Published:Updated:

`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ் ( AP )

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 810 ஆக அதிகரித்திருக்கிறது.

2019-nCoV என்று அறியப்படும் கொரோனா வைரஸின் இந்தப் புதிய வகை வைரஸ், வுகான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்குக் காரணம் எனக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனாவில் தாக்குதல் அதிகமாகப் பரவியிருந்த 12-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா கண்டறியப்பட்ட முதல் 10 நாள்களில் சீன அரசு அலட்சியமாகச் செயல்பட்டதாகப் புகார் எழுந்தது. ஆனால், இந்தப் புகாரை சீனா மறுத்திருக்கிறது.

இந்தநிலையில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் 37,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் 2,649 பேர் குணமடைந்துவிட்டதாகவும் சீனா கூறியிருக்கிறது. வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்த மருத்துவரும் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அரசு மீது சீன மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்

வைரஸ் தாக்குதலால், சீனாவில் இருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியாயிருக்கிறார். 61 வயதான அவர், அமெரிக்கக் குடிமகன் என்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை உறுதிப் படுத்தியிருக்கிறது. அதேபோல், ஜப்பானைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் வுகான் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே கொரோனாவால் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. உயிரிழந்த மற்றவர்கள் சீனாவிலேயே உயிரிழந்தவர்கள். குறிப்பாக, வைரஸ் தாக்கம் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபே மாகாணத்தின் வுகான் நகரிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது.

`தொட்டாலே பரவும் கொரோனா; பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் 10 நாள்கள்!' -  அலட்சியம் காட்டியதா சீனா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 810-ஐத் தொட்டிருக்கும் நிலையில் 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விஞ்சியிருக்கிறது. சார்ஸ் வைரஸ் பாதிப்பால் அப்போது உலக அளவில் 774 பேர் மரணமடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு