Published:Updated:

14 நாள்கள் தனிமை, தும்மினால் விடுப்பு... கொரோனா கண்காணிப்பில் சிங்கப்பூர்!

கொரோனா - சிங்கப்பூர்
கொரோனா - சிங்கப்பூர் ( Pixabay )

ஊழியர்களின் மத்தியில் தும்மல், இருமல் போன்ற தொந்தரவுகளுடன் காணப்படுவோர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக உலக நாடுகள் முழுவதையும் பீதியில் ஆழ்த்தியிருப்பது கொரோனா வைரஸ் என்ற இரண்டு வார்த்தைகள்தான். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியா உட்பட 28 நாடுகளுக்கும் பரவிவிட்டது. இன்றைய நிலவரப்படி சீனாவில் 75,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 14,532 பேர் நோய் குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Corona Virus
Corona Virus
Pixabay

இந்தியாவிலும் சீனாவிலிருந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தக்க சிகிச்சையளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் மூன்று பேரும் நோய் பாதிப்பிலிருந்து மீண்டனர்.

இந்தியாவின் நட்பு நாடான சிங்கப்பூரிலும் இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், மீதம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனினும் அவர்களில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியாவிலும் 22 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து திரும்பும் சிங்கப்பூர்வாசிகள், நீண்ட நாள்கள் சிங்கப்பூரில் தங்கப் போகிறவர்கள் அனைவரும் வேறு எங்கும் செல்லாமல் 14 நாள்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசு
`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்!' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சிங்கப்பூர் விமான நிலைய ஊழியர், "சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். உடலின் வெப்பநிலை சராசரியைவிட அதிகமாக இருந்தாலோ காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Singapore Airport
Singapore Airport
Pixabay

மேலும், நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்காக பொது இடங்களில் மூன்று நபர்களுக்கு மேல் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கு காலை, மாலை என இரண்டு வேளை அவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. உடல் வெப்பம் 38 டிகிரி செல்சியஸைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஊழியர்களின் மத்தியில் தும்மல், இருமல் தொந்தரவுகள் காணப்படுவோரும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உடல்நிலை, சிகிச்சை பெறும் விவரம், குணமடைந்து வீடு திரும்பியோரின் விவரங்கள் ஆகிய அனைத்தும் சிங்கப்பூர் அரசின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கண்காணிப்பு தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள ஆலோசனைகள்:

Corona Virus
Corona Virus
Pixabay

1. ஜனவரி 31-ம் தேதி முதல் சீனாவிலிருந்து திரும்பும் சிங்கப்பூர் வாசிகள் அல்லது சிங்கப்பூரில் நீண்ட நாள்கள் தங்கப் போகிறவர்களுக்கு அலுவலகங்களில் 14 நாள்கள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

2. அவ்வாறு விடுப்பு எடுத்து வீடுகளில் இருப்போருக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அது பிறருக்குப் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. சீனாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், சீன புத்தாண்டு விடுமுறைக்கு இன்னும் அதிகமானோர் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்பதாலும் `வீட்டில் தங்கும்' அறிவிக்கை (Stay - home notice) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே வழங்கப்பட்ட 14 நாள்கள் விடுப்பைக் காட்டிலும் சற்று கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

4. அதன்படி, சீனாவிலிருந்து திரும்பும் சிங்கப்பூர்வாசிகள், நீண்ட நாள்கள் சிங்கப்பூரில் தங்கப் போகிறவர்கள் அனைவரும் வேறு எங்கும் செல்லாமல் 14 நாள்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.

5. வீட்டுக்குத் தேவையான பொருள்கள், உணவு போன்றவற்றை வாங்குவதற்குக்கூட வீட்டைவிட்டு வெளியில் செல்லக் கூடாது. மேலும், அவர்களது உடல்நிலையைக் கூர்ந்து கவனித்து வர வேண்டும். அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மேலும், அறிகுறிகள் பிறருக்குப் பரவாத வகையில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

6. 14 நாள்கள் வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு உதவி தேவைப்பட்டால் அதை அரசே வழங்கும்.

Sneezing
Sneezing
Pixabay
கொரோனா வைரஸ்... சீனாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்... இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுமா?

7. 14 நாள்கள் வீட்டிலிருக்க வேண்டியவர்கள் அதை மீறினால் தொற்றுநோய்கள் சட்டத்தின் பேரில் அபராதம் விதிக்கப்படும்.

8. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பாதிக்காத வகையில் 14 நாள்கள் வீட்டில் தங்கியிருக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வீட்டிலிருக்கும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகக் கூடாது.

9. 14 நாள்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நபர்களுக்கு அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். வீட்டு உரிமையாளர்களுக்கென்று வகுக்கப்பட்டுள்ள பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு