
டொனால்டு ட்ரம்ப் கொரோனாவிலிருந்து மீள்வதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
வால்டர் ரீட் மிலிட்டரி மருத்துவமனையிலிருந்து வெளியேறி, இப்போது வெள்ளை மாளிகையில் தங்கி கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ``கொரோனா தொற்று எனக்கு ஏற்பட்டது கடவுளின் ஆசீர்வாதம். கொரோனா குறித்தும், அதன் சிகிச்சைகள் குறித்தும் தெரிந்துகொள்வதற்காகக் கடவுள் எனக்கு அளித்த ஓர் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இதனால்`Regeneron Pharmaceuticals' நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அது பற்றித் தெரிந்துகொள்ள உதவியது" என்று தெரிவித்திருக்கிறார்.
சிகிச்சை மேற்கொண்ட வால்டர் ரீட் மிலிட்டரி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இரு தினங்களில், ட்ரம்ப் தேர்தல் பணிகளில் தீவிரமாகச் செயல்படப்போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், டொனால்டு ட்ரம்ப் இன்னும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. டொனால்டு ட்ரம்ப் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், இப்போது ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் மேலான அமெரிக்கர்கள் இறந்துள்ள நிலையில், இப்போதுதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கடவுளின் ஆசீர்வாதம் எனச் சொல்லியிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், தன் சமீபத்திய வீடியோவில், ``கொரோனாவிலிருந்நு மீண்டு வர எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மக்களுக்கும் வழங்கும்படி செய்வேன். இந்த சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்" என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
ட்ரம்ப்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சீன் கோன்லி, ``ட்ரம்ப்புக்கு நான்கு நாள்களாக காய்ச்சல் இல்லை. கடந்த 24 மணி நேரமாகக் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை" என்று கூறியுள்ளார்
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் மாதம் வருகிற அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். எனவே, தேர்தலுக்கான பணிகளை அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறார் ட்ரம்ப். தற்போது உள்ள நிலையில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் உள்ளன எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஏற்கெனவே ஜோ பைடன் உடன் விவாதத்தில் கலந்துகொண்ட ட்ரம்ப், தற்போது மற்றொரு விவாதத்துக்கும் தீவிரமாகத் தயாராகி வருகிறார். இது அக்டோபர் 15, மியாமி நகரில் நடக்கவிருக்கிறது. ஆனால், ஜோ பைடன், ``டொனால்டு ட்ரம்ப் கொரோனா நோய்த்தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே விவாதத்தில் பங்கேற்பேன். இல்லையெனில், விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.