Published:Updated:

கொரோனாவை வென்ற நியூசிலாந்து!

ஜெசிந்தா ஆர்டன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெசிந்தா ஆர்டன்

டாக்டர் சசித்ரா தாமோதரன்

கொரோனாவை வென்ற நியூசிலாந்து!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

Published:Updated:
ஜெசிந்தா ஆர்டன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெசிந்தா ஆர்டன்
“நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்றாலும், எதிர்காலம் குறித்த பாதுகாப்பு உணர்வுடனும் இருக்கிறோம்.”

-கொரோனாவைத் தனது நாட்டில் முழுமையாகக் கட்டுப்படுத்திய பின் நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியது இது.

சமீபத்தில், தனது கடைசி கோவிட் பாதிப்பாளரையும் டிஸ்சார்ஜ் செய்ததுடன், கடந்த இரண்டு வாரங்களாக புதிய கோவிட் நோய் பாதிப்பாளர்கள் கண்டறியப்படவில்லை என்பதால், நான்கு கட்டங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது நியூசிலாந்து. கோவிட் ஜீரோ என்று உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நியூசிலாந்துதான் உலகின் சமீபத்திய பரபரப்பான செய்தி. நியூஸிலாந்தின் இரண்டாம் பெரிய நகரமான Dunedin-ல் நடந்த ரக்பி போட்டியில் 20,000 ரசிகர்கள் ஆரவாரத்துடன் கலந்துகொண்ட வீடியோக்களைப் பார்க்கும் போது, பொறாமையும் இயலாமையும் ஒருசேர நம்மைத் தொற்றுகிறது. நியூசிலாந்தில் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று என்பதில்தான் இருக்கிறது நமக்கான படிப்பினை.

ஜெசிந்தா ஆர்டன்
ஜெசிந்தா ஆர்டன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூசிலாந்து... பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பசுமைத் தீவின் மொத்தப் பரப்பளவு 2,60,000 சதுர கி.மீ. உத்தரப்பிரதேச மாநிலத்தைவிடச் சற்றுப் பெரிது. மக்கள் தொகையோ வெறும் 47 லட்சம்.

மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் முதன்முதலாக கொரோனா நோய் கண்டறியப்பட்டது பிப்ரவரி மாதத்தில். ஈரான் நாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் ஆரம்பித்த நோய்த்தொற்றால் பாதித்தவர்கள் இன்றுவரை 1,154 தான்... உயிரிழப்பு 22.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடல் சூழ்ந்த எல்லைகள், குறைந்த மக்கள் தொகை, தனிமனித இடைவெளி ஆகியவைதான் நியூசிலாந்தைக் கொரோனாவிலிருந்து வெல்ல உதவினவா? நிச்சயமாக இல்லை. நோயைக் கட்டுப்படுத்தும் வியூகத்தை அமைத்துத் தந்த அரசாங்கம்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் அந்நாட்டு மக்கள். அதுதான் எலிமினேஷன் ஸ்ட்ராடிஜி (elimination strategy) மார்ச் 15 ஆம் தேதியன்று கொரோனா எண்ணிக்கை நூறைத் தொடும்போது, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், “நாம் இனி துரிதமாகவும் கடினமாகவும் செயல்பட வேண்டும்” என்று கூறி, ஊரடங்கு எனும் பிள்ளையார் சுழியைப் போட்டார். தீவிர ஊரடங்கு நான்கு கட்டங்களாக அங்கு அமல்படுத்தப்பட்டது. Bubble concept என அழைக்கப்படும் அந்த நிலைகளில் நான்காவது கட்டத்தில் மிகவும் தீவிரமான கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருந்தன. மருத்துவ உதவி, உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளையும் முழுமையாக முடக்கியது அரசு.

கொரோனாவை வென்ற நியூசிலாந்து!

ஆனால் ஊரடங்கிற்கு முன்பாக நாட்டின் குடிமக்களுக்கு , “கொரோனா இல்லையென்றாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கொரோனாவால் தாக்கப்பட்டதுபோல உணருங்கள். தனித்திருங்கள். உங்கள் ஒத்துழைப்பை நம்பியே இந்த நாடு உள்ளது. கொரோனாவிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம்” என்று தனித்தனியாகச் செய்தி அனுப்பி மனத்தளவில் பங்கெடுக்க வைத்தது நியூசிலாந்து அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது வெளி எல்லைகளை இறுக்க மூடிக்கொண்டு வெளிநாட்டவர்களைத் தவிர்த்த நியூசிலாந்து, உள்ளே தனது ஊரடங்கை இறுக்கிப் பிடித்து நோய்ப் பரவலைத் தவிர்க்க ஆரம்பித்தது. ‘கொரோனா ட்ராக்கர்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அனைவரையும் கண்காணித்தது.வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை 14 நாள்கள் க்வாரன்டீன் செய்தது. கூடவே சோதனைகளை அதிகரித்தது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கண்டறிந்து, சிகிச்சையளித்து அவர்களைக் குணப்படுத்தும் அதே நேரத்தில், அவர்களின் தொடர்புகள் ஒவ்வொன்றையும் தேடி, அவர்களைத் தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பாதுகாப்பு வலையின் ஒவ்வொரு கண்ணியையும் அன்பு மற்றும் நம்பிக்கையால் மக்களிடையே வலுவாக்கியது நியூசிலாந்து.

இப்படி மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு வெற்றியடைய, ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் நிலைக்கும் மே மாதத்தில் இரண்டாம் நிலைக்கும் படிப்படியாக முன்னேறி, தற்போது பூஜ்ஜியம் எண்ணிக்கையுடன் முதல் கட்டத்திற்கு முன்னேறி ஊரடங்கை ஜூன் எட்டாம் தேதி முதல், முற்றிலும் தளர்த்தவும் செய்துள்ளது.

ஆரம்பித்த வேகத்தில் அதிகரித்த நோய்த்தொற்று நீர்க்குமிழிகள்போலக் குறையக் காரணம், நியூசிலாந்து பின்பற்றிய bubble concept-ம் அதன் வெளிப்படைத்தன்மையும்தான் என்கின்றனர் நியூசிலாந்தினர். லாக்டௌன் ஆரம்பித்தது மார்ச்சில் என்றாலும், அதற்கான முனைப்புகள் ஆரம்பித்தது ஜனவரியில். சீனாவில் நோய் பரவிய செய்திகள் வரத் தொடங்கியபோதே நாடு தன்னைத் தயார்படுத்திக் கொண்டது என்கிறார் சுகாதார அமைச்சரான டேவிட் க்ளார்க்.

விரைவில் நோயைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக மீட்பது என்பதை நியூசிலாந்து அரசு உணர்ந்திருந்தது. அதற்காக உலகிலேயே அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொள்ள அனைத்து உபகரணங்களையும் தயார்நிலையில் வைத்துக்கொண்டது.

ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து செய்திகளைத் தொலைக்காட்சியிலும் சமூக வலைதளங்களிலும் அனுப்பியதோடு, குறுஞ்செய்திகளாக ஒவ்வொருவரையும் சென்றடையச் செய்தது. லட்சக்கணக்கான விழிப்புணர்வு போஸ்டர்கள், ஆயிரக்கணக்கான காணொலிகள் எனத் தொடர்ந்து செயல்பட்டது செய்தித் தொடர்புத் துறை.

“இது ஒரு தொய்வில்லாத கூட்டு முயற்சி கண்ட வெற்றி” என்று கூறும் ஜெசிந்தா, லாக் டௌன் காலத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை எவ்வாறு கழித்தார் என்பதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். லாக்டௌனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டியதுடன், அதன் அழுத்தம் மக்கள் மனதைச் சென்றடையா வண்ணம் பார்த்துக் கொண்டார்.

இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றவுடன் அதே புன்னகையுடன், அதே புத்துணர்ச்சியுடன் தன் மகளுடன் நடனமாடி இதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்றும் ஒரு தாயைப் போல தன் மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். மசூதியில் ஒரு தீவிரவாதி அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றபோது, அவன் எந்த மதம் எனச் சொல்ல மாட்டேன் என உறுதியுடன் இருந்த ஆர்டனை உலகமே பாராட்டியது. தற்போது, மீண்டும் தானொரு உலகத் தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக நாடுகள் அனைத்தும் நியூசிலாந்து நாட்டின் தலைமையைப் பாராட்டும்போதும்...

“இனிவரும் நாள்களில் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், பொறுப்பு மிகுந்த என் நாட்டு மக்களை நினைக்கும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது..!” என்று புன்னகைக்கிறார் ஜெசிந்தா.

நியூசிலாந்து ஒரு சிறிய நாடு; குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்பதல்ல விஷயம். மக்கள் அரசை நம்புகிறார்கள். அரசு மக்களை நம்புகிறது. அவர்கள் திட்டம் வகுக்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, அதனைச் செயல்படுத்துகிறார்கள்.

ஆம்... இந்த கோவிட் ஜீரோ என்னும் நியூசிலாந்து நமக்கு ஒரு சின்ன மாடல். அதை அப்படியே பின்பற்றினால் நாமும் இந்த உலகுக்கு ஒரு பெரிய மாடலாய் மாறி உதாரணமாக இருப்போம். அதற்கு அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி, துடிப்பாய்ப் பொறுப்பாய்ச் செயல்படுத்தும் பொதுமக்களாகிய நாம்தான் முக்கியக் காரணியாக இருக்க வேண்டும்.

கோவிட் ஜீரோ இந்தியாவை உருவாக்குவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism