Published:Updated:

`குட்பை கொரோனா!' - கொரோனாவை வென்ற நியூஸிலாந்தின் கதை!

பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா ( AP )

உலக நாடுகள் கொரோனா வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த திணறிக்கொண்டிருக்கும் வேளையில், நியூஸிலாந்தில் ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை என ஒலிக்கும் குரல், உலக நாடுகளை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

நியூஸிலாந்தில் கொரோனா பரவல்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் தனித்த தீவு நியூஸிலாந்து. உலகளாவிய அளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 60 நாள்கள் கடந்த நிலையில், பிப்ரவரி 28-ம் தேதி ஈரானிலிருந்து நியூஸிலாந்து திரும்பிய 60 வயது முதியவர் ஒருவருக்கு முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், உலக அளவில் கொரோனா பரவிய உலக நாடுகளின் பட்டியலில் 48-வது இடத்தைப் பிடித்தது நியூஸிலாந்து. தொடர்ந்து, ஈரான் நாட்டின் மீதும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

நியூசிலாந்து  கட்டுப்பாடு
நியூசிலாந்து கட்டுப்பாடு

நியூஸிலாந்தைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளிலிருந்து தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த நிலையில், பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி, அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக இருந்தது. அன்று, புதிதாகப் பாதிக்கப்பட்ட, 11 பேர் சர்வதேச பயண வரலாற்றைக்கொண்டிருந்தனர். மார்ச் 9 முதல் 13-ம் தேதி வரை குயின்ஸ்டவுனில் நடைபெற்ற உலக ஹியர்ஃப்போர்ட் மாநாட்டில் கலந்துகொண்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே, மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மொத்தம் 102 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவருக்கு வைரஸ் தொற்று சமூகப் பரவலாகப் பரவியிருப்பதை அவர்களின் பயண வரலாறுகள் மூலம் அறிந்துகொண்டது, அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம். அன்று மதியம் சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல், மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் ஜெசிக்கா அறிவித்தார். அடுத்த நாளே மீண்டும் இருவருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்த நியூஸிலாந்து அரசாங்கம், தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்க ஆயத்தமானது.

மார்ச் 25-ம் தேதி, மேலும் 50 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் நான்காவது நிலைக்குச் சென்றுள்ளதாக அறிவித்தது அந்த நாட்டு அரசாங்கம். அதோடு, அந்த நாட்டின் குடிமைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீனி ஹெனாரே, தேசிய அவசர நிலையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். முதலில் 7 நாள்களுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய அவசர நிலை, பின்னாளில் தேவைக்கேற்ப அதிகரிக்கக்கூடும் எனவும் தனது நாட்டு மக்களை நியூஸிலாந்து அரசாங்கம் எச்சரித்திருந்தது. மார்ச் 28 அன்று, புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட, மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 451-ஆக உயர்ந்தது. அன்று தொற்று உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானோரில், ஏர் நியூஸிலாந்து விமான ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை அந்த நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

Safe from Corona spread
Safe from Corona spread

மார்ச் 29-ம் தேதியன்று, 514 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் மரணம், அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், தொற்றுக்கு உள்ளானவர்களில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மார்ச் மாத இறுதியில், சமூகப் பரவல் மூலமாக தொற்றுக்கு உள்ளானவர்களிண் எண்ணிக்கை 10 என்ற நிலையிலேயே இருந்தது. ஏப்ரல் 5-ம் தேதி, புதிதாக தொற்றுக்கு உள்ளான 89 நோயாளிகளுடன் சேர்த்து, நாட்டில் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 1,039-ஆக உயர்ந்தது.

ஏப்ரல் 20 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கொரோனா வைரஸ் பரவலின் நிலை நான்கிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்வதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு மூலம், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மே 11-ம் தேதிக்குப் பிறகு, நாட்டின் அவசர கால நிலையைத் தளர்த்துவதோடு, கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு செல்ல திட்டமிடப்படும் எனப் பிரதமர் ஜெசிந்தா அறிவித்தார்.

தொடர்ச்சியாக, தொற்றாளர்களைப் பதிவுசெய்துவந்த நியூஸிலாந்து, மே 4-ம் தேதி அன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருப்பினும், அடுத்த சில தினங்களில் மீண்டும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மீண்டும், மே 25-ம் தேதியிலிருந்து யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அதுவரை 1,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 1,481 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் நியூஸிலாந்தின் சுகாதாரத் துறை அறிவித்தது. ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார். அவர் அனுமதிக்கப்பட்டு 17 நாள்களைக் கடந்த நிலையில், நேற்று அவரும் தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனிடையே, 'கொரோனா வைரஸை தந்திரமான வைரஸ்' எனக் குறிப்பிட்ட நியூஸிலாந்தின் சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர், மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் உள்ளதால், கண்டிப்புடன் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸை முழுவதுமாக விரட்டியடித்துள்ள நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்திருக்கும் வேளையில், இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி பலரின் மனத்தில் வந்து செல்லும். அதற்கான பதில் இதோ...

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

பிரதமரின் நிர்வாகத் திறன்

ஒரு நாட்டில் நிலவும் அவசர கால நிலையில், அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்து அவர்களின் தரம் மதிப்பிடப்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவிய நாள் முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை நிர்வகித்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது தலைமைத்துவ திறன்கள் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். எளிமையான வகையில் கொரோனா வைரஸ் குறித்த விஞ்ஞானப் புரிதலைப் பெற்றுக் கொண்ட ஜெசிந்தா, கொரோனா வைரஸை அழிக்க தைரியமான மனநிலையுடன் செயல்பட்டுள்ளார். பல சிக்கலான சூழலில், தனது வலுவான கட்டளைகள் மூலம் திறம்பட கையாண்டு வெற்றி கண்டுள்ளார். ஆனால், இந்த சுகாதார இக்கட்டை தான் மட்டும் பொறுப்பேற்று வழி நடத்தாது, நாட்டின் சுகாதார வல்லுநர்கள், பொது சேவகர்கள், பரந்த அரசியலமைப்புப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் 5 மில்லியன் மக்கள் என அனைவரையும் தன்னுடன் இணைத்து செயல்பட்டுள்ளார் ஜெசிந்தா. கோவிட்-19 கொரோனா வைரஸின் சமூகப் பரவலை உடைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு இருப்பதாக பெரும்பாலான நேரங்களில் பிரதமர் ஜெசிந்தா நாட்டு மக்களிடையே வலியுறுத்தியது முக்கியத்துவம்பெற்றது.

உலக நாடுகள், கொரோனா வைரஸைக் கண்டு திணறிக் கொண்டிருக்கும் வேளையில், மே 18 முதல் நாட்டின் வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அதிரடி உத்தரவை வெளியிட்டார். இருப்பினும், அனைவரும் அலட்சியாமாக இருந்துவிடாமல் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொண்டார். கடுமையான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், அதை மீறுபவர்கள் அனைத்து இடங்களிலுமே இருக்கத்தான் செய்கிறார்கள். விதிமுறைகளை மீறுவோரை ஜெசிந்தா ‘முட்டாள்’ எனப் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார். பெரும்பாலானோர் தொற்று தமக்கு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளதாக சர்வதேச கருத்துக்கணிப்பு ஒன்றின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு

மார்ச் மாதத்தில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்திய நிலையில், நியூஸிலாந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கட்சி வித்தியாசமின்றி பெரும்பாலானோரின் பங்களிப்புடன் ஒற்றுமையாகச் செயல்பட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவரும் தேசிய கட்சித் தலைவருமான சைமன் பிரிட்ஜட்ஸ் தலைமையிலான சிறப்புத் தேர்வுக் குழு, பொதுமக்கள் அளிக்கும் ஆன்லைன் புகார்களை விசாரித்துவருகிறது. இந்த சிறப்புத் தேர்வுக் குழுவில், பெரும்பான்மையான எதிர்க் கட்சித் தலைவர்கள் தங்களை இணைத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமான போக்குகளைக் கண்டித்ததோடு, நெருக்கடியான சவால்களையும் இவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதார இழப்புகளை கணிசமாகக் குறைக்க திட்டமிட்ட பிரதமர் ஜெசிந்தா, 20 சதவிகித சம்பள பிடித்தத்தை அமைச்சர்கள் மற்றும் பொதுத்துறை தலைவர்களுக்கு, அடுத்த ஆறு மாதத்துக்கு விதித்தார். இதை முழு மனதுடன் வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் பிரிட்ஜட்ஸ், தனது கட்சிப் பிரதிநிதிகளை இன்முகத்துடன் ஏற்கப் பணித்தார்.

நியூசிலாந்து
நியூசிலாந்து
OnTheWorldMap.com

புவியியல் ரீதியான அமைப்பால் கொரோனா வைரஸ் பரவலை நியூஸிலாந்து எளிமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறினாலும், சில தனிப்பட்ட நடவடிக்கைகளை மிகுந்த சிரத்தையுடன் எடுத்ததே அந்த நாட்டின் வெற்றிக்குக் காரணமாகப் பார்க்க முடியும்.

நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்புக் குறைவுகளை உணர்ந்த அரசாங்கம், கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களை, அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த கேட்டுக்கொண்டது. சில வேளைகளில் அதற்கு வாய்ப்பில்லாமல் போக, சில ஹோட்டல்களை அரசு கையகப்படுத்தி, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அறிகுறி உடையவர்களிடம் சோதனை மற்றும் தொடர்பு தடமறிதலை சிறப்பாகக் கையாண்டதால், தொற்று பெருமளவில் பரவுவதை அரசு தடுத்தது.

தளர்வுகளுடன் இருந்துவந்த தேசிய அவசர நிலை, மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் கட்டத்துக்கு செல்ல அரசால் மூன்று நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இது, பல்வேறு தரப்பினரையும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லவும், சமையல் எரிவாயு உள்பட, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளவும் வழி வகுத்தது.

கொரோனா யுத்தத்தில் வெற்றி... உலகையே அசர வைத்த 7 பெண் ஆட்சியாளர்கள்!

ஊரடங்கு காலகட்டத்தில், அரசாங்கமும் தனியார் வணிக நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் இல்லாமல் வழங்க வழிவகை செய்யப்பட்டது. நில உரிமையாளர்கள் மற்றும் வாடகைப் பிரச்னைகளை முறையாகக் கையாண்டது, அரசின் மற்றொரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. வாடகைதாரர்களுக்கு 60 நாள்கள் அவகாசம் வழங்க அரசு வழிவகை செய்தது.

கடிதப் பெட்டிகளை வைத்து மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், மக்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் பிரதமர் உள்பட சுகாதார அதிகாரிகள் அனைவரும் மக்களை இடைவிடாது செய்தி ஊடகங்கள் வாயிலாகச் சந்தித்தனர். குறிப்பாக பிரதமர் ஜெசிந்தா, தினசரி மாலையில் ஃபேஸ்புக் நேரலை மூலம் மக்களை சென்றடைந்தது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்பட்ட கடுமையான அபராதங்கள், மக்கள் ஊரடங்கை மீறும் செயல்களில் ஈடுபடும் முன், எச்சரிக்கை விடுக்கும் படியாக அமைந்தது.

பிற நாடுகளைப் போல் நிலைமை தலைக்கு மீறி சென்றுவிட்டபின், எல்லைகளை மூடாமல் முன்கூட்டியே மூடியது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்கு பேருதவியாக இருந்தது.

கொரோனா இல்லாத தேசம்!
கொரோனா இல்லாத தேசம்!
ft.com

சில நேரங்களில், நம்பிக்கையுடன் அறிவியல் பூர்வமான திட்டமிடலும் எடுக்கப்படும் முடிவுகள் வெற்றியை பெற்றுத் தரும் என்பதற்கு, நியூஸிலாந்து கொரோனாவிலிருந்து மீண்ட சம்பவமே தக்க சான்றாகும். உலக நாடுகளை நியூஸிலாந்தின் சாதனைகளை கேட்டு கடந்துபோகாமல், தங்கள் நாடுகளிலும் இதுபோன்ற தகுந்த முடிவுகளை எடுப்பதன் மூலம் கொரோனா இல்லாத தேசமாக உருவெடுக்கலாம் என்பதையே ஜெசிந்தாவின் நிர்வாகத் திறன் காட்டுகிறது.

நேற்று முதல் கொரோனா இல்லாத தேசமாகியது, தீவுகளின் தேசம்!

சமூக இடைவெளி தேவையில்லை என்பதோடு, வழக்கமான வாழ்க்கைச் சுழற்சியை சுவைக்கத் தொடங்கியுள்ளனர் அந்நாட்டு மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு