Published:Updated:

சீனாவில் அதிகரிக்கும் கோவிட், நிரம்பும் மருத்துவமனைகள்; இந்தியா என்ன ஆகும்? - மருத்துவர் விளக்கம்

கோவிட் தொற்று

இந்தக் குறைவான காலத்தில் 60% மக்களுக்கு தொற்று பரவினால்கூட, மரணங்கள் லட்சங்களில் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். தற்போது அங்கு வேகமாகப் பரவி வரும் ஓமைக்ரானின் பி.எஃப்.7 உருமாற்றம், கூடிய விரைவில் உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பு உள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கோவிட், நிரம்பும் மருத்துவமனைகள்; இந்தியா என்ன ஆகும்? - மருத்துவர் விளக்கம்

இந்தக் குறைவான காலத்தில் 60% மக்களுக்கு தொற்று பரவினால்கூட, மரணங்கள் லட்சங்களில் இருக்கும் வாய்ப்பு ஏற்படும். தற்போது அங்கு வேகமாகப் பரவி வரும் ஓமைக்ரானின் பி.எஃப்.7 உருமாற்றம், கூடிய விரைவில் உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பு உள்ளது.

Published:Updated:
கோவிட் தொற்று

உலகை அச்சுறுத்தி மிரட்டி, ஆட்டம் காணச் செய்த கோவிட் தொற்று, அது தோன்றிய நாடாகக் கருதப்படும் சீனாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு எரிக் ஃபீகல் டிங் எனும் அமெரிக்க கொள்ளைநோயியல் நிபுணர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகளில் பலரும் மூச்சுத் திணறலுடன் இருப்பதையும், பிணங்கள் குவியலாக இருப்பதையும் காணொளிகளாக பகிர்ந்திருந்தார். அப்போதிலிருந்து, மீண்டும் இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. அந்த அச்சம் அவசியமா, அவசியமற்றதா? இந்தக் கட்டுரையில் காண்போம்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

சீனாவைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ``ஜீரோ கோவிட் பாலிசி" எனும் கொள்கை முடிவுடன் செயல்பட்டு வந்தது. இதன்படி லட்சக்கணக்கில் தினமும் கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வது, ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது தெரிந்தாலே, அவருக்கு சாதாரண தொற்றாக இருந்தாலும் சரி, அறிகுறிகளற்ற தொற்றாக இருந்தாலும் சரி... அவரோடு சேர்த்து அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்தி வந்தது. கூடவே, ஒரு பகுதியில் கொரோனா பரவுவது தெரிந்தால் உடனே அந்தப் பகுதியையோ, நகரையோ லாக்டௌனுக்கு உட்படுத்துவது என்று மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து லாக்டௌன்களைப் புகுத்துவது, தனிமைப்படுத்துவது என்று தொடர்ந்து செய்து வந்தது.

இப்போது சீனாவுக்கு உறைக்கத் தொடங்கியிருப்பது யாதெனில், இனியும் இந்த யுக்தி பலனளிக்காது என்றும், இதைத் தொடர்ந்தால் கொரோனாவால் ஏற்படும் பிரச்னையைவிட பொருளாதார சீர்கேட்டால் ஏற்படும் பிரச்னைகள் அதிகமாகும் என்ற நிலையையும் உணர்ந்தது. கூடவே பல பகுதிகளிலும் மக்கள் லாக்டௌன்களாலும், மீண்டும் மீண்டும் கட்டாயப் படுத்தப்படும் பரிசோதனைகளாலும் சுதந்திரத்தை இழந்தபடியால் போராட்டத்தில் இறங்கினர்.

இதன் விளைவாக சீன அரசாங்கம் தனது கிடுக்குப்பிடியை ஒரேயடியாகத் தளர்த்தி மக்களைத் திறந்து விட்டது. இப்போது அங்கே மக்கள் அதிகம் குழுமும் சில இடங்கள் தவிர ஏனைய பெரும்பான்மை இடங்களில் கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை. இன்னும் சில நகரங்களில் சளி, இருமல், தும்மல் என்ற அறிகுறிகளுடன் இருந்தாலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உழைக்க வருமாறு மக்கள் பணிக்கப்படுகிறார்கள்.

Corona Pandemic
Corona Pandemic
Pixabay

இப்படியான அதிரடி கொள்கை மாற்றத்தால் ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமெடுத்து மக்களிடையே பரவி வருகிறது.

மருந்தகங்களில் சளி, இருமல், காய்ச்சல் மருந்துகள் ஸ்டாக் இல்லாத நிலையில் மக்கள் எலுமிச்சம் பழங்களை விட்டமின் சி கூட்டும் முயற்சியில் வாங்கிக் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சையின் விலை சில மடங்குகூட, தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி, தீவிர தொற்றடைந்து அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். வயது முதிர்ந்தோருக்கும் ஏனைய இணை நோய்களுடன் வாழ்பவர்களுக்கும் தீவிர தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களிடையே மரணம் அதிகமாக நிகழ வாய்ப்பு உள்ளது.

சீனாவில்தான் முதன்முதலாக கொரோனா ஆரம்பித்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்த அலைகள் அங்கே அவ்வளவாக ஏற்படவில்லை. அதேசமயம், இந்தியாவிலோ முதல் அலை 2020-ம் ஆண்டின் மத்தியிலும், இரண்டாம் அலை 2021-ம் ஆண்டின் மத்தியிலும், மூன்றாம் அலை 2022-ம் ஆண்டின் ஆரம்பத்திலும் நிகழ்ந்தது. இந்தியாவில் இந்த மூன்று அலைகளால் கிடைத்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியுடன் மூன்று தடுப்பூசி களால் கிடைத்த எதிர்ப்பு சக்தியும் சேர்ந்து, கூட்டு எதிர்ப்பு சக்தியுடன் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், சீனாவிலோ நேரடி தொற்றால் ஏற்படும் இயற்கையான எதிர்ப்பு சக்திக்கு வாய்ப்பே இல்லாமல் போக, தடுப்பூசி மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியும் ஆறு மாதங்களில் குன்றும் தன்மையுடன் இருப்பதால் அங்கு பெரும்பான்மை மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைபாட்டில் இருப்பது திண்ணம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எனவே, இதே நிலை சீனாவில் தொடருமானால் நாம் மூன்று ஆண்டுகளில் சந்தித்த மூன்று அலைகளை சீனாவில் மூன்று மாதங்களில் சந்திக்கும் நிலை வரலாம். ஓமைக்ரான் உருமாற்றம் மிக வேகமாகப் பரவினாலும் முந்தைய ஆல்பா, பீட்டா, டெல்ட்டா உருமாற்றங்களைவிடக் குறைவான வீரியம் கொண்டது என்பதால் தொற்றுக்குள்ளாவோரில் மரண விகிதங்கள் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆயினும், இந்தக் குறைவான காலத்தில் 60% மக்களுக்கு தொற்று பரவினால்கூட மரணங்கள் லட்சங்களில் இருக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தற்போது அங்கு வேகமாகப் பரவி வரும் ஓமைக்ரானின் பி.எஃப்.7 உருமாற்றம் கூடிய விரைவில் உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆயினும், இந்தியா போன்ற நாடுகளில் இயற்கையாக தொற்றின் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் தடுப்பூசிகள் மூலம் கிடைத்த எதிர்ப்பு சக்தி பெரும்பான்மை யினரிடம் இருப்பதால் கடந்த பத்து மாதங்களாகத் தொற்றுப் பரவல் ஏற்றம் காணாமல் அமைதியாக இருக்கிறது. இனியொரு பரவல் நிகழ்ந்தாலும் மரண விகிதங்கள் சீனா போல அச்சமூட்டும் அளவு இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

corona
corona
Pixabay

இந்நிலையில் மூன்றாவது டோஸ் முன்தடுப்பு ஊசியை முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் பெற்றுக் கொள்வது நல்லது. இது அவர்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால் மேற்கத்திய நாடுகளில் ஃப்ளூ வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். நாமும் கொரோனா வைரஸுக்கு எதிராக வருடம் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வதை வழக்கமாக மாற்றிக்கொள்வது உதவக்கூடும்.

இவற்றுடன், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறந்த முறையில் நாம் சமூகமாகக் கடைப்பிடித்து வந்த அறிவியல்பூர்வமான நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளான...

* கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிதல்.

* கைகளை அவ்வப்போது வழலை கொண்டு கழுவுதல்.

* இருமல், சளி, காய்ச்சல் வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல்.

* நுரையீரல் தொற்று ஏற்பட்டால் காலந்தாழ்த்தாமல் சிகிச்சை எடுத்தல்.

* பூஸ்டர் தடுப்பூசியை வருடந்தோறும் போட்டுக் கொள்ளுதல்.

போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் கொரோனா இப்போது போல் நமக்கு தொந்தரவு தராமல் இருக்கும்.