும் மறைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கான போதிய அறிவியல் ரீதியான சான்றுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை’

உலகளவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த அந்நாட்டில் பாதிப்பு மிகவும் அதிகமாக உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார ஊழியர்கள் திணறினர். பின்னர், அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இத்தாலி படிப்படியாக வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது. தற்போது அதிக அளவில் அந்நாடு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. இந்த நிலையில், இத்தாலியில் வைரஸ் தொற்று பலவீனமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மருத்துவர்கள்
இத்தாலி மருத்துவர்கள்
AP

இத்தாலி, லோம்பார்டி பகுதியின் மிலனில் உள்ள சான்ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்ரில்லோ வைரஸ் தொற்று தொடர்பாகப் பேசுகையில், ``மருத்துவ ரீதியில் கொரோனா வைரஸ் இனி இத்தாலியில் இல்லை. ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு துணியில் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஒப்பிடுகையில் கடந்த பத்து நாள்களாக எடுக்கப்படும் மாதிரிகளில் வைரஸ் அதிக அளவில் குறைந்துள்ளது. மீண்டும் இயல்புநிலைக்கு எங்கள் நாடு திரும்ப வேண்டும். நாட்டில் உள்ள மக்களை அச்சுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை யாராவது கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த மாதம் தொடக்கம் முதல் இத்தாலியில் பாதிப்பு குறைந்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் புதிய யதார்த்தங்களை அரசியல்வாதிகள் கருத்தில் எடுத்துக்கொள்வதற்கான தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தடுப்பூசி, இஸ்ரேஸ் ப்ளாஸ்மா சிகிச்சை, இந்திய தடுப்பு மருந்து... மருத்துவர் விளக்கம்! #VikatanExplainer

அந்நாட்டில் சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளரான சாண்ட்ரா ஜாம்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வைரஸ் முற்றிலும் மறைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கான போதிய அறிவியல் ரீதியான சான்றுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே, இத்தாலியில் உள்ள மக்களைக் குழப்பாத வகையில் இதுதொடர்பாக கருத்துகளை தெரிவிப்பவர்களை நான் வரவேற்கிறேன். இத்தாலிய மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பெரிய அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசங்களை அணிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இத்தாலி
இத்தாலி
AP

ஜெனவோ பகுதியில் உள்ள சான் மார்டினோ என்ற மருத்துவமனையைச் சேர்ந்த தொற்று நோய்கள் துறையின் தலைவர் மாட்டியோ என்பவர், ``இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸிடமிருந்த வலிமை இன்றைக்கு இல்லை. எனவே, இன்றைய நோய்த்தொற்று மாறுபட்டது என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.

இத்தாலியில் இதுவரை 2,30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்து வந்த இத்தாலி தற்போது ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக தற்போது இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

`கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டோம்!’ -உரிமைகோரும் இத்தாலி நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு