Published:Updated:

`மனிதர்களிடம் சோதிக்கப்படாதது; 14 மாத ஃபாலோ அப்!'- #Corona தடுப்பூசி சோதனையில் கலந்துகொண்ட முதல்நபர்

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ( Ted S. Warren (AP) )

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் கலந்துகொண்ட முதல் நபரான சியாட்டில் பெண், தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, இரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேபோல், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,000-த்தைக் கடந்திருக்கிறது. இதையடுத்து, அமெரிக்காவின் 35 மாகாணங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகளை பயமுறுத்தாமல் கொரோனா விழிப்புணர்வு கற்றுக்கொடுங்கள்! #FightCovid-19
ஜெனிஃபர் ஹல்லர்
ஜெனிஃபர் ஹல்லர்
Ted S. Warren (AP)

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஆய்வகத்தில் இதற்கான பரிசோதனை தொடங்கப்பட்டிருக்கிறது. தடுப்பு மருந்து பரிசோதனையில் தன்னார்வலர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், அதில், கலந்துகொள்வதற்காக 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருக்கிறது. அப்படி தடுப்பு மருந்து பரிசோதனையில் கலந்துகொண்ட முதல் நபரான ஜெனீஃபர் ஹல்லர் (Jennifer Haller) என்ற 43 வயது பெண் அமெரிக்காவின் எம்.எஸ்.என்.பி.சி (MSNBC) ஊடகத்திடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஜெனிஃபர் ஹல்லர்
ஜெனிஃபர் ஹல்லர்
Ted S. Warren (AP)

ஜெனீஃபர் கூறுகையில், ``கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் தன்னார்வலர்கள் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை இரண்டு நாள்களுக்கு முன்பு பார்த்தேன். பின்னர், அவர்களுக்கு போன் செய்து பேசினேன். முதற்கட்டமாக போனிலேயே என்னிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் தேறியதும், நேரில் வரச் சொல்லி உடலில் சில சோதனைகளை மேற்கொண்டனர். அதன்பின்னர், மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கும்படி கூறினர்.

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

அதன்பின்னர் இன்று காலை 8 மணிக்கு முதல் ஊசி போடப்பட்டது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தடுக்க நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. கையறு நிலையில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் என்னால் முடிந்த அளவு சிறு உதவி செய்ய முடிந்தது என்பதே மனநிறைவாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன். எனது இந்த முயற்சிக்கு குடும்பமும், நண்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்'' என்றவரிடம், `உங்கள் அனுபவத்தின்படி இந்த பரிசோதனையின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

அதற்குப் பதிலளித்த ஜெனிஃபர், ``தினசரி உடல் வெப்பநிலையைப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து மருத்துவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தினசரி மற்றும் ஒவ்வொரு வார இறுதியிலும் உடல்நிலை பரிசோதிக்கப்படும். 4 வாரங்களுக்குப் பின்னர் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இந்தப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக 14 மாதங்களுக்குத் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்றார்.

`இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்ற கேள்விக்கு, ``இதனால், என்ன பாதிப்பு ஏற்படுமோ என எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அச்சமடைந்தனர். ஆனால், இந்த பரிசோதனை என்பது மெசெஞ்சர் ஆர்.என்.ஏவை மட்டுமே மையப்படுத்தியது. இதில், எந்த இடத்திலும் கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படப்போவதில்லை.

கொரோனா
கொரோனா

அதேபோல், இந்தப் பரிசோதனையின்போது கொரோனாவால் பாதிக்கப்படப்போவதில்லை. வழக்கமாக ஒவ்வொரு தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள்தான் இதனாலும் ஏற்படும். மனிதர்களிடம் இதுவரை இந்தத் தடுப்பு சோதிக்கப்படாதது என்பதால், எதையும் நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், எல்லாவற்றுக்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு