Published:Updated:

`என் மூலமாக வைரஸ் பரவுவதை விரும்பவில்லை!’- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஆப்பிரிக்க இளைஞர்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`கொரோனா வைரஸை ஆப்பிரிக்காவுக்கு எடுத்துச் செல்ல நான் விரும்பவில்லை' என சீனாவில் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுவந்த ஆப்பிரிக்க மாணவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் தங்கியுள்ளனர். அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆப்பிரிக்க நாடான கேமரூனைச் (Cameroon) சேர்ந்த 21 வயது இளைஞர் கேம் (Kem Senou Pavel Daryl). சீனாவின் ஜிங்ஜூ (Jingzhou) பகுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் 13 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

“இருமல் சத்தம் நரகத்தின் கதவுகளைத் தட்டுவதாக உணர்ந்தேன்!” - கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சீன இளைஞர்

இதுகுறித்து பேசியுள்ள கேம், ``நான் முதன்முறையாக மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னுடைய மரணம் குறித்தும் என்னுடைய மரணம் எப்படி நிகழும் என்பது குறித்தும்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

நான் சிறுவனாக இருந்தபோது மலேரியா நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்த நினைவுகளுக்குள் மூழ்கிவிட்டேன். 13 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். படிப்பு நிறைவடையாமல் நான் என்னுடைய நாட்டுக்குத் திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நான் என் வீட்டுக்குச் செல்வதற்கான தேவை எனக்கு ஏற்படவில்லை. என்னுடைய மருத்துவச் செலவுகளை சீன அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. என் மூலம் இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவுவதை நான் விரும்பவில்லை” என்றார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களில் Kem Senou Pavel Dary தான் இந்த நோய் தாக்கத்தினால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரும் குணமடைந்துவிட்டார். சீனாவில் மருத்துவம் படிக்கும் ஜாம்பியா (Zambia) நாட்டைச் சேர்ந்த சலீமா என்ற மாணவி ஆப்பிரிக்க அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறார். `மற்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்டுச் செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆப்பிரிக்க அரசுகள் எங்களுக்கு உதவ வேண்டும்' என்கிறார்.

இதுகுறித்துப் பேசிய சலீமா, ``நாங்கள் ஆப்பிரிக்காவின் பிள்ளைகள். ஆனால், ஆப்பிரிக்க அரசாங்கம் எங்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நான் தனிமையில்தான் இருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். உறங்குவதும் சமூக வலைதளங்களில் கொரோனா பாதிப்புகள் குறித்து தெரிந்துகொள்வதிலும் என்னுடைய நாள்கள் நகர்கின்றன. சுமார் 186 ஜாம்பியா மாணவர்கள் இங்கு வுகானில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எங்களுடன் படித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள், நாடு திரும்புமாறு பணிக்கப்பட்டனர். `சீன அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்' என ஆப்பிரிக்க நாடுகள் பொதுவெளியில் கூறுவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இங்கு நிலைமை கட்டுக்குள் இல்லை. இங்கே தங்கியிருப்பது எங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது. நாங்கள் சிறந்த மருத்துவ வசதி கொண்ட ஒரு நாட்டில் தங்கியிருக்கிறோம், அவ்வளவுதான்” என வருத்தத்துடன் கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு