Published:Updated:

தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையா? மாதம் ரூ.8,493 அபராதம்! - எங்கே தெரியுமா?

கொரோனா
News
கொரோனா ( Marco Ugarte )

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஒருசில நாடுகளில் மக்கள் இன்னும் தயக்கம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என உலகின் மூலை, முடுக்கெல்லாம் பரவிய கொரோனா வைரஸால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துப்போனது. வருடக்கணக்கில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துவந்த உலக நாடுகள், கடந்த சில மாதங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Franc Zhurda

இந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் புதிய வகை திரிபான ஒமிக்ரான் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர் 2021) தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கும் இந்த வைரஸை, உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவிலும், உ.பி வந்த வெளிநாட்டினர் சிலருக்கு ஒமிக்ரான் வைரஸ் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்குப் புதிய விதிகள் நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஒரு சில நாடுகளில் இன்னும் மக்கள் தயக்கம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிரீஸ் நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. அங்கே கொரோனாவால் நாளொன்றுக்குச் சராசரியாக 6,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நேற்று, 30 நவம்பர் செவ்வாயன்று கிரீஸில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் 60 வயதுக்கு மேலுள்ள அனைவரும் ஜனவரி 16-ம் தேதிக்குள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அப்படிச் செலுத்திக்கொள்ளத் தவறினால், மாதம் 114 யூரோ ( இந்திய மதிப்பில் 8,493 ரூபாய்) அபராதமாக அரசுக்குக் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். குளிர்காலம் வருவதாலும், 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லவேண்டியவர்களாக இருப்பதாலும், அவர்கள் உடல்நிலை குறித்து அரசு கவனம் கொள்வதாலேயே இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். புதிதாக ஒமிக்ரான் வைரஸ் ஒருபுறம் பரவுவதால், விதிகளை மேலும் கடுமையாக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

representative image
representative image
Lee Jin-man

கிரீஸில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், தோராயமாக ஐந்து லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், ``இத்தனை பேரையும் அபராதம் செலுத்தும் சூழலுக்குத் தள்ளுவது சரியல்ல” என்று குற்றம்சாட்டியிருக்கின்றன.

ஆனால் பிரதமர் மிட்சோடாகிஸ், ``மக்களின் நன்மைக்காகத்தான் இந்த அறிவிப்புகள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அரசு செய்யும். அப்படியும் செலுத்திக்கொள்ள முன்வராதவர்களுக்குத்தான் அபராதம். மேலும் இந்த அபராதமானது கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவமனைகளுக்கான செலவினங்களுக்கு ஒதுக்கப்படும்" என்று பதில் கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனாவுக்குத் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மருத்துவர்களும், ஆராய்ச்சி வல்லுநர்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயங்குவது புரியாத புதிர்தான்!

- மேகா கௌரிகிருஷ்ணா

(மாணவப் பத்திரிகையாளர்)