Election bannerElection banner
Published:Updated:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!

சீனா கொரோனா
சீனா கொரோனா ( AP )

ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிவரும் கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தியது சீனா?

அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புகளிலிருந்து சீனா வெகுவாக மீண்டுவருகிறது. சீனாவின் வுஹான் மாகாணத்தில்தான் கொரோனா 2019-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அப்போது, கொரோனா அபாயம் குறித்து சீன அரசுக்குத் தெரியவில்லை; அல்லது தெரிந்தும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.பின்னர் நோய் வெகுவாகப் பரவத் தொடங்கியதும் எந்த நடவடிக்கையையும் சீன அரசால் எடுக்க முடியவில்லை. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவத் தொடங்கியது. கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான், அதன் அபாயத்தை சீன அரசு உணர்ந்தது. கொரோனா பரவிய வுஹான் மற்றும் ஹூபேய் மாகாணங்களை மூடி சீல் வைத்தது அந்த நாட்டு அரசு. அங்கிருந்து மக்கள் வெளியேறவும், வெளியிலிருந்து மக்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அதற்குள் சீனாவின் பிற மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது.

Virus Outbreak china
Virus Outbreak china
AP / Wang Yuguo

கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்கு மின்னல் வேகத்தில் களமிறங்கியது ஷி ஜின்பிங் அரசு. மக்கள் அனைவரும் தங்களின் உடல் வெப்பநிலையைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் அவர்கள் மேற்கொண்ட பயணம் குறித்து விவரங்கள் பெறப்பட்டன. அவற்றை வைத்து, கொரேனா வைரஸ் யார் யார் மூலம் தொற்றியது என்பது வரைபடங்கள் மூலம் கண்டறியப்பட்டது. சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு மக்கள் வருவது தடுக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெறுபவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை சீன அரசே எடுத்துக்கொண்டது. திருமண நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. முகக்கண்காணிப்பு சாதனங்கள், செல்போன்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை சீன அரசு கொண்டுவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அவர்களின் சிகிக்சைக்கான கட்டணத்தை சீன அரசே ஏற்றது.

Virus Outbreak china
Virus Outbreak china
AP / Xiao Yijiu

இன்றைக்கு அமெரிக்கா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சீனா இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. சீன அரசு மேற்கொண்ட ஐந்து முக்கிய நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

மூடப்பட்ட நகரங்கள்!

வுஹான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. எனவே, அந்த நகரை விட்டு எவரும் வெளியே போகக் கூடாது என்று உத்தரவிட்டது சீன அரசு. மனிதரிலிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பதைக் கண்டறிந்த பிறகு, இந்தக் கடினமான முடிவை மூன்றே நாள்களில் சீன அரசு எடுத்தது. சீனாவின் வுஹான் நகரில் ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

சீனாவில் கொரோனா
சீனாவில் கொரோனா

ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாக வுஹான் நகரமே தனிமைச்சிறையாக மாற்றப்பட்டது. புத்தாண்டு விழாவை தங்கள் உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக சுமார் 30 லட்சம் பேர் வுஹானுக்கு வருவது வழக்கம். அதற்கு முன்பாகவே தனிமைச்சிறையாக வுஹான் மாற்றப்பட்டது. அப்படிச் செய்யவில்லையென்றால், உயிரிழப்பு மிக மோசமாக இருந்திருக்கும்.

அவசர மருத்துவமனைகள்!

கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிவழிந்தன. புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை சீன அரசு உணர்ந்தது. எனவே, புதிதாக மருத்துவமனைகளை உருவாக்க அரசு முடிவுசெய்து. புதிதாக ஒரு மருத்துவமனையைக் கட்ட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரை தேவைப்படும்.

சீனாவில் கொரோனா
சீனாவில் கொரோனா

ஆனால், வெறும் 10 நாள்களில் அவசர தற்காலிக மருத்துவமனைகளை சீனா உருவாக்கியது. வுஹானில் 1,000 படுக்கைகளும் 30 ஐ.சி.யூ வார்டுகளும் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. ராணுவத்தினரும் மருத்துவத் துறையினரும் சீனா முழுவதிலுமிருந்து இதற்காகப் பயன்படுத்தப்பட்டார்கள்.

14 நாள்கள் தனிமை!

ஜனவரி 23-ம் தேதி முதல் 93 கோடி மக்கள் தங்களைத் தாங்களே தனிப்படுத்திக்கொண்டனர். 14 நாள்கள் என்பது கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் காலம். எனவே, ஒவ்வொருவரும் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சீன அரசின் உத்தரவுகளில் முக்கியமானது. கொரோனோ வைரஸ் அதிகமாக பாதித்த ஹூபெய் மாகாணத்திலிருந்து வருபவர்களுடன் தொடர்புவைத்தவர்களாக இருந்தால், 14 நாள்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தனிமையில் இருக்க வேண்டும்.

சீனாவில் கொரோனா
சீனாவில் கொரோனா

நகரத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களாக இருந்தாலும், 14 நாங்கள் தனிமையில் இருக்க வேண்டும். நகரத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள் என்றாலும், 14 நாங்களுக்கு தனிமையில்தான் இருக்க வேண்டும்.

உடல் வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருப்பவர்கள், 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால், அவர்களும் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

அன்றாடக் கட்டுப்பாடுகள்!

எந்தெந்த இடங்களுக்குப் பயணம் செய்தீர்கள், எந்தப் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தினீர்கள், யாரைச் சந்தித்தீர்கள், யாருடன் பேசினீர்கள் என்ற விவரங்களைப் படிவங்களில் பூர்த்திசெய்து அளிக்க வேண்டும். திரையரங்குகள், கலைக்கூடங்கள், பூங்காக்கள், உணவகங்கள், சந்தைகள் போன்றவை சில வாரங்களுக்கு மூடப்பட்டன. ஒருசில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மூடப்பட்ட பொது இடங்களுக்குள் யாரும் போக முடியாது. உணவகம் போன்ற எந்த இடமாக இருந்தாலும் அதன் நுழைவுவாயிலில் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்பட்டார்கள். அத்தியாவசியப்பொருள்கள் வாங்குவதற்கு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படியாக, அன்றாட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

வொர்க் ஃப்ரம் ஹோம்!

கொரோனோ வைரஸ் பாதிப்பு என்பது உயிரிழப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். வீட்டுக்குள் முடங்கிவிட்டால் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் வெறுமே அமர்ந்திருக்க முடியாது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

எனவே, வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பணிகள் நடைபெற்றன. உணவுகள், மருந்துகள் உட்பட தேவையான பொருள்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டன.

கொரோனா பாதிப்பால் சீனாவில் ஒரே நாளில் 150 பேர் கூட உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், மார்ச் 12-ம் தேதி உயிரிழப்பின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக மாறியது. தொற்றும் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளால் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் தற்போது காலியாகத் தொடங்கியுள்ளன. அரசின் சரியான, வேகமான நடவடிக்கைகளும், மக்களின் ஒத்துழைப்பும்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு