Published:Updated:

`அமெரிக்கக் கொரோனா யுத்தத்தின் போர்வீரர்கள்!’ -ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியர்

மருத்துவர்கள்
மருத்துவர்கள் ( மாதிரிப் புகைப்படம் )

கொரோனா வெடிப்பைத் தடுக்க அரசின் லாக் டெளன் போன்ற கட்டுப்பாடுகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சேவை மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன்தான் இந்தப் போரில் நாம் வெல்ல முடியும்.

சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. உலக மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி செய்திருக்கிறது. உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சிக்கலெல்லாம் ஒரு சில நாடுகளுக்குத்தான் என்று நினைத்தால், அது தவறு. உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக நண்பர்கள் எனப் பலரும் போராடுகிறார்கள். இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக அதிகம். காரணம், அவர்கள்தான் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தாலும், உலகம் முழுவதும் கொரோனா காரணமாக மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையில், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவக் குழுவில் அதிக அளவில் இந்திய வம்சாவளி மருத்துவர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேசிய `இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள்’ சங்கத்தின் தலைவர் மருத்துவர் சுரேஷ் ரெட்டி, ``அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடும் ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர்கள் போர் வீரர்களைப் போன்று வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த யுத்தம் நீண்ட காலம் நடைபெறக்கூடியது. இதற்கு மருந்து கண்டுபிடிக்காமல் இதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் விஷயமாக இது இருக்கப்போவதில்லை. மருந்து ஒன்றுதான் இதன் நிரந்தரத் தீர்வு” என்றார்.

மேலும், ``லாக் டெளன் உத்தரவுகளைத் தளர்த்துவது தொடர்பாகப் பேசுகிறார்கள். அது மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு விஷயம், ஒரு கதவைத் திறந்துவிட்டுவிட்டு உடனே மூடினால் முடிந்துவிடும் என்பது போல் கிடையாது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் லாக் டெளன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பது இரண்டாவது அலைக்குக் காரணமாகி விடும். அது முதலில் இருந்த நிலையை விட மோசமானதாக இருக்கும்” என்றார்.

கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
மாதிரிப் படம்

கொரோனாவுக்கு எதிராக மூன்று விதமான தாக்குதல் தேவை என்கிறார் மருத்துவர் சுரேஷ் ரெட்டி. கொரோனா வெடிப்பைத் தடுக்க அரசின் லாக் டெளன் போன்ற கட்டுப்பாடுகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சேவை, மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன்தான் இந்தப் போரில் நாம் வெல்ல முடியும் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு