Published:Updated:

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சலுகைகள்... சிறப்பான செயல்பாடுகளால் கொரோனாவை வென்ற தைவான்!

சீனா - தைவான்
சீனா - தைவான்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் அண்டை நாடான தைவான் வெற்றி கண்டுள்ளது. தைவான் கொரோனாவை வென்றதைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக வரலாற்றை பின்வரும் சந்ததியினர் படிக்க நேர்ந்தால், அதில் 2020-ம் ஆண்டு அதிமுக்கியம் பெற்றதாக இருக்கும். இயற்கை எனும் மாபெரும் சக்தி மனிதனிடம் தன் வல்லமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பெரும் வல்லரசுகள் எல்லாம் இந்த வைரஸின் தாக்குதலால் இருளில் வீழ்ந்துகொண்டிருக்க, சின்னஞ்சிறு ஒளிக்கீற்றுகளாய் நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கின்றன சில நாடுகள்.

தென்கொரியா, சிங்கப்பூர், கனடா, கியூபா, தைவான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது வல்லரசு நாடுகளையும் வளரும் நாடுகளையும் வாய் பிளந்து பார்க்க வைத்திருக்கிறது. முக்கியமாக சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் அமைந்திருக்கும் தைவான் இந்த நோய்க்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் பிரமிக்கவைக்கின்றன. அவற்றை அறிந்துகொள்வதும் அதன் வழிமுறைகளைப் கடைப்பிடிக்க முயற்சி செய்வதும் அவசர அவசியம்.

தைவான்
தைவான்

அதிலும் உலகின் 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) உறுப்பு நாடாகக்கூட தைவான் நாட்டை இணைத்துக்கொள்ள மறுத்து வரும் நிலையில், இந்தச் சாதனை எல்லோருக்குமான பொதுப்பாடமாக முன் வைக்கப்படுகிறது. தைவானில் வாழும் 23 மில்லியன் மக்களை சீனாவின் அரசியல் பலத்தினால் அங்கீகரிக்காமல் இருக்கும் WHO, செய்யத் தவறியது என்ன... எல்லாத் தடைகளையும் மீறி தைவான் செய்துகொண்டிருப்பது என்ன?

சற்று விரிவாகப் பார்ப்போம்... அதற்கு முன் தைவானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு...

தைவான் - சீனாவுக்கு அருகில், கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஒரு தீவு நாடு. சுமார் 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 23 மில்லியன் (2.3 கோடி) மக்கள் தொகையும் உடைய நாடு. இது சீனாவின் ஒரு பகுதியா அல்லது தனி நாடா என்ற சர்ச்சைகளுக்குள் இன்றளவும் சிக்கியிருக்கும் ஜனநாயக நாடு. சீனா அந்த தேசத்தின் மீது உரிமை கோருகிறது. ஆனால், தைவான் தனித்திருக்கிறது. சீனாவிடம் பணிய மறுப்பதன் காரணமாகவும், சீனாவின் தலையீட்டின் பேரிலும் உலக அரங்கிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது தைவான்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளும் தைவானை ஒரு தனிநாடு என அங்கீகரிக்க மறுக்கின்றன. சீனா உறுப்பினராக அல்லாத சில சர்வதேச அமைப்புகளில் மட்டுமே தைவான் அங்கம் வகிக்கிறது. ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் தைவான் என்ற பெயரில் இல்லாமல் சைனீஸ் தைப்பேய் (Chinese Taipei) எனும் பெயரில்தான் பங்கேற்கிறது. சர்வதேச நிகழ்வுகளில் தைவான் தனிக்கொடியோ, தேசியகீதமோ பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தனைக்கும் காரணம் சீனாவின் சர்வதேச பலம். தைவான் விஷயத்தில் ஐ.நா உட்பட அது சர்வதேச அளவில் கொடுக்கும் அழுத்தம்.

இப்படி அரசியல்ரீதியாக மட்டுமின்றி, மனிதாபிமான அடிப்படையில் கூட தைவான், சீனாவால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என்பதே உலக அரசியல் பார்வையாளர்களின் கருத்து. போலி தகவல்கள் பரப்புவது முதல் ராணுவ அச்சுறுத்தல் வரை அத்தனை இன்னல்களையும் தைவானுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது சீனா. முக்கியமாக 2003-ம் ஆண்டின் SARS வைரஸ் பரவுதலின் போதும் கூட, பல முக்கியமான மருத்துவத் தகவல்களை தைவானுக்குக் கொடுக்க மறுத்தது சீனா. இந்தக் கசப்பான அனுபவங்களால், அடுத்த அசாதாரணச் சூழலை மிக எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராகி இருந்தது தைவான்.

தைவான்
தைவான்

2003-ம் ஆண்டுக்குப் பிறகு, அங்கு தேசிய சுகாதார சிறப்புக் குழு (National Health Command Center - NHCC) ஒன்றை கட்டமைத்தது தைவான். அந்த அமைப்பு கொரோனாவுக்கு எதிரான தைவானின் போரை நேரடியாக கையிலெடுத்தது. கொரோனா அறிகுறி தென்பட்ட முதல் ஐந்து வாரங்களில் இந்த அமைப்பு, நோய் கட்டுப்படுத்த பிறப்பித்த உத்தரவுகளின் எண்ணிக்கை 124. சீனாவில் வைரஸ் பரவுவது பற்றி கண்டறியப்பட்ட உடனேயே, தைவான் அரசு முழுவதுமாக பொறுப்பெடுத்துக்கொண்டது.

இந்த இக்கட்டான சூழலில் தைவான் அரசு எடுத்த முடிவுகளும், முயற்சிகளும் அபாரமானவை. ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் தன்னுடைய குழுவை வழிநடத்தி இசைநிகழ்வை நடத்துவது போல, தைவான் அரசு இந்தப் பிரச்னையை கையிலெடுத்து அதன் அத்தனை துறைகளையும், எல்லா பலத்தையும் ஒன்றிணைத்து ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது. நாட்டின் அனைத்து துறைகளும் இந்தக் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்கின்றன. உதாரணத்துக்கு மாஸ்க் உள்ளிட்ட அவசிய உபகரணங்களை நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு அந்நாட்டின் தபால் துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தயாரிக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு துறையும் அதன் திறனுக்கு தகுந்த வழியில் பங்காற்ற அரசு வழிநடத்துகிறது.

`அதிபரின் வெறுப்பு பேச்சு... சவக்குழிகள்... கொரோனா அச்சுறுத்தல்!’ -பிரேஸிலில் என்ன நடக்கிறது?

அரசு இப்படி தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும், அதை மக்கள் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது முக்கியம். அதற்குக் காரணம் அந்நாட்டு அரசு மக்களிடம் கடைப்பிடித்த வெளிப்படைத்தன்மை. அரசின் எல்லா நடவடிக்கைகளும் மிக வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தி, நடப்பவற்றை அதிகாரிகள் மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். பிரதமர் அலுவலகத்திலிருந்து நோயின் தீவிரம், அதை கட்டுப்படுத்த எடுக்கச் செய்ய வேண்டிய முயற்சிகள், அரசு எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து ஆக்கபூர்வமான தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

தைவானில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது ஜனவரி மாதம் 21-ம் தேதி. ஏப்ரல் 1-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, சுமார் இரண்டு மாதங்களில் அங்கு 329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐவர் மரணமடைந்திருக்கிறார்கள். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவுக்கு எதிராக தைவான் வெற்றி கொண்டிருப்பதற்கு இந்தத் தரவுகளே சாட்சி.

தைவானில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள்
தைவானில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள்

இத்தனைக்கும், தைவான் புவியியல் ரீதியாக சீனாவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது, இரு நாடுகளுக்கும் இடையேயான தொலைவு சுமார் 80 மைல்கள் மட்டுமே. சீனாவில் தைவான் நாட்டை சார்ந்த சுமார் நான்கு லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். சீனாவோடு மிக அதிகமான விமானப் போக்குவரத்து கொண்ட நாடு தைவான். கலாசாரம், உணவுப் பழக்கம் என பல விஷயங்களில் சீனாவைப் போன்றே இருக்கும் நாடு தைவான். இருப்பினும் சீனாவுடனும், உலக நாடுகளுடனும் ஒப்பிடுகையில் தைவான் வெகுவாக கொரோனா பாதிப்பை தவிர்த்திருக்கிறது.

கொரோனா பற்றிய தகவல் தெரிந்த மறுகணமே களத்தில் இறங்கிவிட்டது தைவான். டிசம்பர் 31 முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் எல்லாம் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நோய் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க கட்டமைப்புகள் நிறுவப்பட்டன. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். தேவையான மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதில் உடனடியாக கவனம் செலுத்தி அதைச் செயல்படுத்தியும் விட்டது தைவான். அதுமட்டுமில்லாமல், போலியான தகவல்கள் பரப்பினால் அங்கு கடுமையான தண்டனை உண்டு. தொற்றுநோய் பரவுதல் தடுப்பு சட்டத்தின் கீழ் அதற்கென தனி சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. அதன் வழி மக்களுக்கு சரியான தகவல்கள் மட்டுமே கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நோய் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த சட்டம் மிகவும் உறுதுணையாக இருந்தது.

தைவான் உலகின் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பு உடைய சில நாடுகளில் ஒன்றாகவுள்ளது. தனிமனிதனுக்குத் தேவையான அனைத்து மருத்துவத் தேவைகளையும் அரசு பூர்த்தி செய்கிறது. அதேபோல மருத்துவ ஆராய்ச்சிகளிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறது. கொரோனா தொற்றுக்குப் பயந்து மக்களின் முழு முடக்கத்தை (lockdown) அறிவிக்கவில்லை தைவான். நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தனிமைப்படுத்தப்படுவதால் அங்கு மக்கள் இயல்பாக நடமாடத் தடையில்லை. அந்தத் தனிமைப்படுத்தலுக்கு யாரை உட்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிய அந்நாட்டின் தேசிய மருத்துவ காப்பீட்டில் பதிந்தவர்களின் தரவுகள், வெளிநாட்டுப் பயணங்களைக் கண்காணிக்கும் இம்மிகிரேஷன் துறை தரவுகள், சுங்கத் துறை தரவுகள் இப்படி எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பிரமாண்டமான தரவுத்தளம் (database) உருவாக்கப்பட்டது. அதன்வழி பாதிக்கப்பட்ட மக்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பயண வழித்தடமும் உடனடியாக கண்டறியப்பட்டது.

தைவான்
தைவான்

முகமூடிகள் தயாரிக்கும் பல இயந்திரங்களை அரசே வாங்கியது. இவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட உகந்த கட்டுமானம் உள்ள தொழிற்சாலைகளை அடையாளம் கண்ட அரசு, தயாரிப்பு இயந்திரம், பணியாட்கள் அனைத்தும் வழங்கியது. இன்று தைவானில் இருக்கும் 23 மில்லியன் மக்களும் தினம் முகமூடி பயன்படுத்தினால் கூட அவர்களிடம் இன்னும் தேவையான அளவுக்குப் போதுமான முகமூடிகள் இருக்கின்றன. இவையெல்லாம் ஜனவரி மாத இறுதிக்குள் செய்யப்பட்டதுதான் முக்கியமான விஷயம்.

இதிலிருந்தெல்லாம் ஒருபடி மேலே சென்று, டிசம்பர் 31-ம் தேதி ஏதோ ஒரு புதிய வைரஸ் பரவுவதைக் கண்டது தைவான். (அது கொரோனா என்பதைப் பின்னர் உறுதிசெய்தது.) அப்போதிலிருந்தே சீனாவின் வுகானிலிருந்து வரும் நேரடி விமானங்கள் தைவான் அடைந்ததும், விமானத்திலிருந்து யாரையும் இறங்க விடாமல், தைவான் அதிகாரிகள் விமானத்துக்குள்ளேயே சென்று, பயணிகளிடம் நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்று சரிபார்த்தனர். நோய் பரவுதல் தீவிரமானதும் பல நகரங்களுடன் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அமேசான் காட்டிற்குள் புகுந்த கொரோனா வைரஸ்... ஆபத்தில் பழங்குடிகள்!

நோய் பரவ வாய்ப்பிருப்பவர் தனிமைப்படுத்தலை திறம்பட செய்ததால், அங்கு இதுவரை சமூகப் பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாலும், வெளிநாடுகளில் இருந்த பலர் தைவான் நாட்டுக்கு திரும்பியிருப்பதாலும் தற்போது இங்கு கடந்த ஒரு வாரமாகதான் social distancing எனச் சொல்லப்படும் சமூக விலகல் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. மக்கள் கடந்த மூன்று மாதங்களாக அரசுக்குப் போதுமான ஒத்துழைப்பு தருவதால், இந்த ஒரு மீட்டர் சமூக இடைவெளி மக்களால் கடைப்பிடிக்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமன்றி, போதுமான அளவு முகமூடிகள் இருப்பதாலும், அதை மக்கள் முறையாகப் பயன்படுத்துவதாலும், சமூகப் பரவல் இருக்காது என்று தைவான் அரசு தெரிவித்திருக்கிறது.

ஜனவரி மாதமே பள்ளிகளுக்கு 6.45 மில்லியன் முகமூடிகளை வழங்கிவிட்டது தைவான் அரசு. இதுமட்டுமன்றி 25,000 காய்ச்சல் கண்டறியும் கருவிகளும், 84,000 லிட்டர் சானிடைஸர்களும் வழங்கப்பட்டது. பள்ளியில் ஒருவருக்கு தொற்று அறிகுறி இருந்தால் மொத்த வகுப்புக்கும் 14 நாள் விடுப்பு அளித்து மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தைவான்
தைவான்

கொரோனா பாதிப்பால், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய அரசு ஊழியர்களுக்கு 14 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகிறது தைவான் அரசு. 2 பில்லியன் அமெரிக்கா டாலர்கள், இந்த நோய் பரவல் காரணமாக பாதிப்படைந்த வர்த்தக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டது. 6.66 மில்லியன் கொரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், தயாரிப்பதற்கும் முதலீடு செய்யப்பட்டது. தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பாக, வேலை இழந்த தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்துக்கு 630 அமெரிக்க டாலர்கள் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிப் பேருந்துகள் முதல் ரயில்கள் வரை மக்கள் பயணிக்கும் அனைத்து பொது வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு முறையாக சுத்திகரிக்கும் பணிகள் மும்முரமாக செய்யப்பட்டன.

அதேபோல தைவான் உணவுமுறையைக் குறிப்பிடும்போது ஓர் விளக்கம் அவசியமாகிறது.

சீனர்களின் உணவுமுறைக்கு ஒத்தது தைவான் நாட்டு மக்களின் உணவுமுறை, கொரோனா அச்சத்தில், சீனாவின் exotic meat எனப்படும் வித்தியாசமான இறைச்சிகளான நாய், பூனை உள்ளிட்ட பல இறைச்சிகள் தடை செய்யப்பட்டதாலும், அவை சீனர்கள் மற்றும் தைவான் மக்களின் தினசரி உணவுமுறை இல்லை என்பதாலும், நேரடியாக உணவிலிருந்து தைவான் மக்களுக்கு இந்நோய் பரவவில்லை.

கொரோனா வைரஸ் பரவுதலுக்கு சீன மக்களின் இறைச்சி தேவைக்காக பெருமளவில் நடத்தப்பட்ட விலங்குப் பண்ணைகள் காரணம் எனவும், அந்த நோய் வௌவால்களிடம் இருந்து பண்ணைகளுக்குப் பரவி, நமக்கு கோழியிடம் இருந்து, பன்றிகளிடம் இருந்தும் காய்ச்சல் பரவுவதுபோல, அந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து சீனர்கள் உட்கொண்ட சில உணவுகளின் வழி மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றே ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மாறாக அவர்கள் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு நேரடிக் காரணம் இல்லை. அதற்கு அதே உணவுமுறை கொண்ட தைவானில் குறைவான நோய் பரவியிருப்பதே சாட்சி.

அரசு நம்பியதைப் போல அடிப்படை முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகள், சோஷியல் டிஸ்டன்சிங் (Social Distancing) எனப்படும் விலகியிருத்தல் அங்கு ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தக் கொரோனா போரில் தன் பொருளாதாரத்தையும் இழந்துவிடவில்லை தைவான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்காமல் தன்னை காத்துக்கொண்டது தைவான். சில குறுகிய கால பாதிப்புகளுக்குமான தீர்வுகளையும் வழங்கிக்கொண்டிருக்கிறது தைவான்.

தைவான் - சீனா
தைவான் - சீனா

கொரோனா அச்சத்தால் மக்கள் வெளிவருவது குறைந்து, உணவகங்கள் நஷ்டத்தை சந்தித்ததால், உணவகங்களுக்கு சென்று உணவருந்தினால் அவர்களின் மொத்த கட்டணத்தில் (bill) ஒரு பகுதியை அரசு தரும் என அறிவித்துள்ளது.

இன்னும் இதுபோல பலவிதமான பணப்பரிவர்த்தனையை அதிகமாக்கும் நடவடிக்கைகளுக்காக சிறப்பு பட்ஜெட் ஒதுக்க தைவான் அரசு ஆலோசித்துவருகிறது. இப்படி நோய் கண்டறிவது, தடுப்பது, சிகிச்சையளிப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது தைவான்.

அடுத்த கட்டுரைக்கு