Published:Updated:

கொரோனா வைரஸ்: வடகொரியா நிலவரம்தான் என்ன?

வடகொரியா...
வடகொரியா...

எல்லா நாடுகளும் Covid -19 கொரோனா வைரஸ்சுக்கு எதிராகப் போர்க் கால நடவடிக்கைகளில் இறங்க, 'எங்கள் அதிபர் கிம் ஜங் உன் -இன் உத்தரவின்றி வட கொரியாவில் ஒரு அணுவும் அசையாது, கொரோனா வைரஸ் எல்லாம் எம்மாத்திரம் என்கிறது அந்நாட்டு அரசு'.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது, தொழில்நுட்பம் உலகின் எல்லா மூலைகளையும் மிக நெருக்கமாகப் பிணைத்துவிட்டது, இனி இரகசியங்களுக்கு வழி இல்லை, பிரைவசி சாத்தியமில்லை, எதையும் மறைப்பதற்கில்லை, எங்கு காணினும் cctv கண்கள், செல்போன் முதல் சாட்டிலைட் வரை பதிக்கப்படும் டிஜிட்டல் கால்தடங்கள், டேட்டா பரிமாற்றம் எனத் தொழில்நுட்பப் புரட்சியில் பல கால் பாய்ச்சலில் வேகமெடுத்திருக்கிறது உலகம்.

Internet World
Internet World

இந்தியாவில் நடப்பது அமெரிக்காவிற்குத் தெரியும், அமெரிக்காவைச் சீனா உளவுபார்க்கும், சீனாவின் செயல்பாடுகளில் ரஷ்யாவின் பங்கு இருக்கும், ரஷ்யாவின் அரசியல் சூழலை ஐரோப்பா கண்காணிக்கும், இப்படி உலக நாடுகள் எல்லாம் ஒன்றையொன்று எதோ ஒரு வகையில் சார்ந்ததாகவே இருக்க, இதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கும் நாடு வட கொரியா.

உலகின் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக்கொண்டு, தனித்துச் செயல்படும் நாடு. அங்கு என்ன நடந்தாலும் உலகிற்குத் தெரியாது, அந்த நாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது, ஐ.நா சபை வடகொரியாவைக் கட்டுப்படுத்த முடியாது, மனித உரிமை மீறல்களைத் தட்டி கேட்க முடியாது, அமெரிக்கா விதிக்கும் எவ்விதப் பொருளாதாரத் தடையையும் அந்நாட்டு அரசு கண்டுகொள்ளாது, தன் அணு ஆயுத பலத்தைக் குறைத்துக் கொள்ளாது. அந்நாட்டு மக்களால் அரசைக் கேள்விகேட்க முடியாது. அந்நாட்டு எல்லைக்குள் யாரும் நுழைய முடியாது, ஏன்? உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் கூட வட கொரிய எல்லைக்குள் வர அனுமதியில்லை போலும்.

எல்லா நாடுகளும் Covid -19 கொரோனா வைரஸ்சுக்கு எதிராகப் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க, 'எங்கள் அதிபர் கிம் ஜங் உன் -இன் உத்தரவின்றி வட கொரியாவில் ஒரு அணுவும் அசையாது, கொரோனா வைரஸ் எல்லாம் எம்மாத்திரம்!' என்கிறது அந்நாட்டு அரசு.

north korea map
north korea map
www.polgeonow.com

வடகொரியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் சீனாவும், தென் கொரியாவும் Covid-19 கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் இரு நாடுகள். ஆனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வட கொரியா தங்கள் நாட்டில் ஒருவர் கூட Covid -19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறுகிறது. ஆனால், உலகம் இதை நம்பத் தயாராக இல்லை. பல்வேறு குறியீடுகளைக்கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்று உலக நாடுகள் கணிக்கின்றன. கிடைக்கும் தகவல்கள் யாவும் வடகொரிய மக்களின் நிலை குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன.

இதுவரை உலகம் முழுவதும் 176 நாடுகளைச் சார்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்கள் Covid -19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 9000 பேர் மரணமடைந்துள்ளார்கள். இதில் வட கொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை என்கிறார்கள் வட கொரியாவை நன்கு அறிந்த அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள்.

Corona against world
Corona against world

வடகொரியாவில் Covid -19 கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டது. ஜனவரி மாத கடைசியில், சீனாவிலிருந்து வந்திருந்த அந்தக் குறிப்பிட்ட அதிகாரிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, வெளியே நடமாட அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதில் தடையை மீறி பொதுக் குளியல் இடத்திற்குச் சென்ற ஒருவரை உடனடியாகக் கைது செய்த வட கொரிய அதிகாரிகள் அவரை அங்கேயே சுட்டுக் கொன்றதாகச் செய்தி வெளியிட்டது தென் கொரியப் பத்திரிகை ஒன்று. வடகொரியா உண்மையில் அவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த நாடுதான். அதிகாரிகள், பொதுமக்கள் எனக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு மரணமே பரிசு. எனவே, அந்தப் பத்திரிகைச் செய்தி உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமே.

Vikatan

இந்நிலையில், பிப்ரவரி மாதமே கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க உடனடியாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொற்று பரவியதாகச் சந்தேகம் இருந்தால் ஒருவர் 15 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் வட கொரியாவில் 30 நாள்கள் மக்கள் வெளிவரத் தடை விதிக்கப்பட்டது. எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது, சீனாவுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெளிமாநிலத்தவர்கள் அந்நாட்டிற்குள் வரத் தடை விதிக்கப்பட்டது. வடகொரியாவில் கொரோனா பரவாமல் இருந்ததற்கு இந்த அதிதீவிரக் கட்டுப்பாடுகள் காரணம் என்கிறது அந்நாட்டு அரசு. ஆனால், இது பொய், வடகொரியாவில் சுகாதாரம், பொருளாதாரம், ராணுவ பலம் எனப் பலவிதங்களில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கிறது எனச் சில மாற்றங்களை வைத்து உலக நாடுகள் உறுதியாகக் கூறுகின்றன. குறிப்பாக, அத்தனை தடைகளையும் மீறி, வடகொரியா எல்லைக்குள், அதன் கருப்புச் சந்தைக்குள் அத்துமீறி நுழையும் சீனப் பயணிகளின் வழி இந்தத் தொற்று வட கொரியாவில் பரவியிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இது தவிர்த்து எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள், வெளிநாட்டிற்குப் பயணப்பட்டவர்கள் எனப் பலரின் மூலமாக இந்தத் தொற்று பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

வட கொரியாவில், முப்பது நாள்களுக்கு மேலாக எந்த வித ராணுவச் செயல்பாடுகளும் பயிற்சிகளும் வீரர்கள் நடமாட்டமும் இல்லை. வட கொரிய வான்வெளியில் 24 நாள்களுக்கு விமானங்கள் பார்க்கவில்லை என்பதை அதற்குச் சாட்சியெனக் கூறுகிறார் கொரியாவில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர் அப்ரம்ஸ். கொரியா ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் வெளியேறிய ஜுங் ஹானேயில் எனும் வீரர் VOA பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வட கொரிய ராணுவத்தினரின் வாழ்நிலையை விளக்குகிறார்.

வடகொரியா
வடகொரியா

ஏறத்தாழ ஒரு மில்லியன் ராணுவ வீரர்களைக்கொண்ட வட கொரிய ராணுவப் படை, உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்று, மிக நெருக்கமாக, சுகாதாரமற்ற bunker படுகைகளில் தான் வட கொரிய ராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரே இடத்தில் கூட்டமாகப் பலர் அடைந்து கிடப்பதுதான் அந்நாட்டின் ராணுவ வாழ்நிலை. அதுமட்டுமன்றி, வட கொரிய வீரர்கள் அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள். சமயங்களில் ப்ரோட்டீன் அதிகமுள்ள ஒரு டின் சோயா கூழ் மட்டுமே அவர்களுக்கு ஒருநாள் உணவாகக் கொடுக்கப்படுவது உண்டு. ஆகையால் அந்நாட்டு ராணுவத்தினர் மிகவும் நோய் எதிரப்பு சக்தி குறைந்தவர்களாகவே இருப்பார்கள். இத்தகைய சூழலில் வட கொரிய ராணுவத்தினர் இடையே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது வெகுவாகப் பரவி, பெரும் சிக்கலை உருவாகியிருக்கும். சீன எல்லையில் பணியாற்றும் வீரர்கள் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று சொல்வதே நம்பத் தகுந்ததாக இல்லை. வட கொரியாவின் ராணுவம் பலவீனமடைந்து தெரிந்தால், அது அந்நாட்டிற்குப் பின்னடைவைத் தரும் என்பதால் அதிபர் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மறைப்பதாகவே தெரிகிறது.

ராணுவத்தினர் நிலையே இவ்வாறு எனில், பொதுமக்களின் நிலை அங்கு இன்னும் மோசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது, கொடும் பஞ்சத்திலும் பசியிலும்தான் ஒரு சராசரி வட கொரியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கை கழியும். அதுவும் கொரோனா தொற்று பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் அம்மக்கள் நிச்சயம் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், உணவிற்கும், தண்ணீருக்கும் தவிக்கும் நிலைதான் அங்கு இருக்கும். அந்தக் குடிமகனின் வாழ்க்கையைப் பற்றி அரசும் அக்கறை கொள்ளாது, ஒருவன் அல்ல ஓராயிரம் பேர் மரணித்தால் கண்டுகொள்ளாது என்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் விஷயம். உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் மறுக்கப்படுவதைக் கூட நாம் அறிந்துகொள்ளவோ, கேள்வி எழுப்பவோ முடியாது.

இந்நிலையில், ஏற்கெனவே அமெரிக்கா, ஐநா சபை ஆகியவை வட கொரியா அணு ஆயுதக் கொள்கைகளைத் தளர்த்தாமல் இருப்பதாலும், அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. கொரோனா தொற்றால் அந்நாடு சீனாவுடன் கொண்டுள்ள மொத்த வர்த்தக உறவையும் நிறுத்திவைத்துள்ளது. இதனால் வட கொரியா பெரும் பொருளாதாரத் தடையைச் சந்திக்கும் என்பதே உண்மை. தற்போது சீனாவும் ரஷ்யாவும் இந்தப் பொருளாதாரத் தடையைத் தளர்த்தச் சொல்லி வட கொரியாவிற்கு ஆதரவாகச் சர்வதேச அளவில் குரல் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மருந்து, கொரோனா சோதனை செய்வதற்கான உபகரணங்கள், மாஸ்க், உணவு போன்றவற்றைத் தருவதற்கு முன்வந்துள்ளன. வட கொரிய இதை ஏற்றுக்கொள்வதில் கூட, பிற நாடுகளின் உதவி எனக் குறிப்பிடாமல், அதிபர் கிம் ஜோங் உன்னுக்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் மரியாதை நிமித்தமான காணிக்கை என்றே பிரகடனப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!

ஆனால், உண்மையில் வட கொரிய முழுவதுமாக Covid -19 கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுத்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் அங்கு அந்நோய் பரவியிருக்கும் பட்சத்தில், அதைக் கண்டறிய சோதனை வசதிகள் இல்லை. நோயுற்றவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் இல்லை. வட கொரியா செய்யக் கூடியதெல்லாம் அதிகபட்சம் இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து, தான் பலவீனமடைந்ததை உலகிற்குக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதைத் தான். பணம், பதவி, அதிகாரம், சுயநலம் என்று அலைந்துதிரியும் வட கொரியா போன்ற சில உலக நாடுகளின் அரசியலுக்கு முன் கொரோனாவே மேல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு